எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 மே, 2016

சவலை



உள்ளத்தில் எழுதப்பட்ட நினைவுகளை
எந்த ரப்பர் கொண்டு அழிக்க ?
இப்பிடிக் கவலைப்படுவது
அனாவசியமாமே ?
அர்த்தமற்றதாமே ?
முட்டாள்கள். !
மனதைப் புரிந்து கொள்ளாத மடையர்கள்.
உள்ளத்தை அறியாத உலுத்தர்கள்.
நினைவுகளை மதிக்கத் தெரியாத மனித உள்ளங்கள்.
உணர்ச்சிகளை உணராத மடையர்கள்.
புரிந்தாலும் பிரித்தாளுகிற பொய்யர்கள்.
நெஞ்ச ஏட்டில்
இதமான வெம்மையுடன்
எப்போதும் புதிதாகத் தோன்றுகின்ற
பொன்னால் பொறிக்கப்பட்ட
பழம்பெரும் நினைவுகள்.
என்னை வைத்தே விளையாடி
எனக்கு அலுத்துவிட்டது.
அதனால் மற்றவரை
செஸ்போர்டு காயின்ஸ் ஆக
வைத்து நகர்த்தி
விளையாடப் போகிறேன்.
ஆனால்
இப்போது மட்டும்,
இருளின் பிடியில்
இருளின் மடியில்..
சவலைக் குழந்தை போல
தலைகுப்புற விழுந்து கிடக்கின்றேன்.

- 82 ஆம் வருட டைரி

சனி, 28 மே, 2016

தடுமாறும் தவிப்புகள்: தடம் மாறும் தவிப்புகள் :-



தடுமாறும் தவிப்புகள்: தடம் மாறும் தவிப்புகள் :-

என் அரண்மனைச் சாளரங்களில்
கண் கொத்தும்
விஷப் பாம்புகள்.
குடி புகுந்ததால்
கூட்டுக்குள் ஒடுங்கும்
சுயநல நத்தையாகிப்
போனேனே. !
என் பாவங்களுக்குப்
பிரதியாய்ப்
பரிகாரங்கள் பல செய்தும்
பலன் மட்டும்
இன்னும் கிட்டவில்லை.
இந்தச் சீதை
எத்தனை காலம்தான்
அசோகவனத்தில்
தவமிருப்பாள் ?
எப்போது இராமனின் வருகை ?
ஏன் இந்தக் காலதாமதம் ?
இராமன்களே
இராவணர்களாக மாறும்போது
சீதைகளுக்கு ஏது விடுதலை ?
ஓ.!
நெருப்பில் மூழ்கி
எழுந்து வந்த
சீதையையே இந்த உலகம்
சோதனை செய்த போது.
நம்பாத போது
இந்தக் காலத்து
ஜானகிகளை
எப்படி நம்பும் ?
எப்படி நடத்தும் ?
என்றோ ஒரு நாள்
வரும் உன் அழைப்புக்காக
இன்றே என் மனம்
தவிக்கத் துடிக்கத்
தொடங்கிவிட்டது.
ஏனெனில் நீ
என்னை அழைப்பாய் என்ற
நம்பிக்கை இருப்பதால்தான்.
உதயதீபமாய் நீ வருவாய்
என எண்ணி அஸ்தமன இருளில்
அடிபணிந்துள்ளேன்.

88888888888888888888888888888888888888
பனி மூட்டங்களின் குளிர்ச்சி
கிளர்ச்சியைத் தூண்டுகின்றது.

 --  83 ஆம் வருட டைரி.  


வெள்ளி, 27 மே, 2016

ப்ளஸ்டூ க்ளாஸ்மேட்ஸ். :)



ஆயிஷா – பந்தா சம்டைம்ஸ் சீரியஸ்
ஜெயலெக்ஷ்மி – சூப்பர் பந்தா.
ஜெயலலிதா – அப்பாவி, ஸ்ரீதேவி ரசிகை
பி. மலர்விழி – வழித்துணை
மேரிஸ் ஸ்டெல்லா – ஒற்றைச் சடை.
மங்கை – சாது
முத்துலெட்சுமி – மேடைப்பேச்சாளர்
ப்ரேமலதா – க்ளோஸ் ஃப்ரெண்ட்
ராஜேஷ்வரி – ரெப்
கே சாந்தி – குட் ஃப்ரெண்ட்
வி சாந்தி – எஸ் பி எல்
ஷெண்பக லெக்ஷ்மி – படிப்ஸ்.
எஸ் டி – லூஸ்
வசந்தி – சீக்ரெட் ஹோல்டர்
வஹிதா – குட் சிங்கர்
இஸபெல்லா – ஸ்மார்ட்.
எஸ். அமுதா – ஃப்ரெண்ட்.

-- 81 ஆம் வருட டைரி.

வியாழன், 26 மே, 2016

இயற்கைப் பெண்ணே !



இயற்கைப் பெண்ணே !

நீ இவ்வளவு அழகு மிக்கவளா ?
உனக்குத் தெரியாமல்
என்னையறியாமல்
நானொரு நாள்
செயற்கையின் மடியில் அமர்ந்து
அதன் பிடியில்
மாட்டிக்கொண்டு உன்னழகை
இரகசியமாய்ச் சுவைத்தேன்.
உன் தனபாரங்களைத் ( மலைமுகடுகள் )
தழுவிக் கிடக்கும்
மேக முந்தானைக்கு என்ன
வெட்கம் வந்து
அடிக்கடி நழுவி ஓடுகிறது.
உன் உடலில் உள்ள
வளைவுகள்தானா இந்தப்
பள்ளத்தாக்குகள்.
உன் உடலில் உள்ள
வளைவுகள்தானா இந்தப்
பள்ளத்தாக்குகள்.
உன் இடை ( நதி )
ஏன் இவ்வளவு நீளம்
ஓடுகிறது. ?
உன் பின்புறம் ( கடல் )
இவ்வளவு அகலமாய்
நீலநிறமாய் உள்ளதே. !
உன் கரங்கள்
மரங்களாகிக் கிளைகளாகி
தழைத்து வளர்ந்து
கொண்டே இருக்கிறதோ ?
உன் கால்கள்
வேர்களாகி நன்றாகப்
பூமியினைப் பற்றிக்
கொள்கின்றதோ ?
உன் முகத்தை ( நிலவு )
ஏன்
மேகமுக்காட்டுக்குள்
புதைத்துக் கொள்கிறாய் ?
வானக் காதலன்
மார்பில் முகம் பதித்து
இன்புற்றிருக்கின்றாயோ ?
அதனால்தான்
கீற்றுப் புன்னகை ( பிறைச்சந்திரன் )
செய்கின்றாயோ ?
வானக் காதலன்
தழுவும் நேரம்!
வந்து தடுக்குதோ
முந்தானை மேகம் !.

-- 85 ஆம் வருட டைரி. 

புதன், 25 மே, 2016

தானாய் எல்லாம் நடக்குமென்பது பழைய பொய்யடா :-



தானாய் எல்லாம் நடக்குமென்பது பழைய பொய்யடா :-

கேரளத்துப் பெண்களே !
நீங்கள் மரவள்ளிக்கிழங்கைத்
தணலிலிட்டுப் பொசுக்கையிலே
என் உள்ளமும் பொசுங்கிப் போகின்றது.

இப்படித்தானே இலங்கையிலும்
இந்தியாவின் இளங்குருத்துக்கள்
சாம்பலாகிக் கொண்டிருக்கின்றனவென்று
இதயம் சீழ்பிடித்துப்
பேப்பர் ஓடைகளில்
பேனாப் பூக்களின்
நெருப்புப் புன்னகைகள்.

இவை
மெழுகுவர்த்தியில் மலரும்
வெள்ளைப் பூக்கள் இடும் முறையீடுகள்.

இங்கே கல்லூரிக்குக் கட் அடிக்கும்
மாணவர்களைப் பார்க்கையில்
கல்வித்தாயின் காலடிச் சுவட்டை
ஏக்கத்துடன் பார்க்கும் ஈழத்தமிழ்ச்சிறுவன்
நினைவுக்குள் வருகின்றான்.

மயக்கம் நீங்கி ஓன்று கூடுங்கள்
மாணவச் செல்வங்களே
நம் ரத்தத்தின் ரத்தமான
ஈழத்துச் சொந்தங்களைப் பாதுகாக்க.

ஈழத்துச் சாத்தான்களை
வேரறுக்க.. ! கூறாக்க !!.

-- 85 ஆம் வருட டைரி. 

Related Posts Plugin for WordPress, Blogger...