ஸ்நேகிதன் :-
சின்ன வயதில் சிலம்பமாடிப்
புழுதிபறக்கவைத்த தெரு அது.
அந்தத் தெருப்புழுதி
எனக்குப் பிடித்த உடை.
வாலாட்டி மரமேறித்
தொம்சம் செய்து குதித்துக்
களேபரப்படுத்திய தோட்டம்..
அந்தத் தெருப்புழுதி
எனது பூஞ்சோலை.
நொண்டியத்து மண்ணைச்
சிரட்டிச்சிலுப்பிப் புரட்டிப்போட்ட
அந்தத் தெருப்புழுதி
எனது சந்தனம்.
சன்னமாய்ப் பறந்து
காற்றுடன் கல்யாணம்பண்ணிகொண்டு
ஆசீர்வாதம் வாங்க
மூக்குக்குள் நுழைந்து வணங்கித்
தும்மலைப் பரிசாகப்பெற்றுச்செல்லும்
அந்தத் தெருப்புழுதி
எனக்குச் சங்கீதம்.
மெல்ல மெல்லக்
குதிரைகளின் பாய்ச்சலாய்
மேலெழும்பி உயரத் தாவும்
அந்தத் தெருப்புழுதி
எனக்கு அலைப்பாஷை.
என் சகலமும் அதுதான்.
என் வேர் அங்கு
கிளைத்துக் கொண்டிருக்கிறது
என்று சொல்லமாட்டேன்
ஏனெனில் அதே நான்.
மகளைக்கூப்பிட்டுச்
சுத்திகரிப்புச்செய்து
ஆடை உடுத்தி
மனைவி அனுப்பினாள்.
நான் ஆசைதீர
மண்ணில் விளையாடு என்றால்
ஏனிப்படி என்னை
வித்யாசமாகப் பார்க்கிறாள்
என் மகள்.. ?
-- 84 ஆம் வருட டைரி.
-- 84 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))