எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

எழுதமுடியாமல் போய்விடுமோ என்னால் ??????



எழுதமுடியாமல் போய்விடுமோ என்னால் ??????

எழுதமுடியாமல் போய்விடுமோ
என்னால்
எழுத முடியாமல் போய்விடுமோ.

சமையற்கட்டில் பால்பொங்கி வழிய
பருப்புப் பிடித்துப் போக
உலை அரிசியில்லாமல் கொதிக்க
அடுப்பில் காஸ்தீர்ந்துபோக
இருக்கும்போது
எழுதமுடியாமல் போய்விடுமோ என்னால்.

வற்றல் உளுத்து உதிர்ந்துபோக
உளுந்து புழுப்பிடித்துப் போக
மாவுகளில் வண்டு மேய
வீட்டின் மூலைகளில்
ஒட்டடை போர்த்திக்கொண்டு
இருக்கும்போது
எழுதமுடியாமல் போய்விடுமோ என்னால்

குத்துவிளக்கு எண்ணெயைத்
தலையில் வழியவிட்டுக் கொண்டு நிற்கும்போது
சாமிபடங்கள் தூசியை அப்பிக்கொண்டு இருக்கும்போது
தலையணை போர்வை திரைச்சீலைகள்
அழுக்குகளில் ஊறிக்கொண்டிருக்கும்போது
காலியான மண்ணெணய் டின்னைப் பிடித்துக்கொண்டு
க்யூவில் நிற்கும்போது
எழுதமுடியாமல் போய்விடுமோ என்னால்.

காலை வேளையில் அஞ்சறைப் பெட்டியில்
கடுகுதீர்ந்துபோய் இருக்கும்போது
மூன்றுஸ்பூன் சாம்பார்பொடிமட்டும் இருக்கும்போது
பொரியலுக்கு என்ன காய் வாங்கலாம்
என நிற்கும்போது
அடிக்கடி கறைபடும் வீட்டை மெழுக நேரும்போது
எழுதமுடியாமல் போய்விடுமோ என்னால்

இந்தச் சேலைக்கு மாட்சிங் ப்ளவுஸ்
இல்லையே எனக் கவலைபடும்
அற்பஜாதியாய் ஆகிவிடுவேனோ  நானும்.

பிள்ளைகள் பள்ளிக்குப்புறப்படும் அவசரங்களில்
தலைப்பின்னல்களில் பவுடர் தீட்டல்களில்
பொட்டிடுதல்களில் டிபன்பாக்ஸ் அடைப்புகளில்
துணி துவைப்புகளில் பாத்திர விளக்கல்களில்
புதைந்துவிடுமோ என் எழுத்து ?

எழுத முடியாமல் போய்விடுமோ
என்னால்
எழுதமுடியாமல் போய்விடுமோ..???

88888888888888888888

இது உனக்குள்ளும் எனக்குள்ளும் அரிப்பெடுத்த கேள்விகளுக்கு பதில் :

உன்னால் எழுத முடியும்;
உனக்காக சில பூக்கள்
ஜனிக்கும்போது
உன் வான விண்மீன்கள்
இருட்டு உதறி விழி விரித்து
ஹலோ சொல்லும்போது. …உன்னால் எழுத முடியும்

நீ போட்ட வாசல் கோலம்
ஏதேனும் இரண்டு கண்ணை
எளிமையாய்
ஆச்சர்யப்பட வைக்கும்போது

நீ செய்த இனிப்புப் பண்டம்
ஒரு நாவில் நனைந்து
உற்சாக வார்த்தை
பிறப்பிக்கும்போது

நீ எழுதிய கவிதை ஒன்று
ஒரு மனதோர வரப்பில்
நிழல் சிந்தும்போது

நீ எழுதாமலா இருக்கப் போகிறாய்.

சிறுமைகள் கண்டு
உன் இதயம்
சின்னக் கேலியில்
சிரிக்கும்போது

கொடுமைகள் கண்டு
உன் உள்ளம்
கூரைபற்றும்  நெருப்பாகும்
போது

ப்ரைய ஜரிகைகள்
உன் மனப்புடவையில்
ஜிகினா தெரிக்கும்போது

நீ எழுதத்தான் செய்வாய் நிச்சயமாய்.

உன் வீட்டு
மல்லிகை மொட்டுவிடும்
போது

நீ வளர்த்த
குட்டி நாய்
அம்மாவாகும் போது

நீ இட்டுக்கொண்ட மருதாணி
ஈர சிவப்பாய்ப் பற்றும்போது
உன்னால் எப்படி எழுதாமலிருக்க முடியும்.

முதன் முதலில் விழும் மழைச்சொட்டாய்
அந்தக் குரல் அம்மா எனும்போது
இரு பூம்பிஞ்சுப் பாதங்கள்
உன் மார்பில் புரளும்போது
ஒரு பவளமொட்டு உதடு
உன் கன்னம் ஒற்றும்போது
உன் முற்றப் பரப்பில்
சின்னஞ்சிறு ஈரத்தடம்
பதிக்கும்போது

எழுதாவிட்டால் நீ
என்ன பெண்.?

சில சமயம்
உன் தலையணை
வெந்நீராடும்போது
சிதறிய உன் இதயத் துணுக்குகள்
அடுப்பெரியக் காகிதமாகும்போது
நள்ளிரவின் தனித் துயரில்
துளசிமணம் துணையிருக்கும்போது

நீ எழுதத்தான்
செய்வாய் நிச்சயமாய்…

6 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

//குத்துவிளக்கு எண்ணெயைத்
தலையில் வழியவிட்டுக் கொண்டு நிற்கும்போது//

???? தரையில் என்று இருக்கணுமோ தேனே?

உடம்பு சரி இல்லாமல், கை வலி படுத்தி எடுக்கும்போது எழுத முடியாமல் போய்விடுமோ என்ற பயம் எனக்கு(க்) இருக்கு.

ஆனால் ஒன்னு.... மனசு 24 மணி நேரமும் (தூக்கத்திலும் கூட!) எழுதிக்கொண்டேதான் இருக்கிறது என்பதே என் நிலை!

sury siva சொன்னது…

எழுதவேண்டும் என்ற அவசியமே இல்லை.
கையில் ஒரு ஸ்மார்ட் அலைபேசியில் ஸ்பீச் ரிகக்னைசர் வச்சுகிட்டு, ( இப்ப இத எல்லாம் கூகுளே செய்யுது ) அடுப்படி வேலையோ, காய்கறி வாங்க மார்கெட் நேரமோ, பேசிக்கினே இருங்க. நீங்க பேசுறது எல்லாம் அப்படியே பதிவு பண்ணி, சேவ் செய்து, அப்லோட் பண்ணிடுங்க.

இன்னும் ஒரு இருபது வருடங்களில், எழுதுவது என்பது 90 விழுக்காடு இருக்காது . பேசுவதே அதற்கு பின்னூட்டம் போடுவதும் பேசுவதே வலைகளில் இருக்கலாம்.

இருந்தாலும் இதில் ஒரு கஷ்டம் இருக்கிறது. நம்முடைய வழக்கமான குரலும்வட்டார மொழியும் ( ஸ்லாங்கும் ) தான் இருக்கும். deliberate usage of other accents in other areas of our own Tamil land may not be possible.
subbu thatha.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கேள்வியும் நானே... பதில்களும் நானே...

அப்படித்தான் இருக்கோணும்...!

Thenammai Lakshmanan சொன்னது…

அப்போ எழுதினது துளசி. நம்மளப் போல விளக்கும் அப்போ எல்லாம் எண்ணெய் வழிய வழிய நிக்கும்தானே :)

உங்கள் எழுத்துகள் புத்தகமாக வடிவம் பெறுவது குறித்து மகிழ்ச்சி . எழுதிட்டே இருங்க துளசி.:)

Thenammai Lakshmanan சொன்னது…

அப்பிடி ஒரு காலம் வந்தா ஈஸியா இருக்கும் சுப்பு சார் :)

Thenammai Lakshmanan சொன்னது…

ஹாஹா தனபால் சகோ முதல் கவிதை என்னுது. இரண்டாவது என் தோழி உமா மகேசோடது :)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...