ஒளிபடைத்த கண்ணினாய் வா ! வா ! வா ! - 2.
”பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்.”
என் இதயத்தின் இமைக் கதவுகள்
உன் கண்ணழகை எண்ணிஏங்கும். !
கூந்தலில் பதுக்கிய அழகிய முத்துகள்.
காமன் தோட்டத்துள் கருவண்டுத் திராட்சைகள்.
விழிக்குளத்தில் நீந்தும் மீன்கள்.
மருண்டு நோக்கும் சின்ன மான்கள்
“உன் கண்களின் ஓரம்
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான்மாற்றுவேன்.”
கொள்ளையழகுக் கண்களில்
யார் கொள்ளிக் கண்கள் பட்டதோ >
பள்ளியில் ஆராய்ச்சிக் கூடத்தில்
அமிலங்கள் நடத்திய அவசரத் தேர்தலில்
உன் கண்களுக்கு வாக்குப் போட்டுத்
தங்களுக்குத் தலைவர்களாக
ஆக்கிக் கொண்டன.
கவிதைக் கண்களைக் காண
கனவோடு வந்த எனக்குக்
கண்ணீரில் பதில் கிடைத்தது.
யார் முகவரிக்கோ எழுதப்பட்ட
காலனின்கடிதம்
காலம் தவறிக் கடமையும் தவறி என்
கண் முகவரியைச் சந்தித்துவிட்டதே !
கதறித் துடித்தும் கத்திப் புலம்பியும்
என்ன பயன் ?
முன்பு வெல்வெட்டில்
பதித்தெடுத்த வைரக் கற்கள்.
இப்போது வெறிச்சென்று குழி குடியிருக்கும்
பள்ளங்கள்.
“உன் கண்களின் ஓரம்
எதற்காகவோ ஈரம்.
கண்ணீரை நான் மாற்றுவேன்.”
அறுவைச் சிகிச்சைக்கு
ஆறாயிரம் செலவு.
அழகிய கண்கள் இருந்த இடத்தில்
அடுத்தவரின் கண்கள்
வாசம் செய்யப் போகின்றன.
ஒளிபடைத்த கண்ணினாய் வா ! வா ! வா !
உன் வரவுக்காக
உன் திறப்புவிழாவுக்காக
ஒவ்வொரு வினாடியும் என் இதயம்
காத்துக் கொண்டிருக்கின்றது.
-- 85 ஆம் வருட டைரி
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))