உறங்கான்பட்டிக்
கம்மாய்ப்பக்க
டார்சு
வீட்டின்
வேப்பமரத்தடிக்
கயிற்றுக்கட்டிலில்
விரிந்து
சடைபிடித்து சிக்கலான
கூந்தல்
கோதி ஒஞ்சரித்துக்கிடக்கும்
ராசகுமாரிக்குத்
தெரியவில்லை
தனக்கும்
மந்தையனுக்குமான வாழ்வில்
பிடித்தமில்லாதது
எது என.
முகப்புத்திண்டில்
அட்டனக்காலிட்டு
சாய்ந்திருக்கும்
அவருக்கும்
தெரியவில்லை
அவளை
ஏன் பிடிக்கவில்லையெனெ.
மாமன்
திருப்பூட்டியும்
ஆயாவீட்டு
சோகவனத்து சீதையென
மகளைப்
பார்த்துப் பரிதவித்து
ஆத்தாளும்
அப்பனும் உக்குருக
கருமேகம்
கருத்து உருண்டு பிரண்டு
இடிந்து
பிளறிக் கதறும்.
அண்ணனாய்
வளர்த்தவனுக்குத்
தங்கைபோல்
திரிந்தவளைச்
சொத்துக்காய்
தாரமாக்கி
வாழாவெட்டியாய்
செய்தவிபரம் பார்த்து
மின்னலாய்வெட்டி
வீழ்ந்து
மழையறையும்
ஈசானத்தில்.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))