எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

மழலை மழை

மழலை மழை.



மழை என்பது உன்னைப் போலவும்
என்னைப்போலவும்
எங்கப்பா , அம்மா ,
தம்பியைப் போலவும் இருக்கும்.
அது மரத்திலிருந்து இறங்கி வரும்.
அது நல்லா டான்ஸ் ஆடும்.
அது பச்சையாகவும் சிகப்பாகவும்
வெளுப்பாகவும் இருக்கும்.
அது பாவாடை சட்டை போட்டுக்
கொண்டு இருக்கும்.
மெழுகுவர்த்தி மாதிரி
கண்ணாடி உருகி
சொட்டுச்சொட்டாய் விழுமா.
அதுதான் மழையா.
ஆகாசத்தில் எந்த வீட்டிலிருந்து
இதைத் துளித்துளியாய் ஊற்றுகின்றார்கள்?
ஆத்திலேருந்து எப்படித் தண்ணீரை
மேலே கொண்டு போவார்கள்.
ராக்கெட்லயா
ஏரோப்ளேன்லயா
ஹெலிகாப்டர்லயா
பெரிய்ய ஷவர் வைச்சுத் தெளிப்பாங்களா
சொல்லு மாமா
நீ பேசுவது மிக இனிமையாய்
மழையின் இசைச்சொல்லாய் இருக்கிறது.
நீ கேட்கும் கேள்விகள் மிகச் சிறந்தவைதான்
ஆனால் நான்
உன்னைப் போலவே எனக்கும் தெரியாது.
என் மாமாவிடம் கேட்டதற்கும் அவர்
இப்படித்தான் ( என்னைப்போலவே ) விழித்தார்.

-- 80  ஆம் வருட டைரி. 

புதன், 26 ஆகஸ்ட், 2015

வரதட்சணை:-



வரதட்சணை:-

இறைபடுதலும் ஊறுதலும்
கிணற்றின் தொழில்கள்.
ஊற்றுக்களே
அடைபட்டுப்போய்விட்டன.
இனி இறைத்தலென்ன
செய்யும் ?
இனிமேல்
வாளிகள் அள்ளப்போவது
நீர் அல்ல
மணல்களைத்தான்
சுடுமணல்கள் அள்ளி..
பூமிக்குச் சூடு போடுதல்களைக்
காயமேற்படுத்தலைத்
தவிர்க்கலாமே
வேண்டாம்.
இறைத்தலை நிறுத்துங்கள்
இல்லாவிட்டால்
பூமி இன்னொரு சூரியனாகும்
பூமியைச் சுற்றுலும்
மணல் மண்டலம் உருவாகும்
வேண்டாம்
இறைத்தலை
சீக்கிரம் நிறுத்துங்கள்
நம் பொசுங்கல்களுக்காய்
இல்லாவிடினும்
புதிய விதைகள்
விஷம் படாமல் காற்றப்படட்டுமே.

-- 85 ஆம் வருட டைரி.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

ஒட்டகங்கள்



ஒட்டகங்கள் நடந்தன
செருக்காய்
திமிலில் நீர் சொருகிய
செருக்காய்
ஒய்யாரமாய்
முதுகு வளைத்துக் காண்பித்து
அலட்சியக் கால் புதைத்து
ஒட்டகங்கள்
நடக்கத்தான் செய்தன.
என்றேனும் ஒருநாள்
பாலையைக் கடப்போமென.
தினமும் விடியல்
சுட்டுவிட்டுத்தான் சென்றது.
கரைந்துபோனது நீர் மட்டுமல்ல.
திமிலில் திமிரிய
கொழுப்பும்தான்.
குறைந்துபோயின
ஒட்டகங்கள்.
இருந்தாலும் அவை
நடக்கத்தான் அல்ல
நகரத்தான் செய்கின்றன.
ஒட்டகங்கள்
தள்ளாடும் ஒட்டகங்கள்.

-- 85 ஆம் வருட டைரி.

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

போதுமென்ற மனம்:-



போதுமென்ற மனம்:-

என்னுள்ளே பொறாமையின் தேக்கங்கள்
இது பொறாமையா இல்லை
இயலாமையின் சுயதரிசனமா
தேர்ந்தெடுப்பதில்
தவறு நேர்ந்துவிடுமோவென்ற பயமா.
நல்லதாய்க் கிடைக்கவேண்டுமேயென்ற
ஏக்கமா.
இல்லாமைகளையும்
இழந்தவைகளையும் பார்த்து
மனசின் மூலையில்
எச்சரிக்கை விடுக்கும்
ஆன்மக்குரலா.
ஆட்டை நினைத்து முயலைவிட்ட
நரியின் நிலையாய்த்
தடுமாறக்கூடாதேயென்ற நடுக்கமா?
இது பாலினுள்
எப்போதோ விழப்போகும்
நச்சுத்துளிக்குப் பயந்து
ஏற்பட்ட கலக்கமா.
பால் திரியக்கூடாது என்ற சட்டமா
என்ன
ஆனால் திரைந்தபால்
நல்ல தயிராக ஆகமுடியாது
ஆக்கமுடியாது
இது நிதரிசனமான உண்மை.
இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்
போதுமென்ற மனமே
பொன் செய்யும் மருந்து என்பது
என்னுள் உருவாக வேண்டும்.
(போற்றுவார் போற்றுதலும்
தூற்றுவார் தூற்றுதலும்
போகட்டும் கண்ணனுக்கே.

-- 83 ஆம் வருட டைரி. 

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

குழந்தைப் பனி

மெல்லிறங்கும் பனி
உறங்கும் புல்லை உசுப்புகிறது.
எழும்பாத புல்லின்மேல் போர்வையாய்க்
கட்டியணைத்துத் துயில்கிறது தானும்
வெய்யில் ஊற்றி எழுப்பும் வரை.
பின் மரங்களில், இலைகளில் ஏறி
ஒளிந்து கொள்கிறது ஈரப்பதம் பிடித்து.
இலைநடுக்கம் கொள்கிறது வேர்வரை
கூசும் மென் குளிரால்.
கண்பொத்திக் காத்திருக்கிறது பனி
இரவில் மீண்டும் மெல்லிறங்க.


சனி, 22 ஆகஸ்ட், 2015

ஒரு கார்மேகம் உருவாகிறது.:-



ஒரு கார்மேகம் உருவாகிறது.:-

புறங்கையின் மச்சமாய்
விளக்குகையில் தெறிக்கும் சாம்பற்சிதறலாய்
நடுநெற்றியின் கருப்புப் பொட்டாய்
இமைக்குள் படபடக்கும் கருவிழி அலைச்சலாய்
பூத்துப்போன கரித்துண்டுகளாய்
ஆராய்ச்சிக்கூடத்தின் சில்வர் நைட்ரேட் சாடிகளாய்
மதிய நேரத்து மனித நிழலாய்க் குறுகி உருண்டு
மாலை நேரத்து மரநிழலாய் நீண்டு
போட்டோ நெகட்டிவ்களாய்
இருள் நேரத்து நதிக்கரையோர பூத நிழல்களாய்
நிழற்படங்களாய், முள்ளம்பன்றியாய்
குட்டி யானையாய் மாறி உருமாறிக்
கொண்டிருந்தது நீலவானின்
கருப்பு மேகம் ஒன்று.

-- 85 ஆம் வருட டைரி 

Related Posts Plugin for WordPress, Blogger...