அன்னையின் கரங்களில் :-
விடியற்குளிரில்
பரிட்சைக்கு எழுந்து
காஃபி போட்டு
தலையில் விதம் விதமாய்
அலங்காரம் செய்துவிட்டு
எனக்கெனவே புதுத்துணிகள்
தம்பிகளைவிட அதிகமாய்
வாங்கிக்குவித்து
செட்செட்டாய் நகைபோட்டு
விதம்விதமாய்த் துணியலங்காரம் செய்து
காணும் பொருள்களையெல்லாம்
எனக்கெனவே வாங்கிக்குவித்து
என்னைப் பற்றிப் பெருமை பேசி
என்னையேதான் நினைத்து
வாழும் அம்மாவே. !
கோழி மிதித்துக் குஞ்சு சாகாததுபோல்
குஞ்சு மிதித்துக் கோழி சாகுமா.?
நான் சிறுபிள்ளைத்தனமாய்
இளமைத் துணிச்சலில்
உதிர்க்கும் சொற்களைப்
பொறுக்கமுடியாமல்
உன் முகம் வதங்குவதேனம்மா?
எந்நேரமும் சமையற்கட்டின்
புகையில் புகைந்து
அடுப்பில் எரிந்து
துகையலின் காரத்தில்
அல்வாவின் இனிப்பில்
நீ வெளிப்படுகையில்
என் கண்களில் உப்புநீர்.
துளிர்க்கின்றது.
உன்னுடைய கோபங்கள்
எரிச்சல்கள் ஏனிப்படி
மிதமிஞ்சிப் போகின்றன என்று
நான் வீட்டில் நினைத்ததுண்டு.
அமைதியான மாலை வேளைகளில்
உன் நினைவு இங்கே என்னை
அழைக்கும்போது நான்
தம்பிகளுக்குக் காஃபி போட்டுக்கொடுத்து
உன் வேலைப்பளுவைக் குறைக்கலாம்
என எண்ணி எழுகையில்
அழைக்கிறது டீ பெல்
ஏழரை மணிக்கு எழுந்து
டூத்பேஸ்ட் பிரஷுடன்
கூல்டாப் ஓடுகையில்
ஐந்தரை மணிக்கு என்னை எழுப்பிக்
கோலமிடவைக்கும் உன்
அன்புத்திருமுகம் தெரிகிறது.
காலையின் அவசரங்கள் உன்னை
நினைக்கவிடுவதில்லை.
மதியமும் அப்படித்தான்.
மந்தித்துப் போன சில வகுப்புகளில்
வீட்டு நினைவு மெல்ல சிந்தனையை
முட்டும்போது
நான் நீ என்ன செய்துகொண்டிருப்பாயோ
என யோசிக்கிறேன்.
என்ன செய்கிறாய் அம்மா ?
குளிப்பாயா.. அடுத்தவீட்டு
ஆனந்தியுடன் உதவியாக
பாத்திரம் கழுவி வைப்பாயா
அவர்களுக்குக் காஃபி போட்டுக்
கொண்டிருக்கிறாயா.?
அல்லது அரைலோட்டா காஃபி
கலந்து ஊற்றிக்கொண்டிருக்கிறாயோ
மரத்தடிநிழலில் அமர்ந்திருக்கிறாயா
காய்கறி நறுக்கிறாயா
அரிசி களைகிறாயா
துணி காயப்போடுகிறாயா
சாமான்களை வெய்யிலில்
காய வைக்கின்றாயா
விளக்கேற்றி சாமிகும்பிடுகின்றாயா
அப்பாவுக்கு சூப் வைக்கிறாயா
சீனா மீனா கூடப்
பேசிக் கொண்டிருக்கின்றாயா
அல்லது ஊருக்குப் போக
பாக் பண்ணுகிறாயா
அல்லது பயணம் பண்ணுகிறாயா
அல்லது என்னைப் பார்க்க வருகிறாயா
எதையாவது காணமல் போன
பொருளைத் தேடத்
தம்பிகளை மிரட்டிக்
கொண்டிருக்கிறாயா ?
அல்லது நீயும்
என்னை நினைத்துக்கொண்டிருக்கிறாயா
அம்மா. ?
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))