எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 11 பிப்ரவரி, 2016

சூன்யம் உரித்தல்

யாரும் குளிக்காத நதியோரம்
சிலும்பும் கரையோரப் பன்னீர்ப்புஷ்பமாய்
நினைவுகள் அலையடுக்கும்.
பாடமுடியாமல் போன
இராகங்கள் நினைந்து
கருவிலேயே உதிர்ந்துபோன
கவிதைகள் நினைத்து
இனமில்லா இனிய சோகங்கள் நினைத்து
இயலாமல் போன ஸ்நேகங்களை நினைத்து
மனமரம் நிகழ்ச்சிச் சருகுகள்
உதிர்த்து ஞாபகச் சுள்ளிகள் அடுக்கும்.
சூழ்நிலைச் ஜல்லிகள் புரட்டி
என் வெளித்தோற்றத்தைத் தார் பேர்த்து
சூன்யம் உரித்து எறும்பு ஒன்று
புற்றுதோறும் அலையும். 

-- 84 ஆம் வருட டைரி.

மனசு:-



மனசு:-

ஜன்னலெங்கும்
படங்கள்
வாயிலெல்லாம்
வளைவுகள்
வரவேற்கும்
ஆள் எங்கே?

வீடு முழுக்க
சுகந்தம்
இருட்டும் வெளிச்சமும்
திட்டுத் திட்டாய்
குளிரும் கதகதப்புமாய்
சுத்தத் தரையும்
மூலை ஒட்டடையுமாய்
யாருமில்லையா இங்கு.

கூட்டமும் நெரிசலும்
சத்தமுமாய்
வியர்வையும் ஏச்சுமாய்
வாங்கிக்கட்டி
சலனம் அடக்கமுடியாமல்
எங்கே ஓடிப் போனான்
இந்த வீட்டு ஆள்.?

-- 84 ஆம் வருட டைரி.

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

கண் கெட்ட பிறகு..

அட போங்க பாட்டி நீங்க ஒரு புத்தகம் படிக்க விட  மாட்டீங்க, ஒரு டிவி பார்க்க விடமாட்டீங்க. என்று சின்னப் பிள்ளையில் என் அம்மாவின் பாட்டியிடம்  சலித்துக் கொண்டிருக்கிறேன்.

ஏனெனில் எது செய்தாலும் பாட்டி பொஸ்தகமே சும்மா படிக்காதே, டிவிப் பொட்டியவே சும்மா பார்க்காதே. கண்ணு கெட்டுப் போயிடும், சோடாப்புட்டி கண்ணாடிதான் மாட்டப் போறே என சொல்வார். அது உண்மைதான்.

அளவோடு கண்ணை உபயோகப்படுத்தினால் எந்தக் கெடுதலும் வராது, சீக்கிரம் கண்ணாடி போட வேண்டாம் என்பதும் உண்மை.

இன்றைய கம்ப்யூட்டர் யுவன் யுவதிகளைப் பார்த்து நாம் எச்சரிக்கைப் படுத்தினாலும். கை வலிக்குது கண் எரியுது, கழுத்து பிடிச்சுகிடுச்சு என சொல்லும் பிள்ளைகள்.. ஹ்ம்ம் நாம கூட அப்பிடித்தான் கண் கெட்டுப் போனாலும் விடாம ப்லாக், ஃபேஸ்புக், எல்லாம் பார்த்துட்டு புக் படிச்சிட்டு, டிவி பார்த்துட்டு...கண் வலி, எரிச்சல், தண்ணி வடியிறது , அரிப்பு, வீக்கம்னு. ஒரே பேஜாரு. கண்ணச் சுத்திக் கருவளையம் தட்டி பேய்ப்பட பொம்மை மாதிரி முழிச்சிக்கிட்டு.

பவர் க்ளாஸ்ல பவர் ஏறும். ஆனா வெள்ளெழுத்துக் கண்ணாடிலயும் பவர் ஏறுதே.. இது என்ன மாயம்.. :)

கண்ணுக்கு இத்தனை தொல்லை என்றைக்கும் இருந்ததில்லை. இப்ப இருக்குறமாதிரி.. பாவம் கண்.. சூரிய நமஸ்காரம் பண்ண வேண்டாம். பார்த்து நடக்கக் கூட கண் வேணும்.. பார்ப்போம். என்னாகுமோ ஏதாகுமோன்னு.



திங்கள், 8 பிப்ரவரி, 2016

அடுத்தது யாரு..


அக்காவும்.. அஞ்சுமாவும்..:-
****************************************

”எக்கா விடு நீ நான் நறுக்கித் தரேன்.. ” அடிபட்டு கட்டுப்போட்ட  என் கையை பார்த்துச் சொன்னாள் அஞ்சுமா.. “ பொறுப்பா பார்ப்பா. ஆனா அடிக்கடி லீவ் போடுவா. என்ன செய்ய.

இருந்தும் இப்படி ஒரு ஆள் திரும்ப கிடைக்குமென நினைக்கவில்லை.. எந்த ஊருக்கு போனாலும் ஒரு வேலையாள் தேவைதான்.. ஆனால் சில ஊர்களில் பாதுகாப்பு காரணம் கருதி வைத்துக் கொள்வதில்லை.. வேலைக்கு ஆள் வைக்காமல் வேலை செய்பவர்களின் ( கணவர் கூட அலுவலகத்தில் வேலை செய்பவர்களின் மனைவிகள் )  சதி என்றும் சொல்லலாம்.. அவர்கள்தான் பாதுகாப்பு கிலியை கிளப்பி விடுவது.. அடிக்கடி ஊருக்கு போறோம்லப்பா.. இந்த மாதிரி ஊர்ல எல்லாம் கொஞ்சம் ரிஸ்க்குதான் என்று கலக்கி விடுவார்கள்.

இப்படி பல ஊர் சென்று ஒவ்வொரு ஊரிலும் தானாகவே கஷ்டப்பட்டு சமாளித்ததும் உண்டு.  சில ஊர்களில் தானாகவே ஆள் அமையும்..  அந்த வேலையாட்களுடன் சகோதரிகள் போல பழகியபின் ஒன்றுக்குள் ஒன்றாகி விடுவார்கள்.

என் கணவர் கூட கேலி செய்வார்.. பார் நான் கூட இல்லாம இருப்பே.. வேலைக்காரப் பெண் இல்லாமல் இருக்க மாட்டே என்று,

-- ஆமா எல்லா ஊரிலும் இப்படி ஒரு வேலைக்காரங்க அமையிறாங்க. அப்புறம் அவங்கள விட்டுட்டு வர்றதுக்கு ஒரே அழுவாச்சிதான். அப்புறம் நாம் இல்ல செய்யணும். இதெல்லாம் வீட்டுத் தலைவருக்கு எங்கே புரியப் போகுது. ஹ்ம்ம்ம்.

அஞ்சுமாவுக்கு முன்னாடியே தனம்மா, கஸ்தூரி, குமாரி, சகுந்தலா, லெக்ஷ்மி, இத்தனை பேரோடயும் பிரிய ஒரே அழுவாச்சிதான். அப்புறம் அஞ்சும்மாவையும் விட்டுட்டு அடுத்து பெங்களூர்ல கனகம்மா வந்தாங்க. அவங்களையும் விட்டுட்டு இப்போ நாமேதான் நம்ம வேலையைப் பார்த்துக்குறது. போட்டு போட்டு மெதுவா செய்துக்கலாம்னுதான். என்ன இருந்தாலும் வேலைக்காரங்க வந்து தினம் வீடு துடைச்சி பாத்திரம் கழுவி வைச்சிட்டுப் போனா ஜாலிதான் . பார்க்கலாம். அடுத்து யாரு வரப் போறாங்கன்னு :)

************************************************************

அட.. அடுத்து வந்தது மல்லிகாம்மா.. ! 

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

பீடிக்கும் நிழல்கள்.



நிழல்களற்ற மனிதன்
தென்படுவதேயில்லை எங்கும்.
முன்னும் பின்னும் வலமும் இடமும்
மேலும் கீழும் உருவி விழுந்து அவனைப்
பின் தொடந்துகொண்டேயிருக்கின்றன அவை

தொற்றியோ பற்றியோ இருக்கும்
அவற்றைக் கைவிடுவதில்லை
எல்லாவற்றையும் வீசி எறியும்
மனிதனும் கூட.

தன் இருப்பின் சாயலை
நிழலில் பொதித்து வரைந்து
இழுத்துச் செல்பவனின் பின்
உருவற்ற உருவமாய்
கலைந்த சாம்பல் மூட்டைகளாய்
அசைந்தபடி செல்கின்றன அவை.

கருஞ்சாந்தாய்க் கொட்டி அசையும் அவை
அவனைத் தவிர வேறேதோடும் ஒட்டுவதில்லை.
உடலோடு பிடித்தபடி அலையும் மனிதனின் பின்
அஸ்வத்தாமனாய் சாபமுற்றுக் கிடக்கின்றன
சாக்காடு மட்டும். சாம்பலாகும் முற்றும். 
 

Related Posts Plugin for WordPress, Blogger...