கவிதைகள் :-
இவை லகான் மாட்டிய
குதிரைகள் அல்ல.
ஓடுவதையே பேச்சாக்கிக்கொண்ட
கெடிகாரங்கள் அல்ல.
மன மரங்களை அசைப்பதையே
தொழிலாகக் கொண்ட
தென்றல்கள் அல்ல.
எந்த மரம் பன்னீராடுவதற்காகவும்
பொழியப்பட்ட மழையல்ல இது.
இது திக்குத் தெரியாமல்
விழிக்கும் சூறாவளி
சில சமயங்களில்
இது நாவலே இல்லாமல்
எழுதப்பட்ட அணிந்துரை.
சில சமயங்களில்
இது மலையே இல்லாமல்
செதுக்கப்பட்ட குடைவரைக் கோயில்
சில பொழுதுகளில்
இது காய்க்கவும் கனிக்கவும்
தெரியாத கல்யாண முருங்கை
சில வேளைகளில்
வானத்திலேயே பறந்து
மேகத்தை மட்டுமே
முத்தமிட அலையும்
பறவையல்ல இது
சிலநேரம் இது
காலொடிந்து குளறும்
ஊமைப்பறவையின் குரல்வளம்.
இவை மூளையின்
விண் விண் தெறிப்புகளுக்கு
வினா அரிப்புக்களுக்குச்
சொரிந்து கொடுக்கும்
கட்டைச் சுவர்கள்.
இது குடமறுந்த வீணையில்
இசைக்கப்படும் நாதமல்ல.
இது ஆறுகளால்
வரிக்கவியெழுதப்பட்டுக் கொண்டிருக்கும்
மண் தாள்கள்.
வயல்களைப் ப்ரசவிக்க
மட்டுமல்ல. புல்மண்டிய காடுகளையும்
பொதித்து வைத்திருக்கும்
சாணித்தாள்கள்.
கோபுரங்களுக்கு நடுவே கிட்டிய
குடிசைகளின் அற்புத தரிசனங்கள்
நிதரிசனங்கள்.
இவை வளைந்து கொடுக்கக்கூடிய
கோரைகள்
ஆடுபுலி ஆட்டம் ஆடும்
தென்னைகள்.
இவை கைகோர்த்து ஓடிவரும்
ரயில்பெட்டிகள்
இவை மணப்பதே மொழியாகிப்போன
மலர்கள்.
4 கருத்துகள்:
அருமையான கவி நல்ல வார்த்தைகள் புனைந்தவிதம் அழகு.
தென்றல் போல மனதை அசைக்கிறது....
நன்றி கில்லர்ஜி
நன்றி தனபாலன் சகோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))