--29.10.1984.
AGRICULTURAL COLLEGE MADURAI
வினாக்குறிகள் வியப்புக்குறிகள் ஆகட்டும்.
வினாக்குறிகள்
விடை தெரியாமல்
மொட்டையாய் விழிக்கும் வினாக்குறிகள்.
இங்கே இருப்பவர்கள்
கேள்வி கேட்கவும் ஆணையிடுவதற்கும் மட்டுமே
பழகியிருக்கிறார்கள்.
கேட்பது அவர்களின் உரிமையாம்.
பதில் என்னவானால் என்ன?
கேட்கப்பட்டுக் கேட்கப்பட்டுப்
புரையோடிப்போன வினாப்புண்கள் ஏராளம்.
சீழ்க்கட்டியறுக்க யாருமில்லை.
அலையின் அலைச்சலாய்ப்
புறப்படும் கேள்விகள்.
புறப்படும் கேள்விகள்.
பூவைக்கண்டு மணம் நுகர்ந்து
கும்மாளமிட்டதெல்லாம் கலைந்து போய்விட்டது.
அதன் வேரின் அலைச்சல் எங்குவரை
எனக் கண்டுபிடிப்பதே பரிதவிப்பாய் ஆனது.
குதிரையின் பாய்ச்சலாய்
முகம் கீறும் கேள்விகள்.
முகம் கீறும் கேள்விகள்.
மலர்ந்த முகங்களைப் பார்த்துப்
பரவசப்பட முடியவில்லை
இதற்குள்ளும் எத்தனை போலிகள் இருக்குமோ
இதற்குள்ளும் எத்தனை போலிகள் இருக்குமோ
வானில் இந்த நிமிடம்
சாசுவதமாகத் தோன்றிய மேகக் குவியல்கள்
துணுக்குகளாய்த் தூரதேசம் பறக்கின்றன.
மலை சரிவதாய்ப் புரளும் கேள்விகள்
தொடுக்கப்பட்ட கேள்விகளையே
சரிவரப் புரிந்துகொள்ள முடியவில்லை
அந்த ஸரஸ்வதியோ இன்னும்
வீணை மீட்டிக்கொண்டிருக்கிறாள்.
சிந்தனைச் சாட்டைகளுக்கு
உடல் வலித்ததுபோல்
அவளுக்கும் விரல்கள் வலிக்காது.
கேள்விகள் கேள்விகள் கேள்விகள்
உடம்பைச் சுற்றிலும் முள்வேலிகளாய்ச்
சுட்டுப் பொசுக்கும் நெருப்புக் கோளமாய்
விறைக்க வைக்கும் பனிமழையாய்
அறைந்து தள்ளும் சூறைக்காற்றாய்
வாய்பிளந்து அனைத்தையும் விழுங்கும்
பூகம்பமாய் கேள்விகள் கேள்விகள் கேள்விகள்
கண்ணுக்கு முன்னே எங்குபார்த்தாலும்
மின்மினிப்பூச்சியின் பறத்தலாய்த்
தொங்கி நிற்கும் வினாக்கள்
இங்கு எல்லாமே குழப்பமாக இருக்கிறது.
பதிலை உருவாக்க முயன்று தோற்றுக்
கேள்விகளையே தரம் பிரித்து
அர்த்தமற்றதாக்கி விடுகின்றார்கள்
ஆகாயத்தின் வேர்கள் எங்கு வரை
கிளை பரவி இருக்கும்
கேள்விகள் கேட்பதையே
அதில் அமிழ்ந்து கிடப்பதையே
போதையாகக் கொண்டு
சுகம் கண்டு திரியும் கும்பல்கள்
விடை தேட முயற்சி எடுக்காத
புல்தடுக்கிக் கும்பல்கள்.
முயற்சியில்லாமல்
தடைகளில்லாமல்
வெற்றி கிடைக்குமா என்ன?
விடைகளை விற்கின்றார்கள்
உங்களைப் போன்ற வினாப்பிரியர்களுக்கு
என்றால் சகாயவிலைக்கு எங்கே கிடைக்கும்
என வினவும் மனிதர்கள்
நமக்கேன் அதைப்பற்றி
என்றிருக்க முடியாமல் சில
அறிவுபுடைத்த வக்கிரங்கள்
மீண்டும் மீண்டும்
தோண்டிக்கொண்டே இருக்கின்றன.
உணவைக்காணாவிட்டாலும்
உணவைக்காணாவிட்டாலும்
மண்ணைக்கிளறும் கோழியின் தாபமாய்
இப்படியும் இருக்கக்கூடும் என்ற
யூகங்களை நம்பமுடியாமல் போகிறது.
இருக்கலாம் என்பது அறியாமையால் விளைந்து
தலை குனிய வைக்கின்றது
இருக்கவேண்டும் என்ற உறுதியான பதில்
இருக்கின்றது என்ற விடை
எப்போது கிடைக்கப்போகிறது
சிப்பி புதைத்துவைத்த
மழைத்துளி என்றாவது ஓர்நாள்
முத்தாய் மாறும்.
அப்போது அறிவு வக்கிரங்களின்
தொடந்த மோதலால்
விரிந்தும் விரியாமலும்
புரிந்தும் புரியாமலும்
உணர்ந்தும் உணராமலும்
உண்மையின் வாயில்கள் திறந்து
கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.
தூரத்துப் பச்சையின் உண்மை புரியும்
அப்போது வினாக்குறிகள்
வானும் மினுக்கும் ஜிகினா நட்சத்திரமாய்த்
தோலுரியப்பட்டு
வியப்புக்குறிகளாய்ப்
புது நட்சத்திர மண்டலமே உருவாகும்.
3 கருத்துகள்:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
அருமை...
முயற்சி + பயிற்சி = என்றும் வெற்றி...
நன்றி தனபாலன் சகோ :)
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))