எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

தொலைந்துவிட்டேன். :-



தொலைந்துவிட்டேன். :-

ஞாபகம் தொலைந்துவிட்டது.
சின்னதில் பதிந்த
பச்சைக் கிராமமெங்கே ?
இந்த முதிர்ந்த
கருப்புத் தார்த்தாடி
பதித்த கிழமெங்கே. ?

ஊரின் விலாவிலெல்லாம்
கண்சிமிட்டும்
மஞ்சள் ( நியான் )
புற்றுநோய்கள்.

கோயில் தன் சின்னமுன்
தலையை மொட்டை
அடித்துக்கொண்டு உயரமாக
கோபுரக்ஹிப்பி வளர்க்கும்

சுவர்கள் ட்ராமாக்காரிகள் மாதிரி
வர்ணம் பூசிப் பகட்டும்.
ஓ! எங்கே தொலைந்து போயிற்று
என் ஞாபகம்
எங்கே என் எண்ணெய் பூசிய
போஸ்டர் ஒட்டாத
பத்தினிச் சுவர்கள்.

எங்கே மௌனமாய்
ரகசியம் பேசும்
என் அகல்விளக்குக் குழந்தைகள்.
எங்கே என் உஞ்சவிருத்தி செய்யும்
எண்ணெய் தேய்த்த
கறுப்புச் சாமிகள்.
ஓ.! என் ஞாபகம்
எங்கே தொலைந்துவிட்டது.

இங்கே என்ன க்யூ
சர்க்கரைக்கா பாமாயிலுக்கா
இல்லையில்லை
இது ஐந்துரூபாய் டிக்கெட்டில்
அர்ஜண்டாய் சாமிதரிசனம் பண்ன
கையிலிருக்கும்
கறுப்பைத் தாராளமாய்க் கொட்ட

எங்கே பார்த்தாலும்
ப்யூட்டி பார்லர்கள்.
மனதிற்கு மட்டுமல்ல
முகத்திற்கும் போலிபோர்த்தக்
கற்றுக் கொடுக்கும்.
எங்கிருந்து முளைத்தன
இத்தனை பார்பர் ஷாப்புகள்.
எங்கே அந்தப் பிச்சையண்ணன்.
எந்தக் கூட்டத்துள்
தேய்ந்து போனான் ?

என்ன இது
வெண்டைக்காய் அரிவது போல
மூன்றாவது கொலை இங்கே
ஹோட்டல் மெனுமாதிரிச்
சொல்லிப் போகும் ஏ. ஸி.
இவர்களுக்குக் கடவுள்
இரும்பால் இதயம் வைத்தானோ

அரிச்சுவடி கற்றுக் கொள்ளும்
மூன்றரை வயசுகள்
கூலிக்காரனாய் மூட்டைதூக்குகின்றன.
பக்கத்திருந்தும் நிமிர்ந்து பார்க்காத
தண்டவாளமாய் இருந்த
ஆணும் பெண்ணும்..
இப்போது
ஊரிலுள்ள ஆண்களும் பெண்களும்
எங்கே ஓடிப்போனார்கள்?

எப்படிச் சந்தம் கெட்ட கவிதையாயிற்று
என் சின்னக் கிராமம்
என் ப்ரிய குடிசைகள்
எப்போது இப்படி
இராட்சசக்கட்டிடமாய் மாறினார்கள்.

எங்கே அந்த
உண்மை மனிதர்கள்
எங்கே என்
தெம்மாங்குப் பாட்டு
எங்கே என்
பச்சைவயல்கள்

ஆணும்  பெண்ணும்
வசதியாய்க் காதலிக்கவா
கட்டினார்கள் கல்லூரியை
ஊர் முழுக்க மலைவிழுங்கி
மகாதேவனாய்
ஜீவநாடியாய்த் திரையரங்குகள்.

பல்லை இளித்துக்
கோரமாய் ஓடிவந்து
புகைக்கும் இயந்திரங்கள்.
இதுவா என் பச்சைக் கிராமம்

என் ஞாபகத்தைத்
தொலைத்துவிட்டார்கள்
இல்லையில்லை
நானே தொலைந்துபோனேன்.

-- 85 ஆம் வருட டைரி. 

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பலவற்றையும் நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்...

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் டிடி சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

அப்படித்தான் ஆகிவிட்டது இப்போதெல்லாம். ஹ்ம்ம். மாற்றம் ஏமாற்றம் ..

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...