மண் வாசனைகள். :-
சுதந்திரத் திருநாடு. இதில் நாட்டைத் தவிர சுதந்திரம் சுருண்டு ஒடுங்கி மடிந்தே போய்விட்டது.
திருவை யாரோ திருடிக்கொண்டுவிட்டார்கள்.
இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம். நாடு என்ற
பெயரில் பதுக்கல், கலப்பட வியாபாரிகள், ஊழல் மலிந்த ஜனநாயகமும், கடத்தல் கொள்ளையர்களும்,
சுரண்டல் அதிகாரிகளும் பட்டினிப் பாட்டாளிகளும் மலிந்து திரியும் இருட்டுக்குகைதான்
இந்த மணித்திருநாடு.
‘தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்.
‘ என்று நீ ஏன் தான் பாடி வைத்தாயோ. இன்று மக்கள் அழிக்கிறார்கள்.
எதை. தனியொரு மனிதனையேதான்.
ஏனெனில் அவன் இல்லாமற் போனால் உணவைப் பற்றிக் கவலையில்லையல்லவா..
சட்டைக்காரன் காலத்தே
எட்டையப்பன் போன்ற குட்டையுள்ளம் படைத்தவர்கள், நாட்டையாளும் ஆசையாலே வீரத்தை சட்டை
செய்யாத மடையர்கள் போல தொழிலாளர் தலைவனே முதலாளிகளின் கால் தடவி, கைபிடித்து, கைப்பிடிக்குள்
பணமுடிப்புப் பிடித்து, கலர் காகிதங்களுக்கு அடிமையாகி குட்டிச் சுவர்க்கழுதையாகி,
பட்டிகளில் தொட்டிகளில் கட்டிக் கிடக்கும் பட்டினி கிடக்கும் மட்டி மந்தைகளிடம் ஆடு
தொடா இலையை ஆசை காட்டி இட்டுச் செல்கின்றான். குள்ளநரிக் கூட்டத்துக்கு விருந்து படைக்க.
கால் வயிற்றுக்குப் பாடல் சொல்லி இரையும் கும்பல், பால் இல்லாமல் வீறிட்டழும் சேய்ச்
செல்வம், என்றும் பசி, எப்போதும் பசி, பசி, பசி, பசி மயம். இதில் படிப்புக்கு வழியேது.
நன்கு உடுக்க வழியேது.
தங்கள் உரிமைகளைப் பற்றிப் பேச ஒரு பேச்சாளனைத் தேர்ந்தெடுத்து
அனுப்பினார்கள். அவனுக்கு ரூபாய் ஐயாயிரம் வாடகை. பேச்சாளன் விளாசினான் பிரமாதமாக.
பாட்டாளி வர்க்கம் சிந்தும் ஒவ்வொரு வியர்வைத்துளியும்தான் நெல்மணிகளாகிப் புன்னகை
புரிகின்றன. என்று. அவனுக்கு அமோகக் கைதட்டல்கள். ரோஜாப்பூமாலைகள் பணமுடிப்பு.
கூட்டம்
முடிந்து இறங்கி வரும்வேளையில் எவனோ ஒரு உழைப்பாளி இடித்துவிட்டதால் அவள் வியர்வை பட்டு
தன் அங்கவஸ்த்ரம் பாழாகிவிட்டதாயும் வியர்வை நாற்றம் பொறுக்கமுடியவில்லை என்று ஏகத்திட்டு.
என்றுதான் உண்மையை உணர்வானோ என் அருமை உழைப்பாளி நண்பன். அவனுக்கு என்றுமே கோபப்படத்
தெரிவதில்லையே. அது ஏனோ.
பட்டினி கிடந்தாலும் சரி. பஞ்சையாய்த் திரிந்தாலும் சரி. காந்தியடிகளின்
அஹிம்சை இங்கே வெல்ல மார்க்கமில்லை நண்பனே. நீ இப்படி இருப்பதற்குக் காரணம் ஓ . மண்
வாசனைதானோ. பிறந்த மண் தோஷம் உன்னை ஒட்டிக்கொண்டதோ.
டிஸ்கி :- 85 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))