எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 28 பிப்ரவரி, 2015

அப்பாவி அணில்கள்,



இவைகள் துருப்பிடித்துப் போன
கப்பல் கிடங்குகள்

மனவிறகு எரிய
விழி அரிசியிட்டு
இமைப்பானையில்
தளதளக்கும் உலைநீர்

சோறு பதமான பின்னும்
நீர் சலசலக்கும்.

இவைகள் அந்தரங்க வேர்கள்
அழுகிப் போன தாவரங்கள்.

பாதங்கள் பயணப்பட்டு
பயணப்பட்டுப் பட்டுத்தான் போயின.

இந்த நீர் துடைக்க
இமை மயிர்கள்
உப்பு எண்ணி
ஒதுங்கிப் போகும்.

வஸந்தத்தை மதிப்பதாய்
மகிழ்விப்பதாய்
மிதித்துப் போகும் வாகனங்கள்.

அலைபாயும் அணில்குஞ்சாய்
விழிக் கண்மணிகள்
மனிதப் பைகளுக்குள் நுழைந்து
நிம்மதித் தீனி தேடும்.

இந்த அணிலுக்கு
சந்தோஷக் கனிகளை
துன்பக் காய்களைக்
கொறிக்கத்தான் தெரியும்.

உலகம் இருட்டுக் கருப்பைக்குள்
கதகதப்பாய் இருக்கும்போது
சிற்றருவியாச் சலசலக்கும் மனது.

நீர்க்குமிழிகளைக்
கொலை செய்வதற்குத்தானே
இந்தக் காற்று படைக்கப்பட்டிருக்கிறது.

பொத்தல் பைகளைப் பார்த்து
ஆகா நமக்குத்தான்
வாசல் வைத்திருக்கின்றார்கள்
என நினைத்து ஏமாறிப் பின்
உண்மை உணர்ந்து திருதிருக்கும்
அப்பாவி அணில்கள்.

-- 83  ஆம் வருட டைரி.

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

இருப்பு.


இந்தத் திரை அழகானது.
இழுத்துக் கட்டப்பட்ட
இரத்தினக் கம்பளங்களைப் போல
மென்மையாயும் மினுமினுப்பாயுமிருக்கிறது.

இரகசியத்தையும்
காற்றையும் கூடக்
கசியவிடுவதில்லை.

விக்கிரமாதித்தன் கதைத்திரைச்சீலை
போலல்லாது
இருபுறக் கதைகளையும்
கேட்டபடி இருக்கிறது .

திரை இருப்பதை உணரும் கணம்
திகைத்து நோக்கும் நீ
அந்தப்புறம் மெல்லக் கடக்கலாம்.
சாவகாசக் கணங்களில்  கூர்ந்து நோக்கலாம்
எதனால் ஆனது இதுவென..

அப்படியான ஒன்று
நம் இருவருக்கும் இடையில்
தேவைதான் என நினைக்கும்போது
அசையத் துவங்குகிறது திரை.

அக்கணம் கண்களும்
காதுகளும் முளைக்கிறது  அதற்கு.
முகரவும், உரையாடவும்
தொட்டுணரவும் தலைப்படுகிறது.

தடுப்புச் சுவராய் இருந்ததை
எது அசைத்ததென உணருமுன்
தடுப்பணை ஆகிறது.

இந்தத் திரை
தேவைதானென நினைக்கிறோம்,
குறுக்கே இருக்கும் வரை
உன்னிருப்பையும்
என் உயிர்ப்பையும்
உறுதி செய்வதால்.

என்னுடைய பறவைகள்



என்னில் பூத்த இந்தப் பூக்களை
இப்போதெல்லாம் யாரும் பார்ப்பது
எனக்குப் பிடிக்கவில்லை.
அவர்களின் மூச்சுப்பட்டு
இவைகள் சாம்பலாகின்றன.

இந்த வாசல்களில் நான்
பொறித்திருக்கும் கோலங்கள்
எனக்காக மட்டுமே
பிறரின் கண்பட்டு மாலைக்குள்
இவை மக்கிப் போவது
சுத்தமாகப் பிடிக்கவில்லை.

என்னுடைய பறவைகள்
கூட்டுக்குள்ளேயே இருக்கட்டும்.
அவை காற்றுத் தேர் ஏறி
உலகம் சுற்றும் வானம்பாடியாய்
ஆக வேண்டாம்.
என் பறவைகளுக்கு
எல்லாவற்றிலும் பயம்
என்னிடத்தில் தவிர..

என்னுடைய நிலா
இந்த நோட்டு வானில்
மட்டுமே உலா வரட்டும்
எல்லார் கண்ணிலும்
கனவு பொறிக்கும் 
இரவுத் தேவதையாக
ஆக வேண்டாம்.

இந்த நெருப்புப் பொறிகளில்
குளிர்காய்வது
என் பிடித்தமான
தினசரி நிகழ்ச்சி.
இது ஒன்றும் ஆகுதியாக
ஆகவேண்டாம்,

இந்தச் சிறையை விட்டாலும்
என்னின் பறவைகளுக்கு
வேறொரு பெரிய
அச்சுக்கூண்டுதானே
கிடைக்கப் போகிறது

இவை மருதாணிகளாகவே
இருக்கட்டும்.
மெல்லக் கைபற்றிக்
கிசுகிசுத்து
இரகசியமாய்ச் சிவந்து
மெல்லப் படியும் இவை
மருதாணிகளாகவே
இருக்கட்டும்.
மினுக்க ஆசைப்பட்டு
சிலநேரம் உதிர்ந்துபோகும்
நெயில் பாலிஷ்களாய் இல்லாமல்.

இவை திரைகளுக்குள்ளும்
கதவுகளுக்குள்ளும்
பதுங்கிக் கிடக்கும்
கம்பிகளாய் இருக்கட்டும்.
சூரிய வெளிச்சமும்
காற்றும் மழையும் பட்டு
ஒரு அற்புதமும்
நிகழப் போவதில்லை.

என்னின் நொண்டிப்பறவைகள்
நடக்க மட்டுமே தெரிந்தவை
பறப்பதை அறியாதவை.
அவை வெளியுலகம் தெரிந்து
வேதனைப்படாமல் கூட்டுக்குள்ளேயே
சந்தோஷித்திருக்கட்டும்.

டிஸ்கி:- 82 ஆம் வருட டைரி.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

காரணப் படகு.

காரணங்களால் அடுக்கப்பட்ட படகு
தத்தளிக்கிறது சுற்றிச் சுழன்று.
எந்தக் காரணமும்
இறங்கமாட்டேனென்று அடம்பிடிக்க
மேலும் சில காரணங்கள்
ஏறிக்கொள்ளக் காத்திருக்க
காற்று வீசும் திசையில்
கவிழத் துவங்குகிறது படகு.
படகும் ஓட்டையும் காரணங்களும்
பாரபட்சமில்லாமல் மூழ்குகின்றன.
தின்னப்பட்ட காரணங்கள் குமிழாய்க் கரைய
எங்கெங்கும் காற்றும் நீரும் மட்டுமே
நிரம்பியிருக்கின்றது.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

உள்ளார்ந்த வாக்கியங்கள்



உன்னால் விமர்சனம்
எழுதமுடியவில்லை
எனக்குப் புரிகிறது.

என்னில் எடுத்துக்காட்ட
உவமைகள் இல்லை.
இரசித்துப் படிக்க இது
பொருள் பொதிந்தது இல்லை
இது வெறும் கட்டுரை
கவிதை கலந்த உரைநடை

உன் தடுமாற்றம் புரிகிறது
இதில் வார்த்தைத் தூவல்கள் இல்லை.
இதில் மனம் தொடும்
பசுவின் பட்டு ஸ்பரிசங்கள் இல்லை.  
இதில் இருப்பவை
வெறும் உள்ளார்ந்த வார்த்தைகள்.

ஏமாந்துபோன ஏக்கப்பட்ட
ஆசைப்பட்ட எப்போதாவது
திடீரெனக் கிடைத்த
நிகழ்ச்சிக் கலவைகளின் உளறல்கள்.
வெளிப்பாடுகள் இவை.

இவைகளுக்கு ஆதி இல்லை
அந்தம் இல்லை கோர்வை இல்லை
இவை உள்ளார்ந்த கேவல்கள்.
தாயிடம் குழந்தை
அழுதுகொண்டே சொல்லும்
சொற்துப்பல்கள்.

ஸ்நேகிதையிடம் வார்த்தைகளை
மென்று மென்று பின் பகிர்ந்துகொள்ளும்
களைத்த மனத்தின்
சோம்பற் முறிப்புகள்.

எங்காவது ஓரிடத்தில்
உற்சாகம் அவசரக் கோலமாய்த்
தெரித்திருக்கும்.
மாலை ஆவதற்குள் அதுவும்
கசங்கிப் போகும்.

இவை வெறும்
உள்ளார்ந்த வாக்கியங்கள்.
எனக்குப் புரிகிறது.
உன்னால் ஏன் விமர்சனம்
எழுத முடியவில்லை என்று.


Related Posts Plugin for WordPress, Blogger...