எழுத்தை மறந்து போனது
எழுத மறந்து போனது.
சமையலறைப் படையெடுப்பில்
பாயாச வாகை சூடியபின்னும்
பரணி பாட மறந்து போனது.
ராபர்ட் புரூஸைப் போல
கஜனி முகம்மது போல
வெற்றித் தங்கம் தேடி
எழுத்து வேள்வியில்
ஆறுமுறையாய்ப்
பதினெட்டாம் தடவையில்
உள்ளே சுரங்கம்
அமுக்கி வைத்து
யதார்த்தச் சூரியன்களின்
வெப்பத்தில்
கவிதை வைரங்கள்
கட்டிப் போக
பால் சுரக்காத முலையாகத்
தவித்துப் போனது.
கொண்டை ஊசிகள்
முடிக்கு முள் வைத்தியம் செய்ய
புடவையோரங்கள்
மெட்டியில் கவ்வ
சோப்பும் சாம்பலும்
துணிகளும் தரையும்
அவளைத் தேய்க்க
சந்தனமுல்லையின் அடியில்
அவள் தூர்ந்துபோனாள்
எழுத சோர்ந்து போனாள்.
தினமும்
உலையாய்க் கொதித்துத்
தயிராய் உறைந்து
பருப்பும் வேகவைத்துப்
பப்படம் பொரித்து
பாடாண் திணையே மறந்துபோனது
மரத்தும் போனது.
-- 86 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))