வார்த்தைகள்
கிணற்றில் உருளும்
சகடைச்சத்தமாய்
காற்றில் கலந்த வார்த்தைகள்
மழைபெய்த நீரில் விழுந்து
மண்ணை அப்பிச்
சேறுபடிந்த வார்த்தைகள்
நாய்ச்சண்டையின்
குரைத்தலாய்
சத்தமிட்டுக் கத்திக் குரலெழுப்பி
ஊளையிடும் வார்த்தைகள்.
போகன் வில்லாக்கள்
குரோட்டன்ஸுகளுடன்
பேசி மகிழும் காகித வார்த்தைகள்
பேப்பரில் கிறுக்க
வேசித்தனமாய்க் காசு பேசும்
வியாபார வார்த்தைகள்.
அருமையுணராதவர்
வாயிலகப்பட்டுக் கிழிந்து
குருதி கொப்பளித்து கற்பழிந்து
உருச்சிதைந்த வார்த்தைகள்.
கனவுகளைப் புதைத்துக்
கற்பனையைத் தட்டியெழுப்பி
காலச்சுழியில் சுருண்டலையும்
தண்ணீர் வார்த்தைகள்
பவுடர் பூசிப் பட்டணிந்து
பளபள நகையுடன்
செண்ட் மணக்க மேல்வந்துவிழும்
ஆடம்பர வார்த்தைகள்.
மனிதனை அதிர அடித்துக்
கலங்கவைத்து ஆட்சி செலுத்தும்
ஆக்ரோஷ வார்த்தைகள்
வெற்றிலை புகையிலைச் சுருளை
கடைவாயில் அடக்கிக்கொண்டு
குடிசையோரக் கட்டிலிலிருந்து
குசலம் விசாரித்து மனசை
நிற்க வைக்கும் அன்புவார்த்தைகள்
மெல்ல அருகமர்ந்து
கூந்தல் தடவி
மிருதுவாய்ப் பார்த்து
கண்ணீரை வழித்துக்
கையைத் தொட்டு
நேசம் விசாரிக்கும் சத்தம் செத்த
மௌனவார்த்தைகள்.
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி
4 கருத்துகள்:
வார்த்தைகள் என்னவெல்லாம் செய்கிறது... சும்மாவா சொன்னார் வள்ளுவர் "சொல் வன்மை" பற்றி...
போகன் வில்லாக்கள்
குரோட்டன்ஸுகளுடன்
பேசி மகிழும் காகித வார்த்தைகள்// அருமை!...
வெற்றிலை புகையிலைச் சுருளை
கடைவாயில் அடக்கிக்கொண்டு
குடிசையோரக் கட்டிலிலிருந்து
குசலம் விசாரித்து மனசை
நிற்க வைக்கும் அன்புவார்த்தைகள்// டாப் வார்த்தைகள்..
வார்த்தைகளில் தான் எத்தனை விதம்...
ஆம் டிடி சகோ
நன்றி துளசி சகோ & கீத்ஸ்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))