எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

குதிரைச் சோம்பல்



ஞாபகங்கள்
கனைத்துக் கனைத்துக்
களைத்துக் கம்முகின்றன.

அழுக்குப் பனி
கையில் காலில் அப்பி
விரைக்க வைக்கும்.

மாடிப்படிகள்
கால் தின்று
புழுதி குடித்து
அலுத்துப் போகும்.
மரம் ஆயாசம் பூசி
அயர்ந்து குந்தும்

மண்டைக்குள்
குதிரை சீறிச் சீறி
பெருமூச்சு விட்டுக்
குடையும்.

குதிரை ஓடச்
சோம்பலிட்டு
லாயத்துள் அடைந்து
கொள்ளும்
கால்களை ஒடுக்கி
ஓடுதல்களை மறக்கும்.

துரத்துபவைகளுக்கு
உடல் விரைத்து
ரோமம் சிலிர்த்து
கறுப்பு நக்ஷ்த்திரம்
ரெண்டு காட்டிவிட்டுக்
கமுக்கமாகும்.

புல்ப்பாசத்தை
விட்டொழிக்கும்
கனைத்துக் கனைத்துக்
கம்மிக் கிடக்கும்.

சில குதிரைகள்
சமயம் சமயம் வந்து
குசலம் விசாரித்துப் போகும்.

விதவையான பெண்ணாய்
கிழட்டுக் குதிரை
வெள்ளைக் கடிவாளம் கட்டி
லாயத்தில் ஆணி அடித்து
மாட்டிக் கொள்ளும்.

பச்சையம் மறக்கும்
நீலசுகந்தம் மறுத்துக்
குருடாகும்

வீட்டுக்குள் தூங்க
சேணபர்தா போட்டுக்கொள்ளும்.
வரப்போகும் புருஷனுக்காய்.

வாசற்படிகள் கோலம் மறந்து
புழுதிச் சிக்குப்
பிடித்துப் போகும்.

குதிரை 
சோம்பலாய்
உடல் நெளித்து
லாயத்திலே இருத்தியிருக்கும்.

-- 82 ஆம் வருட டைரி. 

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

புல் பாசமா...? Full பாசமா...? ஹிஹி...

Thenammai Lakshmanan சொன்னது…

தனபாலன் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...