ஆழக்கடலில் அழகிய முத்தெடுத்து :-
நினைவுப் பறவை பறக்கிறது.
எண்ணக் கூண்டுக்குள் தேடினேன்.
புரிகிறதா பெண்ணே உனக்கு. ?
ஆசைக்கடலில் அலையும் படகு நான்
பாசக் கடலில் பரிதவிக்கும் பிறவி நான்.
நானொரு சின்னச் சிட்டு
நீயோ கருடன்.
என்னால் உன் உயரத்துக்கு வர முடியாது.
எனவே எனக்காக நீ என் தரத்துக்கு
இறங்கி வாயேன்.
தெய்வங்கள் மனிதனாகலாம் ஆனால்
மனிதன் தெய்வமாக முடியாதே !
என்றும்
எப்போதும் நான் உணர்ச்சிபூர்வமானவள்
அப்படி வாழ்வதையே விரும்புபவள்.
நான் மகிழ்ச்சியுடன் வரும்போது
என் முகம் பார்த்துச் சிரிக்காமல்
மனதில் பூத்த மகிழ்ச்சிப் பூக்களை
அக்கினியில் வாட விடுகின்றாய்.
உனக்குள் ஏன் இந்தக் குரூரத்தனம்.?
இது எப்படிப் புகுந்தது உனக்குள் ?
நான் சந்தோஷத்தோடு என்
மன ஆசைகளைப்
பகிர்ந்துகொள்ள வரும்போது
சுள்ளென விழுந்து அதற்கு
சமாதி கட்டி விடுகின்றாய். !
நீயும் நானும்
சங்கமமாகும் நேரம்
என்னை ஆரவாரித்து அழைக்காமல்
உம்மென்று இருந்து என்
உற்சாகப் பறவையின்
காலொடித்து விடுகின்றாய்.
யாரிடம் இவ்வளவும் கற்றுக்கொண்டாய் ?
என்னை அலட்சியப்படுத்த யாருனக்குக்
கற்றுக் கொடுத்தது ?
என் கவிதைகளுக்கு
உண்மைக்கரு கிடைக்காமல்
கற்பனைக் கருக் கொண்டு கவியமைத்தேன்.
கவிதை இயல்பாயில்லை என்ற
குரலிருந்தது.
அதனால் தோல்விப் படிகளில்
வெற்றியுடன் ஏறிச் சென்று
கண்ணீர்ப் பாதையினால்
வழியமைத்துக் கவியமைத்தேன்.
இப்போது என் நெஞ்சுக் கீறல்கள்
சிந்திய குருதி அமைத்த
எழுத்துக்களைச்
சோகக் கவிதை சுவையெனப்
புகழ்கின்றார்கள்
படித்துச் சுவைக்கின்றார்கள்.
இரணங்கள் ஆறவில்லை
இன்னும்
இரத்தங்கள் காயவில்லை.
என் ஒவ்வொரு பிறப்பிலும் நான்
உன் பிரிவுத் துயரால் துன்பப்பட
வேண்டுமென்றே நீயும்
மறுபிறப்பு எடுத்து வருகின்றாயோ ?
இதுதான் ஜென்மத் தொடர்போ ?
- 83 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))