எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 31 டிசம்பர், 2014

முகப்பறை :- 1



முகப்பறை :-
அப்பத்தா வீட்டிலோ அது
புதுமணத் தம்பதிகளின் அறை
கிருஷ்ணர் ராதையின் ராசலீலை
ஜலக்ரீடைக் குளிர்ச்சி
ஸ்டூடியோக்கடை நினைவாய்
கண்ணாடி ஷோகேஸில்
அடுக்கியிருக்கும் பொம்மைகளும்
அலங்கார விளக்குகளும்
ஒரு மூலையோர ட்ரெங்குப் பெட்டியில்
அவள் கல்லூரியில் எழுதிய
கவிதை நோட்டுகளும்.

செவ்வாய், 30 டிசம்பர், 2014

முகப்பறை:- 2



முகப்பறை:-

ஆயா வீட்டின் தானியக் கிடங்கு
கவுனரிசி தட்டைப்பயறு வாசத்தோடு,
முறுக்குவடை மனகோலம் அதிரசம்
டயர்முறுக்கு தேன்குழல் மாவுருண்டை
சில்வர் தூக்குகளில் நிரம்பி வழியும்.
மரவையில் கிடைக்கும்
மாலைப் பலகாரம்.

புட்டுமாவோ சிகப்பரிசி மாவோ
உப்புக்கண்டமோ காயவைக்கப் பரணில்
காப்பித்தட்டுகளும் அலுமினியத் தட்டங்களும்
சூழ்ந்த அறையில் சிலநாள் கிடந்தது
அவளின் ட்ரெங்குப் பெட்டியும்.,
கல்லூரி வாசம் சுமந்த உடைகளோடும்
கலையாத கனவுகள் கொண்ட கவிதைகளோடும்.

திங்கள், 29 டிசம்பர், 2014

கலைவாணியும் கணக்காய்வாளரும் :-



கலைவாணியும் கணக்காய்வாளரும் :-

காகிதங்கள் கண்டுபிடிக்குமுன்
கலைவாணிக்கு வீணை வாசிப்பு.
கானாமிர்தம் என்னாமல்
வீணாமிர்தம் என்பார் கணக்கர்.

நோட்டுகள் எழுதப்படவே என
கலைவாணி கிறுக்கித் தள்ள
கணக்காய்வாளருக்கோ
நோட்டுகள் எண்ணப்படவே

குறுந்தொகையை வெளியிட
கலைவாணி கேட்டுக்கொண்டது பெருந்தொகை.
வெறுங்கை முழம்போடமுடியுமா
வீணையை உற்றுநோக்கி நங்கை.

வரவுசெலவு பற்றுவரவு அறிந்த அவள்
ஐந்தொகை பேரேடு அறியவில்லை.
அளந்துபோடும் கணக்காளருக்குக்
கணக்கும் கவிதையாகுமென உணர்ந்துகொண்டாள்.

புதன், 24 டிசம்பர், 2014

பூனை நடை:-



பூனை நடை:-

தேரைகளற்ற கல்லைச்
செதுக்கிச் சிற்பம்.
உளி கொண்டு அடித்து
சுத்தியல் கொண்டு அறைந்து
இழைப்புளி தோலுரிக்க
சுயமெல்லாம் உரிந்து
நியான் அறைகளுக்குள்
தனக்கென அற்றுப் பிறருக்காய்
துவாரங்களற்ற பொம்மையாய்
காட்சிப் பொருளாய்
பூனை நடையிடும்.

புல்பிடுங்குதலாய்
புருவம் செதுக்குதலே புண்படுத்த
அடிக்கடிப் புதுப்பித்தல்
செயற்கை அழகவஸ்தை.
கொடிகள் பின்னிய
கானக நதிகளில்
இயற்கை இழைத்துச்
சிரிக்கும் சாளக்கிராமங்கள்.
வாயோரம் முலைப்பாலுறைந்த
பச்சைக் குழந்தைகள்.  

செவ்வாய், 23 டிசம்பர், 2014

காலண்டர்.

2015 டைரியெல்லாம் வேண்டாம்.. காலண்டர் இருந்தா யாராவது அனுப்புங்க..

விதம் விதமா ஐ மீன் நடிகை, கிரிக்கெட்டர், மல்லையா குரூப் மாடல்ஸோட கிங்ஃபிஷர் காலண்டர் எல்லாம் வேண்டாம். சாமி படம் போட்ட டேஷீட் காலண்டர்தான் வேணும்.

செண்டர்ல நல்ல சாமி படம் இருக்கணும் அதுல.. (கோயில் பக்கம் வண்டில போனா கன்னத்துல போட்டுக்குறமாதிரி ) அப்போ அப்போ வீட்ல உக்கார்ந்த இடத்திலேயே பார்த்துக் காப்பாத்துன்னு கும்பிட்டுக்கலாம்.

தினம் ராசிபலன் இருக்கணும் அதுல..பலன் நல்லதாயிருந்தா பார்த்துட்டு நடக்குதான்னு காத்திருக்கலாம். ( பாராட்டு, பெருமை, புகழ் நு வந்தா அன்னிக்குன்னு பார்த்து யாரும் திட்டலாம். )

கோயிலுக்குப் போன விபூதி குங்குமம் மடிக்கலாம்.

விசிறி போல மடிச்சு அலங்காரப் பொருள் பண்ணலாம்.

வெறகடுப்பு இருந்த காலத்துல கலர் கலரா எரியிறத பார்க்கலாம்.

அதுக்கு முன்னே வெளியூர் போனா பல்பொடி பொட்டலம் கட்டுவாங்க.

உ - உத்தமம்
ம - மத்திமம்
அ- அதமம் இதெல்லாம் படிச்சுத் தெரிஞ்சுக்கலாம்.

,
,
,அட பொழுது போகலைன்னா...

நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்து எந்தக் குளிகை, எந்த நாழிகையில இன்னிக்கு சூரியன் உதிச்சுதுன்னு கொழம்பலாம்.

இன்னிலேருந்து என்னிக்கு ஊருக்குப் போறோம்னு உக்கார்ந்து சினிமா மாதிரி தேதியைக் கிழிச்சுக்கிட்டு இருக்கலாம். ( ரங்க்ஸ் வீட்டுல உக்கார்ந்து நீ என்ன பண்ணேன்னு கேக்க முடியாது .

சாப்பிடும்போது டிவி, கம்ப்யூட்டர், அல்லது படிக்க புத்தகம் இல்லாட்டி இதை எடுத்துப் பார்த்துக்கிட்டு சாப்பிடலாம்.

யார் கல்யாணம் என்னிக்கு, எந்த விசேஷம் என்னிக்கு, எந்தத் திருவிழா என்னிக்கு அன்னிக்கு ஹாலிடேயா இல்லையான்னு கரண்டு இல்லாத சமயம் ( ஐ மீன் கம்ப்யூட்டர், லாப்டாப் பாட்டரி தீர்ந்து போன சமயம் ) உக்கார்ந்து வெட்டி சண்டை போட்டுக்கலாம்.

ஹிஹிஹி இதை எல்லாம் யாரும் ட்ரை பண்ணிப் பார்த்துட்டு என்னத் திட்ட வரவேண்டாம்.. இந்த வருஷம் முடியுது.

அடுத்த வருஷம் -- 2015 உங்க எல்லாருக்கும் -- நம்ம எல்லாருக்கும் நல்ல வருஷமா அமைய வாழ்த்துக்கள் நட்புக்களே, சகோதர்களே, சகோதரிகளே, உறவுகளே. !!!


-- சென்ற வருடம் முகநூலில் போட்டது இது. இதப் பார்த்துட்டு ஒருத்தங்க நிஜமாவே எனக்குக் காலண்டர் அனுப்பினாங்க .. நன்றி நன்றி நன்றி அந்த நல்ல உள்ளத்துக்கு :)
 

திங்கள், 22 டிசம்பர், 2014

உன் தெருவழியே போறவரும் என் தெருவழியே போறவரும்



எந்த நட்பும்
சுவர்களோடும் கதவுகளோடும்
நின்றுவிடுவதில்லை

நின்று நிலைக்கும் சில
நினைவில் கல்வெட்டாய்

சிலது லாடமாய் 
குளம்புகளைக் கிழித்தாலும்
நின்று நிலைத்து ஓட

துளிர்த்திருந்த இலையை
கிள்ளிப் போட்டு சருகாக்கி
தூளாக மிதித்தும் அடங்காமல்

வெறுப்பு மண்டிய கணங்களில்
இழுத்துப் பூட்டிக் கொண்டோம்.
கதவுகளையும் ஜன்னல்களையும்
சுவற்றையும் கூட.

தேடியலையும் தவிப்புக் கூட
தெரிவராத அளவு இருப்பையே
உள்ளிழுத்து அடைத்துக்கொண்டு



உன் தெருவழியே போறவரும்
என் தெருவழியே போறவரும்
கலந்து பேசினால் உண்டு
நம்மைப் பற்றி.

புதுப் புனலாய் நீ பொங்கியெழுவதும்
பூச்செடியாய் நான் பூத்துத் தள்ளுவதும்
நாம் கலந்து கொள்ளாமலேயே
நம்முள் கலந்துகொண்டு.

அதீதமே முயக்கும்போது
அணைக்குள்ளோ மதகுள்ளோ
கிடப்பதே சுகம்.

Related Posts Plugin for WordPress, Blogger...