ஒளி படைத்த கண்ணினாய் வா ! வா ! வா! – 1
கண் வானத்தில்
நீர் மேகங்களின் உலாவல்கள்.
வெள்ளத் தேங்கல்கள்
துன்பச் சுடரின் பிம்பங்கள் ஆயிரம்.
கண்ணீரைக் கொட்டிக் கொட்டியே
காய்ந்துபோன கன்னியரின்
கண் எரிச்சல்கள்.
தண்ணீரில் மூழ்கி
அதுவே வாழ்வென
எண்ணி ஏமாந்துவாழும்
காளையர் கும்பல்கள்.
மண்மாதா தன் மடிபாரம்
தாங்கமல் விழுங்கிய
பட்டினிச் சாவுகள்.
சவ ஊர்வலத் தொகுதியில்
குடிவெறியர்களின் வாக்குறுதிகள்.
குடிகாரன் பேச்சு
விடிஞ்சாப் போச்சு
அவமானத்தையே தன்
ஏகபோக சொத்தாகப்
பிள்ளைகளுக்குப் பிரித்துப்
பத்திரம் எழுதி
வைத்துவிட்டுப் போகும்
அஸ்தமனச் சூரியன்கள்.
நாடு எங்கே செல்கின்றது ?
இங்கே கண் கெட்ட பிறகுகூட
சூரிய நமஸ்காரம் இல்லை.
இத்தகைய சிப்பியில் முத்தும் பிறக்குமோ ?
இந்தச் சேற்றில் செந்தாமரையும் மலருமோ ?
நாட்டை நல்ல நிலைமைக்கு
இட்டுச் செல்லும்
நல்ல கனவுகள் கூட வருவதில்லை
இந்தக் கண்களில். !
ஒரு கனவை விலைக்கு
வாங்கினேன்.
அந்த ஊமை நாடகத்தில்
இந்தப் பட்டுக் கனவுதன்
சிட்டுச் சிறகை
விரித்துப் பறக்கின்றது
ஓர் உதயத்தை நோக்கி. !
அந்த உதயத்தில்
அந்த உதயத்தில்
நம்பிக்கையூட்டும்
இரு ஒளிபடைத்த
அழகிய முத்துகள்
இமைக் கதவுகளுக்குள்
விரிகின்றன.
அவற்றின் மேல் எனக்கொரு
நம்பிக்கை. !
ஒரு நல்ல எதிர்காலத்தை
ஒரு நல்ல எதிர்காலத்தை
அமைக்க அவற்றிற்கு
வல்லமை உண்டு.
ஒளிபடைத்த கண்ணினாய்! வா ! வா! வா!.
உன் வரவால் இந்தக் குருட்டு நாடு
ஒளிபெற்றுக் களிப்படையும்.
சிறப்படையும். !
-- 85 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))