எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

உடல் – ஆன்மா :-



உடல் – ஆன்மா :-

தொட்டில் சேலை
பிள்ளை உறங்கும்.

விழுதுகளின் ஆதாரத்தில்
ஆல விருட்சம்.

நடராஜ நடனத்தில்
அபய முத்திரை

துவஜஸ்தம்பங்கள் எதிரே
கோயில்கள்.

கோபுரங்களுக்குக் கீழே
கருவறைகள்.

பயிர்களுக்குள்ளே
பச்சையங்கள்.

புகை வண்டிகளின்
தண்டவாளங்கள்.

மரத்தை வருடம் தப்பாமல்
பூக்க வைக்கும் வசந்தங்கள்.

முன்னது ஐந்துபேர்க்குச் சுமை
பெற்றவளையும் சேர்த்து.
பின்னதற்கும் முன்னது சுமை. 

-- 85 ஆம் வருட டைரி

முத்து மாமா.



பொன் வண்டு எழுந்து எழுந்து எழுந்து என காரின் டேப்ரெக்கார்டர் ஓட்டை வாயால் பேசியது. முத்து மாமா சொன்னார். அக்கா பார்த்திட்டே இருங்க. அடுத்தடுத்த வரியும் இப்படித்தான் பத்துத் தடவையாவது பாடும். பாட்டுப் பூராவுமே இப்படித்தான்.  சொல்லி வாய் மூடுவதற்குள் பூந்தேனில் கலந்து கலந்து கலந்து தொடர்ந்து அடுத்தடுத்த வரிகளும் இப்படியே சிரிப்புக்குப் புரையேறிப்போனது.

முத்துமாமாவின் திட்டம் மெட்ராஸ், திருத்தணி, திருப்பதி, காஞ்சிபுரம், பிறகு ஊருக்குத் திரும்ப என்று. ஆயிற்று. மெட்ராசில் வள்ளுவர் கோட்டம், அண்ணா சமாதி, பாம்புப்பண்ணை, அடையாறு ஆலமரம், கபாலி கோயில், ராதா சில்க் எம்போரியம். எல்லாம் பார்த்தாயிற்று.

அடுத்துத் திருத்தணி புறப்பாடு. சாமி பார்த்து தரிசனம் பண்ணி மாலை  அபிஷேகம் அர்ச்சனை சந்தனக் காப்பு என்று ப்ரம்மாதப்படுத்திட்டுத்தான் புறப்பட்டார் மாமா.

***********************************************

மனசுக்குள் எந்தக் காரியத்திலேயும் ஒரு பயத்தோட ஈடுபடுறவந்தான் மென்மையானவனா இருக்கான். அந்தப் பயமே அவனை சிந்திக்க வைக்குது. இரக்கமுள்ளவனா ஆக்குது.

--- அரைகுறை சிறுகதை.. 85 ஆம் வருட டைரி.  


புதன், 3 பிப்ரவரி, 2016

மழை அல்லது ஸ்வயங்கள் :-



மழை அல்லது ஸ்வயங்கள் :-

முக்கணமும்
முப்பொழுதும்
நீயேயாகி
யாருடன் இந்த விதண்டாவாதம்
உனக்குள்ளே முரண்பாடா ?
முணுமுணுக்காமல்
உரத்துச் சண்டையிடு
ஜன்னலோரத்துச் சொட்டே
நீ கூட்டத்தோடு கோவிந்தாவல்ல
தனுமை.. தன்மை.. தனிமை
குதிரையின் பாய்ச்சலாய்
வேகம் அதிகரிக்கச் சண்டையிடு.
உன் லகான் நீயே.
கொடுத்தலும் கெடுத்தலும்
உன் லயம்.
குழந்தையின் விருப்பப்பட்ட
ஸ்பரிசமாய்
பயிர்களின்
பச்சையம் வெளிப்படுதலாய்
தூரத்தில் நடக்கும்
மலையின் பூகம்பமாய்
மயானம் செல்லும்
சவ ஊர்வலமாய்
நீயும்.

--- 85 ஆம் வருட டைரி

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

மனச் சூல்



மழை மரங்கள்
வெளியே சரம் எறிய
மனமும் சூல் கழட்டி
மகரந்தம் கோர்த்தது.

டெர்ரஸ் பாலைவனங்களில்
மழை விதை பாத்தி கட்டும்.

மாடியோர விளிம்புகளில்
ஊஞ்சலாடும்.

சபைக் கவிஞர்கள்போல்
சிம்மாசனமிட்டு அமரும்

ப்ரிய ராகங்களாய்
உரக்கப் பாடும்.

காதருகே
சந்தோஷம் முணுமுணுக்கும்.

மேகப் பசுக்கள்
மழைப்பால் கறக்கும்.

செடியோ புதிது
புதிதாய்ப் பூவுதிர்க்கும்.

கை பாய வரும்
குழந்தையாய்க்
கலகலக்கும். 

சித்திரையில் பரிசமிட்டு
ஐப்பசியில்
மண் மணக்கும்
.
காற்றோடு கலந்து
திரும்ப வந்து
மனம் மகரந்தம்
கோர்த்து சூல் மூடிக்கொள்ளும்.

-- 85 ஆம் வருட டைரி

மூளையைக் காயப் போடு.



மூலையோரத்து
மடித்துத் தொங்கும்
கந்தையாய்
மூளையைக் காயப் போடு.
கருவில் உறங்கும்
ஸ்வயங்களை
உதிர்த்துப் போடு
மனதில் உறையும்
புகைப் (புகழ்ப் ) போர்வையைக்
கழற்றி எறி.

--- 85 ஆம் வருட டைரி 

Related Posts Plugin for WordPress, Blogger...