எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 அக்டோபர், 2011

கொத்தடிமை..??

கொத்தடிமை..??
************************
யூனியன் இல்லை..
போனஸ் இல்லை..
கிம்பளம் இல்லை..

வரையறுக்கப்பட்ட
வேலை நேரம் இல்லை..
பொழுது போக்கவும்..

ஊருக்கு முன் விழித்து
உளைச்சலோடு உழைத்து
ஊரடங்கி உறங்கி.,

உலக நடப்பு தெரியா
இவர்கள் கொத்தடிமைகளோ
இல்லை வங்கி ஊழியர்களாம்..

வெள்ளி, 28 அக்டோபர், 2011

சிதறல்கள்..

இனிப்பு வியாதி வரும் என
சிரிக்கமாட்டேன் என்கிறாய்.
இரத்த அழுத்தம் துள்ளும் என
பேசமாட்டேன் என்கிறாய்.
இதயம் படபடக்கும் என
பார்க்கமாட்டேன் என்கிறாய்.
*************************************
நீர்க்குமிழி, பாய்மரக்கப்பல்,
காலறுந்தபட்டம்
இதெல்லாம் தட்டாமாலையாய்
சுற்றிச்சுற்றி..
உன்னைச் சுற்றி நான்
சுற்றுவது போல்.
**************************************
சேற்றையாவது வீசு
சேர்த்துக்கொள்ளாமல் வி்டாதே..
திட்டிவிட்டுப் போ
கொட்டிவிட்டுப் போ
அந்தத் தழும்புகள்
சுகமானதாய்..
**************************************
நீள் வெளியில் காற்றாகி
இழுத்துச் செல்.
முடிவில்லாத வெளியில்
இறக்கைகளில்லாமல் தவழ்வது.
யாதுமற்ற ஒன்றாகி
யாதுமாய் ஆவது.

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

தீலீபன் முஃபாரிஸ்

உன் சிரிப்பில் முத்துக்கள்

சிதறிக்கொண்டே இருக்கிறது.

கோர்க்க முடியாமல் தடுமாறும் நான்..
******************
உன் சிரிப்பில் இருந்து
அமுதம் வழிந்து கொண்டே
இருக்கின்றது

சாகாவரம் பெற்றுவாழும்
ஆசையில் நான் அதை
அருந்திக்கொண்டே
இருக்கின்றேன்
திலீபன்
உன் சிரிப்பு பெருகிக் கொண்டே போய்
என் முகத்திலும் புன்னகையைப்
பற்ற வைக்கின்றது...

நிமிர்ந்தபோது
ஒரு கோடிச் சூரியன்கள்...
நம்மைச் சுற்றிலும்...

ஆனந்தம் அலைஅலையாய்
உன்னிடம் இருந்து என்னிடம்
பெருகி வருகின்றது...

பிரபஞ்சத்தின் பெருவெளியில்
உன் சிரிப்பே தினமும்
என் சந்தோஷ உணவாக...

நீடூழி வாழ்க கண்மணி..!!!

சனி, 22 அக்டோபர், 2011

நிழல்

சாலை விளக்குகள்
மஞ்சள் மழை பொழிகின்றன.,
நண்பர்களைக் கடப்பதுபோல்
நனையாமல் கடக்கிறான் அவன்.,
என்னையும் இழுத்து.

இருட்டு மரங்களை
அலுவலக வேலைகளைப்போல
அங்குலம் அங்குலமாகக்
கடக்கிறான்.,
அவனுள் புதையுண்டு
நானும் கடக்கிறேன்.

உச்சியில் முத்தமிட்டு
நிலவு தழுவுகிறது அவனை
நெகிழ்ந்த காதலியைப் போல்.
பின்தொடரும் என்னைத் தழுவாததால்
கோரைப்பல்லும் கொம்பும்
முளைக்கிறது எனக்கு

வெள்ளி, 21 அக்டோபர், 2011

தங்கைகளுக்கு... அக்கா குயிலின் கீதம்.

அக்காக்களும் தங்கைகளும்
அவ்வப்போது செல்லமாய்
அடித்துக் கொள்வதற்கும்
அடித்துச் சொல்வதற்கும்.

அக்காக்கள் தவறுகளுக்கு
அப்பாற்பட்டவர்கள் அல்ல.
அக்கக்கோ குயிலின்கீதமாய்
ஏக்கமும் சோகமும்.

வலிமையாய் இருக்கிறாய்
வாளெடுப்பதில்லை நீ
இருந்தும் வாளாவிருக்கிறேன்.,
வலிமையற்று உன்முன்.

யாரும் இருந்தும் இல்லாமலும்
வாழ்ந்து பார்ப்பதே வாழ்க்கைதான்.
உனக்குப்பின்னும் உலகம் இருக்கிறது
உறைந்துபோய்விடாமல் உயிர்ப்போடு..

செவ்வாய், 18 அக்டோபர், 2011

ஒரு காணாமற்போன டைரியின் மிச்ச ஞாபகங்கள்

1. யதார்த்தங்கள் - நீள்வெளியும் தொடுவானும்.

2. தவிப்பு - எந்தக் காற்றுக்கும் இந்தப் பூக்கள் உதிர்ந்திடக் கூடாது.

3. இரகசியம் - பாவம்.. அந்தக் கிளிகள்.

4. ஸ்நேகம் - இறுகிய பாறைக்குள்ளும் நீர் இருக்கும்.

5. தொலைபேசி - அது உன்னையும் என்னையும் இணைக்கும் பாலம்.

6. சரிகமபதநீ - வெள்ளைப் புறாவைத் தேடும் மாடப்புறா.

7. ஸ்வயங்கள் - நிழலும் நிஜமுமாய் நீ

8. எதிர்பார்ப்பு - ஸ்திரமான ..

9. நம்பிக்கை - முகங்களே முகமூடியுடன்..

10. பொய் முகங்கள் - முகத்துக்கு முன்னால் முகமன்கள் பாடும் முதுகுக்குப் பின்னால் கேலிகள் பேசும் தேசமிது.

11. உனக்குமா..? - பூக்களுக்குக் கூட வியர்க்கிறது.

12. பூபாளம் - காலைப் பூவே ..மெல்ல மலர்ந்து ராகமிசைக்கத் தொடங்கு.

13. தீர்க்கங்கள் - நமக்குள் நாமே தீர்ப்பெழுதுவோம்.

14. ஏக்கம் - நாளைய விடியலுக்கு மலர காத்திருக்கும் பூ.

15. ஒரு சுதந்திர தின நாளில் - தோழனே.. மிட்டாய் கிடைத்தது.. கொண்டாடலாம் வா விடுமுறையை..

16. தீர்மானிக்கப்பட்ட முடிபுகள் - திறமை ஒருபோதும் உறைவதில்லை..

17. எரிச்சல் - எழுதி அழிக்க மனசென்ன வெறும்பலகையா.

18. புதிய நிகழ்வுகள் - யாரைக் கேட்டு இதெல்லாம்..

19. உணரப்படுதல் - நெஞ்சினின்று ..

20. கானற்கனவுகள் - கேள்விக்குறியாய்..

21. போராட்டம் - நீள்வெளி வானமதை ஒன்றாக்க..

22. எதிர்காலம் - வாங்கிய பட்டங்களை பறக்கவிட..

23. ஆகுதீ - நாட்கள் நடைபழக.. நீறுபூத்தது பெருகி..

24. அவசரம் - என்னவரம்.. என்னவரும்..

25. நண்பன் - இவன் உயிர்த்தல்வேண்டி தவம்.

டிஸ்கி :- நன்றி பங்களாபுதூர் பாமா. மனோவுக்கு.

சனி, 15 அக்டோபர், 2011

வெய்யில்.

விடியலில் ராஜகுமாரனின் அணைப்பாய்
நண்பகலில் ராட்சசன் பிடியாய்
மாலையில் வானப்ரஸ்த விலகலாய்.

பருவப்பெண்ணாய்
பொன்னிறம் ஜொலிக்க
வீரியக் கதிர் பாய்ச்சி.
பருவம் தப்பும்பெண்ணாய்
குளிருக்குள் ஒடுங்கி

மஞ்சள்நிற அருவியைப் போல
வீழ்ந்துகொண்டே இருக்கிறது
கருமேகங்கள் பாறைகளாய்
சூழ்நாள் தவிர.

பூமியெங்கும் உழுது செல்கிறது
வயலானாலும்
மலையானாலும்
பழைய கோட்டையானாலும்
மூடிய இலைகளானாலும்
பாரபட்சமில்லாமல்..

அட்சரேகை தீர்க்கரேகை
பாகைகள் அறியாமல்
வெய்யிலில் கிடப்பவர்
வர்ணமெல்லாம் உறிஞ்சி
கறுப்பை பூசி

ஆதிக்கக்காரர்கள் போல்
அடித்துச் செல்கிறது
சுவாசத்தைப் புண்ணாக்கும்
வெங்காற்றையும்,
தாகத்தில் சிக்கிய
மனிதர்களையும்..

மஞ்சள் ராஜாளியாய்
பூமியின்மேல் சிறகுவிரித்து
கவிழ்ந்து செல்கிறது.

மரக்கிளைக்குள் புகுந்து
வெவ்வேறு விதப்
புள்ளிக் கோலமாய்
பச்சையங்களை முத்தமிட்டு
புதுக்கவைத்து உயிர்ப்பித்து

தோண்டாமல் கிடைக்கும்
ஒப்பற்ற தங்கவெள்ளம்..
பூமியைப் புதுப்பிக்கவும்,
புதுப்பயிர்கள் கிளைக்கவும்.

புதன், 12 அக்டோபர், 2011

நினைவுப் புகைக்கூண்டு..

நினைவுப் புகைக்கூண்டுக்குள்
காற்றுக் க்ரீடை செய்வோம்..
வா..
மனநுனிகள் புகையடிக்காமல்
வெய்யில் சுறா கடிக்க வருமுன்..
சீக்கிரமாய்..
சீக்கிரமாய்..
முகங்கள்
புன்னகைப் பனிக்குள்
உறைந்திருக்கும்போதே
புகைச் சுழலுக்குள்,
ஸ்நேகமாய் ஒருதரம்
முங்குவோம் வா..
மந்தைகளின் கொம்புகளுக்கும்
கூர்பற்களுக்கும் நாம்
இரையாவதற்கு முன்..
தடம் பார்த்து
நமக்குரிய வண்டிகள்
பிடிப்போம் வா..
தார்மீகக் காரணங்கள்
ஆராய்ந்து
ஒற்றுமைகள் புலப்படுத்தி
ஒன்றாய்க் கரைசேருவோம்,
வலைமீளுவோம் வா..
மழையின் அவசரமாய்,
சாகரத்தின் தாகமாய்..
சீக்கிரம்..
சீக்கிரம்..

வெள்ளி, 7 அக்டோபர், 2011

அறிவுரை..

'இதுவரை உங்களுக்கு சொல்லப்பட்டதிலேயே மிகச் சிறந்த அறிவுரை எது? எந்த சந்தர்ப்பத்தில், அதை யார் சொன்னார்கள்? அந்த அறிவுரை உங்களுக்கு எந்த விதத்தில் பயன்பட்டது?'

பதில்:- நான் போன வருடம் வலைப்பதிவு தொடங்கி எழுத ஆரம்பித்தபோது நிறைய பதிவர்கள் ஊக்கம் கொடுத்தார்கள். ஆனால் அவர்களில் ஒருவரான திரு செல்வகுமார் ( இவர் நடிகர் ஐஎஸ் ஆரின் புதல்வர்) ., பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தியதோடல்லாமல் இவற்றை குமுதம் ., விகடன் போன்ற இதழ்களுக்கு அனுப்பி வையுங்கள் பிரசுரமாகும் என சொன்னார். அனுப்பினால் பிரசுரமாகுமோ ஆகாதோ என்ற கவலை எனக்கு. ஏனெனில் கல்லூரிப் பருவம் முடிந்து பல வருடங்களுக்குப் பின் எழுதத் தொடங்கியிருந்தேன். ஆனால் ஒரு விஷயத்தை ஒருவர் சொல்லும்போது நம்பத்தொடங்கினீர்கள் என்றால்., அது ஒரு மாஜிக்கல் மிராகிளைப் போல உங்கள் வாழ்க்கையில் நடைபெறும் என்பதற்கு நான் ஒரு உதாரணம்.

விகடன் குமுதம் போன்றவற்றிற்கு படைப்புகளை ஈ மெயிலிலும் அனுப்ப முடியும் எனச் சொன்னார் அவர். தொடர்ந்து அனுப்பத் தொடங்கினேன். பிரசுரமாகிறதோ இல்லையோ தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருந்தேன். நீங்கள் நிச்சயம் அடையாளம் காணப்படுவீர்கள் . எழுத்துத்தான் உங்கள் அடையாளம். அதை ஒருபோதும் சோர்ந்து விட்டு விடாதீர்கள் என்பார். இந்த வருடம் ஏப்ரலிலிருந்து தொடர்ந்து என்னுடைய கவி்தைகள் விகடன்., குமுதம்., குங்குமம்., அவள் விகடன்., கல்கி போன்றவற்றில் வரத்துவங்கின. இனி அடுத்த முயற்சியாக புத்தகம் வெளியிடுங்கள் என சொல்லி இருக்கிறார். கிடைத்த வெற்றிகளில் மகிழ்ந்து தேங்கி விடாமல் அடுத்தடுத்து அடுத்த லெவல்களுக்கு முயற்சித்துகொண்டே இருக்க வேண்டும் என்பது அவரின் மிகச் சிறந்த அறிவுரை. எனவே நல்ல ஆலோசனை சொல்பவர்களை நண்பராக வைத்துக் கொள்ளுங்கள். முடியும் என நம்புங்கள் . அது நடக்கும்.

வியாழன், 6 அக்டோபர், 2011

கல்லூரி அரசியல்.

மக்கள் பேனாக்களை
R1 ல் தொலைத்துவிட்டு
NR1 ல் தேடிக்கொண்டிருப்பார்கள்.

ஆசிரியர்கள் அரசியல்வாதிகளாய்
P.L.SONI. க்கு விளக்கம் கொடுத்து
தேந்தெடுக்கச் சொல்வார்கள்.

ப்யூன்கள் அடக்குமுறையைக்
கையாளும் போலீசாராய்
மாறுவார்கள்.

காண்டீன் அரசியலின்
பெண் ப்ரவேசமாய்க்
கவர்ந்து இழுக்கும்.

மரங்கள் பின்னிப் பிணைந்து
அரசியல் கூட்டத்திற்குப்
பந்தல்கள் அமைக்கும்.

கழைக்கூத்தாடிகளாய்
மேடையில் தோன்றும்
சகமணிகளைக் கண்டு
கூப்பாடு போடவும்,
‘ஹோ’ என்று கத்தவுமே
கூட்டம் கற்றுக்கொண்டிருக்கும்.

அரசியல்வாதிகள்
டெப்பாசிட்டை இழந்து
திரிவதுபோல் ‘மக்கள்’
அரியர்ஸ் வாங்கி
அசராமல் அழுவார்கள்.

வெற்றிபெற்ற அரசியல்வாதிகள்
வாக்குறுதிகளைக் காற்றில்
பறக்க விடுவதைப் போல
”அட்மிஷன்” கிடைத்தவுடன்
படிப்பதைக் கைவிட்டுவிடுவார்கள்.

எதிர்க்கட்சிகளின்
பொலிட்டிக்கல் ஸ்டண்ட் போல
மக்களும் போராட்டம் செய்வார்கள்.

தேர்தல்நேரம் கும்பிட்டுக்
காலில் விழும் அரசியல்வாதியாய்
தேர்வுநேரம் நைட்லாம்பில்
புத்தகங்களுக்கு கால் அமுக்கிக்
கொண்டிருப்பார்கள்.

திங்கள், 3 அக்டோபர், 2011

பூமழை.. பூமாலை..

கரங்கள் குடைபிடிக்கப்
பாதங்கள் செருப்பணிந்து
மண் முகம் குதறிப்போடும்.,
மண்குமரிக்குப்
பூ(மழை)மாலை சூட்டப்படுகின்றபோது..

அன்புகள் ஆகர்ஷித்துத்
தழுவ வரும்போது
தலைக்கு மேலே
கறுப்புக் க்ரீடம் அணிந்துகொண்டு
எதிர்ப்புத் தெரிவிக்கும்
முட்டாள் மனிதர்கள்..

அந்த மழை வீணே பொழிகிறது.

மனிதத் தழுவலுக்கு
ஆசையோடு வந்த அது
மண்ணையும், மரத்தையும்,
கட்டையையும், கதிர்களையும்,
மலர்களையும், முகம்மறைக்கும்
போலிப்போர்வைகளையும்
சன்னவிரலால் தொட்டுத்தொட்டு
உயிர்ப்பிக்க முயல்கிறது.

வேஷம்போடத் தெரியாமல்
வெள்ளையாய் வெகுளியாய்ப்
பொழிந்து கொட்டுகிறது.

மனிதர்கள் கூட்டின் மையத்தில்
ஒடுங்கும் சிலந்தியாய்,
இருளை நோக்கி ஓடிப்பதுங்கி
வெளிச்சத்தைக் கண்டு
அலறும் கரப்பாய்,
மழைத்துளிபட்டவுடன்
முதுகைக் கட்டட ஓரத்தில்
திணித்து நத்தையாய்,
ஒண்டும் மிருகமாய்
ஆகிப்போனார்கள்.

கையில் துளிகளைச் சேகரித்துப்
பரவசப்படமுடியாமல்
ஜன்னல் கதவுகளை
அறைந்து சாத்தித்
திரைகளை இழுத்துமூடி
அதனை அவமானப்பட வைக்கும்
உணர்ச்சியற்ற மிருகமாய்..

கத்திப் பேசியே பழக்கப்பட்ட
கருத்தறிவிக்கும் மனிதர்க்கு
இதன் சங்கீதலயம்
எங்கே புரியப்போகிறது..?

ஆனாலும் அலுத்துக் கொள்ளாமல்
அந்த மழை மண் மகளுக்குப்
பூமாலை சூட்டிக் கொண்டிருக்கும்..
Related Posts Plugin for WordPress, Blogger...