சுற்றிலும்
வெளிச்ச வலைகளைப் பின்னிக்கொண்டு
நிமிரந்த நன்னடை பழகிக்கொண்டு
ஆகாயத்துள் கூர்மூக்கைச் செருகித் துழாவி
வழுக்கைத் தலையைப் பெருமிதமாய்ப்
பார்த்துத் திரியாதே.
கருமையின் நிதர்சனங்கள்
அருமையானவை.
பளீரிடும் வெள்ளைகளைப் போல
வெளிவேஷம் போட
அவை அறியாதவை.
தூரத்து மரங்கள் கருமை
ஆக்ரோஷமாய்க் கோபப்படும்
கடல் கருமை
கண்விழி கருமை
கூந்தல் கருமை
ஏக்கம் பிடித்த மனம்
கருமை
கருமையை
உருசிக்கக் கற்றுக் கொள்
உடுக்கை இழந்தவன்
கைபோலக் குளிர் உன்னைக்
இருட்டுள் புதைத்துக்
கிச்சுக் கிச்சு மூட்டுவது
சூடாய்ப் பொரிந்து
சுட்டுக் கருக்குவதல்ல.
நா வறண்ட தோல்வெடித்த
பிண்டமலைகளாய்ப்
பிரித்துப் போடுவதல்ல இது.
எத்தனை சுயபரிமாணங்கள்
சுய சோதனைகள்.
திரும்பத் திரும்ப
சுயபோதனையைக் கேட்டு
மறந்து போகும்
மக்கு மாணவன் நீ.
பக்கத்திருந்தும்
தொட்டுக்கொள்ள முடியா
புருவமும் கண்ணுமாய்
இருந்தாலென்ன
ஏங்காதே
ஏக்கப்பட்டுக் கிடப்பதை
உதையாதே
சின்னப்பிள்ளை
ஏரோப்ளேனை நினைத்துக்
கரடிபொம்மையைக் கக்கத்திலிடுக்கி
விரல்சூப்பித் தூங்கப் போவதாய்
நீ கிடைத்தவற்றுக்குச்
சந்தோஷப்பட்டுவிடு
பகல்கனவு காணாதே
பகல் வெறுத்தற்குரியது
பகல் வானில் வல்லூறுகளும்
எதிர்க்கும் சூரியத் தகிப்பும்
குத்திகுதறும் நரர்களும் நிறைந்தது.
இருட்டு உன் பாதம்படக்
காத்திருக்கும் நண்பன்
இருப்பதை மறைப்பதில்லை
கொடுக்கவும் தயங்குவதில்லை
அசிங்கம் பிடித்த அழுக்குகள்
எதாயிருந்தாலும்
சிறிதுநேரம் சாகச் செய்யும்
வலிமை படைத்தவன்
நம்பிக்கைத் துரோகம் பண்ணாமல்
நட்சத்திரங்களையாவது
உனக்காய்ப் பொதித்திருப்பான்.
3 கருத்துகள்:
அருமை...
சுயபரிசோதனை செயலில் இருந்தால் நலமே...
ஆம் தனபாலன் சகோ
கருத்துக்கு நன்றி
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))