டைப்ரைட்டர் பேப்பராய்
மனசு சலசலக்கிறது.
இன்றைக்கு என்னால்
எழுத முடியாது எனப்
பேனாவும் நீட்டிப் படுத்துக்
குளிருக்கு அடக்கமாய்ப்
பையில் முடங்குகிறது.
முடிந்துபோட முடிந்துபோட
மனத்திரை முடிச்சவிழ்த்துக்
கொள்கின்றது
போதிமரத்துப் புத்தனின்
அகிம்சையாய்க் கரங்களும்
இன்று பேனாமாம்சம்
தொட அஞ்சுகின்றன.
காந்தி அன்னையிடம்
பண்ணிய சத்தியமாய்
இந்த விரல்கள்
அன்னையிடம் கொடுத்த
உறுதி மொழிகளை எண்ணி
தங்கள் முட்டு மனங்கள்
நடுங்கும்.
அன்னையின் கட்டளைக்குக்
கீழ்படிந்து
இந்த ராம விரல்கள்
பேப்பர்காடுகளிலேயே
பேனா மரவுரி உடுத்து
மைத்தவம் செய்கின்றன.
பதிநாலாண்டானாலும்
படிக்கப்படமாட்டாதாவென்று.
என்னது இது
இன்று மனச்சிறுவனும்
இப்படிச் சோம்பலுதிர்த்துப்
படுத்திருக்கின்றான்
டைரிக்குளமும்
வேண்டாம் இன்று
என்னில் மைக்கல் எறிந்து
எழுத்துச் சலனங்களை
எழுப்பிவிடாதே என்கிறது.
பேனாக்காலும் நடந்து
கால்வலித்துக்
கோவில் கண்டதும்
பேப்பர் வழியில்
தடம் முடித்து
சன்னிதி முன்னால்
சாமிக்காய் நிற்கும்.
இளைத்து மூச்சு விட்டு
இங்க் வாங்கும்
விரல் ராமர்கள்
ஆரண்யவாசம் முடித்தும்
மரவுரி கழற்ற
முயல மாட்டார்கள்.
காற்றுக்காரன் மெல்லவந்து
மரவுரி பிடுங்குவான்.
மனச்சிறுவன் மௌனமாய்
மெல்லிசு மூச்சுவிட்டுத்
தூங்கிக்கொண்டிருப்பான்.
3 கருத்துகள்:
நல்ல வர்ணனை.
நன்றி தனபாலன் சகோ
நன்றி கில்லர்ஜி
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))