மல்லிகை மொட்டிற்கு:-
சின்ன மொட்டே
சீக்கிரம் மலர்ந்துவிடேன்
குதிரையின் குளம்படித் தடங்களாய்
அழுத்த நினைவுகளின் புலம்பல்கள்
பனிப்பாவாடையில் ஜன்னி உச்சரிப்புக்கள்.
சின்ன மொட்டே !
மலராமல் இருந்துவிடாதே
இறந்து விடாதே
உன் மலர்தலுக்காக
உன்னின் வஸந்த நிகழ்வுக்காக
உன்னின் இதழ் விரித்தலுக்காக
உன்னின் வெள்ளைப் புன்னகைக்காக
நான் உன் செடி இராஜாங்கத்தின்
இலைக்குடி மக்களின் இடையே
ஓர் இலையாய் எதிர்பார்த்திருக்கின்றேன்
இரவிலும் பகலிலும்
இமையை இணையவிடாமல் உன்
மலர்தலின் சந்தோஷச்சகாப்தத்தைச் சுவைப்பதற்காக
ஒவ்வொரு விநாடியும் பரபரத்துத் திரியும்
சுவர்க்கெடிகாரத்தின் வினாடி முள்ளாய்
மனக்குதிரையின் பிடரியில்
ஆரோகணித்து அமர்ந்து
இன்று நாளை என நாளை எண்ணி
உன் மலர்தலென்னும் கானல் நீரைக் கண்டு
பாய்ந்தோடுகின்றேன்
என் சின்ன மொட்டே..!
நாளை என்பது சாசுவதமில்லை.
இன்றையக் கடமையை இன்றே செய்துவிடேன்.
கிழடாகிப் போன என் மனக்குதிரைக்கு
அசைபோடவாவது உன் வஸந்த நிகழ்வைச்
சீக்கிரம் நிகழ்வுபடுத்திவிடேன்..
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))