கரங்கள் குடைபிடிக்கப்
பாதங்கள் செருப்பணிந்து
மண் முகம் குதறிப்போடும்.,
மண்குமரிக்குப்
பூ(மழை)மாலை சூட்டப்படுகின்றபோது..
அன்புகள் ஆகர்ஷித்துத்
தழுவ வரும்போது
தலைக்கு மேலே
கறுப்புக் க்ரீடம் அணிந்துகொண்டு
எதிர்ப்புத் தெரிவிக்கும்
முட்டாள் மனிதர்கள்..
அந்த மழை வீணே பொழிகிறது.
மனிதத் தழுவலுக்கு
ஆசையோடு வந்த அது
மண்ணையும், மரத்தையும்,
கட்டையையும், கதிர்களையும்,
மலர்களையும், முகம்மறைக்கும்
போலிப்போர்வைகளையும்
சன்னவிரலால் தொட்டுத்தொட்டு
உயிர்ப்பிக்க முயல்கிறது.
வேஷம்போடத் தெரியாமல்
வெள்ளையாய் வெகுளியாய்ப்
பொழிந்து கொட்டுகிறது.
மனிதர்கள் கூட்டின் மையத்தில்
ஒடுங்கும் சிலந்தியாய்,
இருளை நோக்கி ஓடிப்பதுங்கி
வெளிச்சத்தைக் கண்டு
அலறும் கரப்பாய்,
மழைத்துளிபட்டவுடன்
முதுகைக் கட்டட ஓரத்தில்
திணித்து நத்தையாய்,
ஒண்டும் மிருகமாய்
ஆகிப்போனார்கள்.
கையில் துளிகளைச் சேகரித்துப்
பரவசப்படமுடியாமல்
ஜன்னல் கதவுகளை
அறைந்து சாத்தித்
திரைகளை இழுத்துமூடி
அதனை அவமானப்பட வைக்கும்
உணர்ச்சியற்ற மிருகமாய்..
கத்திப் பேசியே பழக்கப்பட்ட
கருத்தறிவிக்கும் மனிதர்க்கு
இதன் சங்கீதலயம்
எங்கே புரியப்போகிறது..?
ஆனாலும் அலுத்துக் கொள்ளாமல்
அந்த மழை மண் மகளுக்குப்
பூமாலை சூட்டிக் கொண்டிருக்கும்..
3 கருத்துகள்:
சூப்பர் கவிதை. முடிந்த போதெல்லாம் நனைந்து மழையை வரவேற்பவன் நான். நீங்களும் என் போலவே மழையின் ரசிகை என்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி தேனக்கா...
மனிதத் தழுவலுக்கு|ஆசையோடு வந்த அது|மண்ணையும், மரத்தையும்,|கட்டையையும், கதிர்களையும்,|மலர்களையும், முகம்மறைக்கும்
போலிப்போர்வைகளையும்|சன்னவிரலால் தொட்டுத்தொட்டு| உயிர்ப்பிக்க முயல்கிறது. என்ற வரிகள் மிகமிக ரசிக்க வைத்தன. எக்ஸலண்ட்!
நன்றி கணேஷ்:)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))