எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 8 ஜூலை, 2015

கோரை:-



கோரை:-

அது கூடத் தன்னுள்ளே
சுருண்டு கொள்ளும்.
மௌனயோகியாய்
காற்றின் வருடலுக்கு
உடல் கொடுத்துக்கொண்டு.

பெருங்காற்றில் சாய்வதுபோல்
போக்குக்காட்டி மறுபடியும்
திமிராய் எழுந்து நின்று கூவும்.

குழப்பங்கள் பச்சையத்தைச்
சுரண்டிப் போகும்.
தண்ணீர் தளும்பித் தளும்பி
மோதி வேர் சாய்க்கப்பார்க்கும்.

ஆனாலும் அது
வணங்காமுடி.
குனிந்து நிமிர்ந்து
குனிந்து நிமிர்ந்து
கெக்கிலி கொட்டிச்
சரசரக்கும்.

விழுப்புண் பட்டதை
புறப்புண்ணாய் எண்ணி
மனம் கசிந்து உள்ளே
குமுறும் அது
வெளியில் வெய்யிலுக்கு
வரவுகூறிச் சலசலக்கும்.

ரோஜாவை ஸ்பரிசித்துக்கொண்டு
முள்ளை எண்ணி
ஜாக்ரதைப்படும்.

தன்னைத் தாண்டி
நகரும் மேகங்களை
எண்ணிக்கொண்டு
ஆவேசமாய்ச் சாய்க்க
வரும் காற்றைக்
கோரைக்கரங்களால்
கிழித்துக்கொண்டு
தென்றலின் மெல்லணைப்பில்
சிலிர்த்து ரோமாஞ்சலி
செய்துகொண்டு
நதிக்கரையோரம்
சிரித்துக் கிடக்கும்.

அதன் பெயர் அடங்காதவனா..

-- 82 ஆம் வருட டைரி. 

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகான அருமையான சிந்தனை...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையான படைப்பு! நன்றி!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிகவும் ரசித்தோம் இந்த அழகான வரிகளை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

நன்றி சுரேஷ் சகோ

நன்றி துளசி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...