புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புதன், 13 ஜனவரி, 2016

வாழை.வாழை:-

இது தரையில் கால்பாவிய கவிதை.
அதன் தளதளப்பு வஸந்தம்.
தரையில் பதித்த பச்சைக்கல்லின் பூவட்டம்.
காலை வேளையில் ஜன்னல் எட்டிப்பார்த்து
ஹலோ சொல்லிச் சந்தோஷப்படுத்தும்
ஆச்சரிய நண்பன்.
குறும்பு செய்கையில் மௌனமாய் அதட்டும்
பூலோகத்தாயின் பூமைந்தன்.
இது தரையில் ஒற்றைக்கால் தவம்செய்யும் பச்சைக்கிளி.
அதன் சிவப்புமூக்காய் வாழைப்பூ.
யதார்த்தமாய்த் தோன்றி
யதார்த்தமாய் வாழ்ந்து
யதார்த்தமாய்ச் சிந்தித்து
யதார்த்தமாய் எதிர்பார்த்து
ஏமாற்றத்தையும் யதார்த்தமாய் ஏற்றுகொண்டு
யதார்த்தமாய் அனுபவித்து
யதார்த்தமாய் இறந்து போனவன்.
இந்த யதார்த்தம் என்பது ஒரு தவநிலை.
எனக்கு அது அதீதம்.
“இயல்பை விட்டு அதீதத்திற்கு ஏன்
மாற முயல்கின்றாய்..?
நான் நானாகத்தான் இருப்பேன்.
நீ நீயாக இருப்பதுதான் நல்லது.
இருக்கவும் வேண்டும்.
கூத்தில் கோமாளி வேஷமிட்டால்
சிரித்துத்தானே ஆகவேண்டும்.
பார்வையாளனாக மாறவேண்டுமென்றால் எப்படி..?
இப்படிப் பலப் பல கேட்டு
என்னைச் சீரிய சிந்தனைக்காளாக்கியது
அந்த வாழைதான்.
வாழையடி வாழை என்பதால்
அதுதன் வம்சவிருத்திக்கு வழிசெய்துவிட்டுப்
பயணம் புறப்பிடத் தயார்செய்துகொண்டிருந்தது.
தார்விடப்போகும் நேரம்
அந்நேரத்திலும் தளிர்களுடன் எப்படித்
துளிர்ந்து குளிர்ந்து உறவாட குலவ
குசலம் விசாரிக்க எரிந்து விழாமலிருக்க முடிகிறது?
எல்லாமே இயல்பு என்பதால்
இறப்பையும் மனமுவந்து ஏற்று
யார்வீட்டு வாயிலிலோ காட்சிப் பொருளாக இருக்க
எப்படிச் சம்மதிக்க முடிகின்றது இதனால். ?
இது இயல்பாய் இருப்பதுபோல் மனித மனதால்
இருக்கமுடிவதில்லையே ஏன்.?
எப்படி என்னை விட்டுப்போக
மனசு வந்தது இதற்கு. ?
எல்லாமே சகஜமாக ஏற்றுக்கொள்கின்ற இதைப்
பார்க்கப் பார்க்க மனதின் ஓரத்தில்
பொறமை துளிர்விடுவதை அடக்கமுடிவதில்லை.
”விதிக்கப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளணும். ”’
தத்துவமாய்ப் போய் உறைந்து
அமர்ந்துவிட்டது என் டைரியில்.
அந்தப் பச்சைக் கனவு நிதமும்தான்
பூத்துக்குலுங்குகிறது என் தோட்டத்தில்.
ஆனால் முதல் அனுபவத்தைப் போலல்லவே.
முதல் குழந்தையாட்டம் அது
ஒவ்வொரு இலையையும் வாள்போல் சுருட்டி
மெல்ல மெல்லப் பூவின் சாகஸமாய்ப்
போதவிழும்வேளையில் அருகிருந்து
பரவஸப்பட்டது நான்.
மயிலிறகு குட்டிபோட்டதைக் கண்ட
நர்ஸரிப் பெண்ணாய்,
கோபத்தால் பரபரத்து மூஞ்சியைத் தூக்கும்
யூனிஃபார்ம் பெண்ணாய்,
ஒரு புதுசின் தாவணிப் பரவஸமாய்
வயசின் கொலுசுச் சிணுங்கலாய்
அம்மாவின் திட்டுமுதல்
வாங்கின முதல் ப்ரைஸ்வரை விடாமல்
கணக்கு ஒப்பிக்கும் கிளிப்பிள்ளையாய்
எப்படி அடிமைப்பட்டு உன்னுள் ஒன்றாய்
ஒன்றிப் போனேன்.
நீயும் நானும் ஓருருதானே..?
பின் எப்படி உன்னிலிருந்து
உன்னையே பிரிக்கமுடிந்தது.
அப்படியானால் இத்தனை நாளும்
நீ காட்டியது போலி அன்பா.?
போலிக் கவனிப்பா. ?
என்னதான் இருந்தாலும் போனது போகட்டும்.
என் முதற்ப்ரஸவம்
முதல் அனுபவம்
முதல் ஸ்நேகிதம் நீதான்
அந்த உரிமை உனக்குமட்டும்தான்
என்னருமைப் ப்ரிய நர்த்தகியே..!
உனக்கு நான் ப்ரியாவிடைதரவேண்டிய நேரம்.
நாம் இப்போது ”ஜன கண மண” பாட ஆரம்பிப்போமா
அது சென்றுவிட்டது.
துக்கத்தைப் பரவஸமாய் நினைத்துக் கொண்டு.
மனசு முழுக்கத் தைத்து விளையாடும்
கருவேல முட்களாய்த் துன்பங்களின் மத்தியில்
நுனிப்புல்லாய் ஆழமாய் அசைபோட
உன் நினைவு.. அது போதும்.

-- 85 ஆம் வருட டைரி

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...