எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 19 செப்டம்பர், 2015

பட்டக்கட்டாரிகள்.



பட்டக் கட்டாரிகளைத்
தூக்கித் திரிந்தே
பலமிழந்து போன
பரசுராமர்கள்.

ஆபீஸ் படிகளில் ஏறி ஏறியே
இந்த வீணையின் தந்திகள்
ஒவ்வொன்றாய் அறுந்து கொண்டன

வாழ்க்கையைப் பற்றித்
தெரிவதற்கு முன்னமே
பாரங்களைச் சுமக்கப்
பழகிக்கொண்டவர்கள்.

இந்த வீணைகளுக்குத்
தந்தி மட்டும் அறுந்து போகவில்லை
மனக்குடங்களே காற்றுவிழுங்கச்
சத்தில்லாமல் இருக்கின்றன

இந்தப் பட்டக் குடைகள்
மழைக்குத்தான் உதவ வேண்டாம்
வெட்கைக்கு விசிறியாகவாவது
ஆகக்கூடாதா

உத்யோகம் என்ற ஐந்தெழுத்து
வைத்துக்கொண்டிருக்கும்
 மாக்களுக்குக் கூடத்
திருமணம் ஆகிவிடுகின்றது.

இவர்கள் பதித்துச்சென்ற
தடங்கள் அழியாமலே இருக்கின்றன
இருப்பவர்களும் அதிலேயே
நடைபழகிக்கொண்டிருப்பதால்

இவர்கள் வெள்ளெழுத்துக்
கண்ணாடி மாட்டும்போதுதான்
வேலை என்ற இரண்டெழுத்தைப்
பார்க்க முடிகின்றது.

இவர்கள் ஆஃபீஸ் அசோகவனத்தில்
ஃபைல்களுக்கு மத்தியில் சிறையிருக்கும்
வேலைச் சீதையைத்தேடி
சர்டிஃபிகேட் வில்களைத் தொடுத்துக்கொண்டு
இண்டர்வியூ செய்யும்
மேனேஜர் இராவணனுடன்
சொற்போர் செய்யும் இராமர்கள்.

இவர்கள் ஆகுதீயில்
வெந்துகொண்டிருக்கின்றார்கள்.
இந்த நெருப்புக்குண்டங்கள்
அலுவலகங்களை வெற்றுச்
சாம்பலாக்குவதற்குமுன்
யாராவது வேலை கொடுங்களேன்.

-- 85 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...