எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

வயோதிகம்:-



வயோதிகம்:-

அருவி நீரின் சமனப்பட்ட
சலன ஓட்டமாய்க்
கன்னச் சுருக்கங்கள்
கவியெழுதும்.
எண்ண அலைகள்
குளத்தின் தளும்பலாய்
வட்டமிடும்.
பாம்பைக் கையில் எடுக்கும்
இளங்கன்றுப் பருவத்தை எண்ணி
மாட்டின் மெல்லுதலாய்
நினைவும் அசைபோடும்.
மலையிலும் மடுவிலும்
கொம்மாளமிட்ட கால்கள்
சமவெளிநடைகளில்
துணைக்கு மூன்றாம்காலையும்
சேர்த்துக் கொள்ளும்
நினைவுகள் தடம் மாறுவதுபோல்
நடைகளும் மெல்லத் தடுமாறும்.
தான்பூத்துப் பிஞ்சுவிட்டுக்
கனிந்த பாதையிலே
தன் புதிய மொட்டுக்களையும் எதிர்பார்க்கும்.
எதிர்பார்ப்பது தவறல்ல.
மரபு மீறினாலும் அதில்
ஓர் புது மரபு இருப்பதை
ஏற்றுக்கொள்ள வேண்டுமல்லவா?
கொஞ்சம் எரிச்சற்பட்டு
மிதமாய்க் கோபம் காட்டி
நிறைய்ய அன்பு செய்து
தான் நினைத்ததை நடக்கச்செய்யப்
பிரயாசைப்படும்.
தன்னைவிடத் தன்வழித் தோன்றல்களில்
நம்பிக்கை அபிலாஷை வைத்திருக்கும்.
தான் நினைத்ததை
நடக்கச் செய்யப் பிடிவாதம் பிடிக்கும்.
குழந்தையும் இதுவும் ஒன்று.
உடம்பின் படபடப்பை மறைத்து
உள்ளத் தெம்பில் தன்னால்
அனைத்தும் முடியும் என
அடம்பிடித்துச் செய்யும்.
தன் கால்களின் தள்ளாட்டத்திலும்
புதியவர்களின் வளர்ச்சிக்கு
அஸ்திவாரம் எழுப்பிக் கொண்டிருக்கும்.
தன்னை மதிக்க தானிட்ட வேலைசெய்ய
இளமைக்கு இட்டமில்லை எனத் தெரிந்தும்
சாபப்பூ தெளிக்காமல்
தன்(னுள்ளே)னையே நொந்துகொள்ளும்.
தன்னுடலின் அணுக்களின் இறப்பிலும்
புதிய பனிப்பூக்களுக்கு வந்தனம்
பண்ணிக் கொண்டிருக்கும்.

-- 85 ஆம் வருட டைரி. 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...