அந்த வானவில் ஒரு சந்தோஷக் கனவு
தூக்கத்தில் சுகம்காட்டிவிட்டு
துடித்து எழுகையில்
வண்ணம் கலைந்துபோகும்
ஒரு அழகிய சொப்னம்
இதழ்விரிக்கும் முல்லைபோல்
மணம் வீசுவதற்குள்
வீசிய மணத்தை முகர்வதற்குள்
வாடிப்போகும் சின்ன சந்தோஷம்.
சூரிய வரவேற்பில்
மழை நாட்டியக்காரி பிடித்த
அழகிய அபிநயம்.
எந்தச் சீதையை மணக்க
எந்த ராமன் முறித்த வில் இது. ?
வரதட்சணை ராமர்கள் முறித்துப்போட்ட
பெண்களின் மனங்களோ ?
மனங்களின் தவிப்புக்களோ. ?
வண்ணக் குழப்பங்கள்
எண்ணக் கலங்கல்களாய்,
சூரியனும் மழையும் சேர்ந்து போட்ட
வண்ணக் கோலம்.
நீலக் கடலோரம்
அந்தி மாலைச் சூரிய நேரம்
பசுமைச் சோலையில்
பாடல் அரங்கேற்றமோ..
இராக ஆலாபனையோ
ஏழு ஸ்வர சிந்தனைகளோ.
கௌதமன் முறித்துப்போட்ட
அகலிகையின் மனசோ ?
கொடிப்பச்சையில் சிதறிப்போன
மகரந்தத் துணுக்குகளோ
சரிகமபதநிஸவின்
சரளிவரிசை உச்சமா. ?
அலைச்சுழிப்பின்
அவசர அரிப்பா..?
நீலப் புல்வெளியின்
குப்பைப்பூக்களா. ?
சிறகைப் பிய்த்துப் போட்ட
வண்ணத்துப் பூச்சியின்
உலர்நீளச் சிறகுகளோ.?
சாயம் உலர்த்தியும்
நீலத்துணியின்
உலராத ஓவியமோ ?
சிவன்குடித்த நீலவிஷம்
கண்டத்தில் சிக்கிக் குழம்பியதால்
நிறபேதமோ. ?
இருந்தாலும் அந்த வானவில்
ஒரு சந்தோஷக் கனவு. !
தெருவோரப் பெட்டிக் கடையின்
தேன்மிட்டாய் மாதிரி. !
-------- 84 ஆம் வருட டைரியிலிருந்து.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))