அனாரைத் தராதீர்கள்:-
****************************** ****
வெள்ளை மாதுளையைவிட
இரும்புக்கத்தி கீறி
ரத்தச் சுவையுடனிருக்கும்
செம்மாதுளையைப் பிடித்திருக்கிறது.
இனிப்பாய்ப் பல இருக்க
உவர்ப்பும் துவர்ப்புமான இதைக்
காதல்கனியாய்ப்
பரிந்துரைத்தது யார்?
சமாதிக்குள் புதையுறும்
இதயத் தமனி(ணி)களாய்
சிவந்து கிடக்கிறது மாதுளை
துடிதுடிக்கும் காதலில்.
நேசிக்கும் இதயத்திலிருந்து
வடியும் குருதித் தணலை
ஒத்திருக்கிறது அதன்
அடர்த்தி ரசம்.
கசங்கிக் கலைந்த
இதயங்களின் கனவைப்
பிரிப்பது போலிருக்கிறது
சுற்றிய வெண்தோல்.
மாதுளம்பூ நிறத்தாள் என
அண்டமெல்லாம் விரிந்தாளைப்பாடுவது
அசந்தர்ப்பமாய் இருக்கிறது
காதலில் புதையுண்டவளை நினைவுபடுத்தி.
நிறையப் பேரைக்
காதலித்துப் புதைத்துவிட்டுக்
கையறு நிலையில் தெய்வங்களாய்
வணங்கிக் கொண்டிருக்கிறோம்.
எனக்காய் யாரும் அனாரை
வாங்கி வராதீர்கள்.
காதல்களிலும், காதலிக்கப்படுவதிலும்
எனக்கு நம்பிக்கையில்லை.
சரித்திரச் சின்னங்கள்
நேசிப்பவர்களின் பிணத்தின்
மீதுதான் எழுப்பப்படுகின்றன.
உங்களை நேசிப்பவர்களாகக்
கருதும் யாருக்கும்
அனாரைத் தராதீர்கள்.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))