எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 27 நவம்பர், 2014

”நான்” யந்திரம் நலம்.



”நான்” யந்திரம் நலம்.

வேலை எறும்புகள்
சுமைதாங்கிகளாகும்.,
கல்லும் குழியும்.

மலைச்சாமி கைவேல்
சனத்தின் நாக்கில்.

வாசலில்
அலங்காரக் காகிதத் தோரணமாய்
வாழ்க்கை தொங்கும்.

விட்டில் பூச்சிகளாய்
எதிர்பார்ப்புகள்

விளக்கின் வாய்களாய்
நடப்புகள்.

கிணற்றுக்குத் தாகம்
கடலுக்குமா

திரிகள் இல்லாமலும்
மெழுகுகள் கரையும்

கரைகளுக்குள்
நீர் சுண்டும்.

-- 84 ஆம் வருட டைரி.

புதன், 19 நவம்பர், 2014

பாத்திரங்கள்,



ஒளிச் சக்திகளை
உள்வாங்கிச் சூடடக்கி
வெளிச்சச் சக்கைகள்
வெளித்தள்ளும் பாத்திரங்கள்.

கூரைகளின்
கட்டுமானங்கள்
அடுப்புகளின் மேல்

கடப்பைக் கற்களின்மேல்
ஆரோகணிக்கும்
நெருப்புக்குதிரைகள்.

தோட்டத்தில் ரோஜா
முள்கத்தியின் ஆதாரத்தில்

தென்னைகள் முற்றி
விதையாகும் அனுபவமாய்

ஜன்னல் கதவுகளில்
அறைபடும் காற்றாய்
வாழ்க்கையும்.

-- 84 ஆம் வருட டைரி.

திங்கள், 17 நவம்பர், 2014

அரிசியா மனசா



கிழவியின் முறத்தில்
புடைபடுவது
அரிசியா மனசா

உயர ஓங்கி விழுந்து
அடிபடுவது
அரிசியா மனசா

தவிட்டுப் பேறுகளாய்
தட்டிவிட்டு அழுவது
அரிசியா மனசா

மரத்துண்டுக் குழிக்குள்
தீட்டப்படுவது
அரிசியா மனசா

தீட்டுப்பட்டது
மனசா அரிசியா..?

-- 84 ஆம் வருட டைரி.

ஞாயிறு, 16 நவம்பர், 2014

மனச்சில்

ஆத்மா நிர்வாணம்
அழுக்குக் கரைகளுடன்

கரைதொறும்
கரைதொறும்
பூக்கள் நுரைகளுடன்.

வலுவிழந்துபோன
மரச்செதிள்கள்
தண்ணீரில்
மனச்சில்லுகளாய்.

-- 84 ஆம் வருட டைரி.

வெள்ளி, 14 நவம்பர், 2014

சில ஒற்றுமைகள்.



சில ஒற்றுமைகள். 

காதலுக்குக் கண்ணில்லை. உண்மைதான். அதனால்தான் நாமிருவரும் குருடராய்ப் பிறப்பெடுத்தோமோ. 

காதலுக்கு ஜாதி பேதமில்லை. ஆமாம் அதனால்தான் குப்பைத்தொட்டிகளின் வாரிசுகளாய் உருவெடுத்தோமோ. 

காதலுக்குப் பணக்காரன் ஏழை என்ற வித்யாசமில்லை. அதனால்தான் அன்பு உருவானதோ. 

மண்ணில் பிறந்தோமென்பதற்காக மண்ணிற்கு உணவாகிப் போகிறோமென்பதை உணர்த்துவதற்காகத்தன் மண்ணே நம் நித்திய உணவாகிப் போனதோ. 

நடைபாதைகளும் புழுதிப் படலங்களுமே நம் நித்தியக் கட்டில்கள். கூவம் நதிக்கரைப் பக்கமே நம் குடித்தன வாசஸ்தலங்கள். 

பட்டினி இரவுகளின் ஓலம் ஊமைப்புலம்பல்கள். பொறுக்கமுடியாமல் ஊற்றுத்  தோண்டி நீர் குடிப்பு. குடிக்கும்போது உப்புக்கரிப்பு. அது நம்மைப் போலவே பலபேரின் குருட்டுக் கண்கள் உதிர்த்த முத்துக்களாம். 

மனதுக்கு ஒரு சுகமளிப்பு. அவர்களைப் போலல்லாமல் எனக்கு நீ ஒரு துணையாய் இருக்கும்போது இந்தச் சில ஒற்றுமைகள்தான் நம்மைச் சேர்த்து வைத்ததோ. அதனால்தான் நெஞ்சங்கள் உறவாடினவோ. 

நம்மிடையே பகிர்ந்துகொள்ள வேறென்ன இருக்கிறது. அன்பைத் தவிர.

-- 1984 ஆம் வருட டைரி.

வியாழன், 13 நவம்பர், 2014

ம(றை)றந்து போனது.



ம(றை)றந்து போனது.

குளிருக்குத் துண்டுகட்டித்
தலைபோர்த்திச்
சாலையோரம் குந்தி
வெளிக்குப் போகும்
மைல்கற்கள்.

சிறியதாய்ப் பச்சையம்
சேர்ந்திருக்கும்போதே
பாகம்பிரித்து
வைக்கும் புற்கள்

காதைத் திருகி
கிசுகிசுக்கும் குளிர்

பஸ்விட்டுத் தோள் தாவி
தோள்விட்டுப் பஸ் தாவும்
குட்டி அரசியல்வாத
BAG குகள்

புதன், 12 நவம்பர், 2014

மண் பூ



சருகுப் போர்வையுரித்து
மண்பூ புஷ்பிக்கும்
மண்புழுப்பூச்சிகளுடன்
வேர்கள் வெளித்தெறித்து
சலசலக்கும்
பொடிக்கற்கள் மேற்பரப்பில்
வெங்காயத் தோலிகளாய்
நிறம் மாறி
நீண்டுகொண்டே போகும்
அடுக்கடுக்காய் அழுக்குகளையும்
சக்கைகளையும் கெல்லி எறிய
நன்மைகள் பாறைகளாய்
உறைந்து நிற்கும்.
மண் அடுக்குப் போட்டுத்
துகில்மூடி சருகுப் (பூ) போர்வை
போர்த்துத் துயிலும்

-- 84 ஆம் வருட டைரி

ஒரு நாள் ஓட்டம்.

ஒரு நாள் ஓட்டம்:-

கருநீல ஆகாயத்தை

நிறமாற்ற முனைகிறது

அடர்மஞ்சள் சிவப்பு

செஞ்சிவப்புப் பற்களால்

விழுங்கத் துவங்குகிறது

நீலம் பாரித்த பூமியை.

முழுவதும் சுவைத்துப்

பச்சையத்தைப் புதுப்பித்து

தங்கச் சிவப்பாய்த்

துயிலப் போகிறது

கருநீலப் போர்வைக்குள்.

திங்கள், 10 நவம்பர், 2014

நிஜம்

சூரிய காந்திகள்
சந்தர்ப்பவாதக் கூட்டங்களாய்

நாளாக மனமும்
சூழ்நிலைப் பச்சோந்தியாய்

கொடுத்தலும் எடுத்தலும்
வெறுத்தலையும் வண்டு

சில்வண்டுக் கூச்சல்களாய்
நிஜம் மனத்துள்

மூலையோர ஒட்டடைகளாய்ப்
படியும் வாழ்க்கை.

-- 84 ஆம் வருட டைரி.

ஞாயிறு, 9 நவம்பர், 2014

சுருள்தல்

வானவில் குழப்பமாய்
எத்தனை கலப்பட முடிச்சுகள்
குழப்பப் பாதங்கள்
இதயப் பாதையில்
எத்தனை சேறு.

போகின்ற கால்களெல்லாம்
மண்ணைச் சிதறிப் போக
எத்தனை வசந்தஙக்ள்
ஓ ..!
எத்தனை வசந்தஙக்ள்
காலப் பூக்கள் சுருளச் சுருள
மீளாமல் போன எத்தனை வசந்தங்கள்.

-- 84 ஆம் வருட டைரி.

வெள்ளி, 7 நவம்பர், 2014

மண் வாசனைகள்



மண் வாசனைகள். :-

சுதந்திரத் திருநாடு. இதில் நாட்டைத் தவிர  சுதந்திரம் சுருண்டு ஒடுங்கி மடிந்தே போய்விட்டது. திருவை யாரோ திருடிக்கொண்டுவிட்டார்கள். 

இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம். நாடு என்ற பெயரில் பதுக்கல், கலப்பட வியாபாரிகள், ஊழல் மலிந்த ஜனநாயகமும், கடத்தல் கொள்ளையர்களும், சுரண்டல் அதிகாரிகளும் பட்டினிப் பாட்டாளிகளும் மலிந்து திரியும் இருட்டுக்குகைதான் இந்த மணித்திருநாடு. 

‘தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம். ‘ என்று நீ ஏன் தான் பாடி வைத்தாயோ. இன்று மக்கள் அழிக்கிறார்கள். 

எதை. தனியொரு மனிதனையேதான். ஏனெனில் அவன் இல்லாமற் போனால் உணவைப் பற்றிக் கவலையில்லையல்லவா.. 

சட்டைக்காரன் காலத்தே எட்டையப்பன் போன்ற குட்டையுள்ளம் படைத்தவர்கள், நாட்டையாளும் ஆசையாலே வீரத்தை சட்டை செய்யாத மடையர்கள் போல தொழிலாளர் தலைவனே முதலாளிகளின் கால் தடவி, கைபிடித்து, கைப்பிடிக்குள் பணமுடிப்புப் பிடித்து, கலர் காகிதங்களுக்கு அடிமையாகி குட்டிச் சுவர்க்கழுதையாகி, பட்டிகளில் தொட்டிகளில் கட்டிக் கிடக்கும் பட்டினி கிடக்கும் மட்டி மந்தைகளிடம் ஆடு தொடா இலையை ஆசை காட்டி இட்டுச் செல்கின்றான். குள்ளநரிக் கூட்டத்துக்கு விருந்து படைக்க. 

கால் வயிற்றுக்குப் பாடல் சொல்லி இரையும் கும்பல், பால் இல்லாமல் வீறிட்டழும் சேய்ச் செல்வம், என்றும் பசி, எப்போதும் பசி, பசி, பசி, பசி மயம். இதில் படிப்புக்கு வழியேது. நன்கு உடுக்க வழியேது. 

தங்கள் உரிமைகளைப் பற்றிப் பேச ஒரு பேச்சாளனைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். அவனுக்கு ரூபாய் ஐயாயிரம் வாடகை. பேச்சாளன் விளாசினான் பிரமாதமாக. பாட்டாளி வர்க்கம் சிந்தும் ஒவ்வொரு வியர்வைத்துளியும்தான் நெல்மணிகளாகிப் புன்னகை புரிகின்றன. என்று. அவனுக்கு அமோகக் கைதட்டல்கள். ரோஜாப்பூமாலைகள் பணமுடிப்பு. 

கூட்டம் முடிந்து இறங்கி வரும்வேளையில் எவனோ ஒரு உழைப்பாளி இடித்துவிட்டதால் அவள் வியர்வை பட்டு தன் அங்கவஸ்த்ரம் பாழாகிவிட்டதாயும் வியர்வை நாற்றம் பொறுக்கமுடியவில்லை என்று ஏகத்திட்டு. என்றுதான் உண்மையை உணர்வானோ என் அருமை உழைப்பாளி நண்பன். அவனுக்கு என்றுமே கோபப்படத் தெரிவதில்லையே. அது ஏனோ. 

பட்டினி கிடந்தாலும் சரி. பஞ்சையாய்த் திரிந்தாலும் சரி. காந்தியடிகளின் அஹிம்சை இங்கே வெல்ல மார்க்கமில்லை நண்பனே. நீ இப்படி இருப்பதற்குக் காரணம் ஓ . மண் வாசனைதானோ. பிறந்த மண் தோஷம் உன்னை ஒட்டிக்கொண்டதோ.


டிஸ்கி :- 85 ஆம் வருட டைரி.

வியாழன், 6 நவம்பர், 2014

மீண்டும்



மீண்டும்
நானுனக்கு எழுதுகிறேன்.
ஏனெனில் நான் என்னுடனே
போராடிக்கொண்டிருக்கிறேன்.
நெரிசல்களுக்குள்
வார்த்தை அரைத்தல்களுக்குள்
துணுக்குகளாய்க் கிடக்கும்
என்னை – ’நானை.’ த்
தேடிக்கொண்டிருக்கிறேன்
மீட்டுக்கொள்ளத் தவிக்கிறேன்.
உன் உபதேசங்கள் கிணற்றடிவாரங்களுக்குள்
சொரிந்து கழுவும் அழுக்காய்க் கரைந்தன.
உப்புத்தாள்களாய் வேதனைகள் அரிக்க
மரப்பலகையாய் கற்சுவராய்
நான்..
இந்த மாற்றம்
நிகழ்ந்தது எப்போது. ?

-- 84 ஆம் வருட டைரி.

புதன், 5 நவம்பர், 2014

ஓடுகள்

நீரும் காத்திருக்கும்
மணலின் உறிஞ்சலுக்காய்
 பாதுகாத்த ஓடுகள்
சுண்ணாம்புத் துகள்களாய்
தோப்பின் தென்னைகள்
மார்காட்டிச் சலசலக்க
மலைக்குள் பதுக்கி வைத்த
ரத்தினம் தோண்டப்படும்
இருட்குகைக்குள்
புதைந்திருந்த திருவோடு
பிச்சை கேட்டுத் தெருவோடு
உயிர்ப்பின் மரூஉவோடு.

-- 84 ஆம் வருட டைரி.
Related Posts Plugin for WordPress, Blogger...