எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 ஜனவரி, 2013

வாலில்லாமல்..

வாலில்லாமல்:-
***********************

எறும்புத்தின்னி
பல்லி., ஓணான்.,
உடும்பு., முதலை
வால் சுழற்றித் திரியும்
இவை பார்த்து பயந்து..

வாலில்லாமலே
ஆள் சுழற்றும்
கோரைப் பற்களும்
முற்களும் கொண்ட
பிராணிகளோடு வாழ்ந்தும்

தேடல்

எதையும் ஆராய்வதில்லை
தேனி
தேனுக்கான தேடல் தவிர..

புதன், 30 ஜனவரி, 2013

விட்டில் பயணம்

இறக்கைகள் பற்றியெரிய
இறப்போமென உணர்ந்தாலும்
ஒளியை நோக்கிப்
பயணப்படுவதைக்
கைவிடுவதில்லை விட்டில்கள்.

நட்சத்திரப் பூக்கள்

இருள் கூந்தலிலிருந்து
விடிய விடிய உதிர்கின்றன
நட்சத்திரப் பூக்கள்.

செவ்வாய், 29 ஜனவரி, 2013

ஊர்பவை

வெளிச்ச வாயால்
எதிர்வரும் சாலையைப் பிடித்துண்டு
இருளில் உமிழ்ந்து செல்கின்றன
மண்புழு ஊர்திகள்..

இந்த மரத்தின் வேர்கள்.

இந்த மரத்தின் வேர்கள் ஆழமானவை
அடுத்தடுத்து வெட்டுப் பட்டபோதும்
நீர் மறுக்கப்பட்ட போதும்
நிழலை சுருக்கிக் கொண்டதில்லை.

இந்த மரத்தின் வேர்கள் ஆழமானவை.
முண்டு முடுச்சுகள் செதுக்கப்பட்டபோதும்
முள்ளெலிகள் குடைந்தபோதும்
உடையாத உரம் பாய்ந்தவை.

இந்த மரத்தின் வேர்கள் ஆழமானவை.
காற்று அசைத்தபோதும்
கனல் சிதைத்தபோதும்
மூழ்கிப் போவதில்லை.

இந்த மரத்தின் வேர்கள் ஆழமானவை.
எல்லா நன்மைகளும்
எல்லாத் துன்பங்களும் கடந்து
யுகங்களாய்க் கிளைப்பவை.

இந்த மரத்தின் வேர்கள் ஆழமானவை
ஒரு நிமிட பெயர்த்தல்கள்
ஒரு கணத்தின் சலனங்கள்
கடந்தும்  உயிர்த்திருப்பவை.

திங்கள், 28 ஜனவரி, 2013

மிகவும் மிகவும்.

மிக நீண்ட நாட்களாகிவிட்டது
மிக அருமையான கவிதை புனைந்து
மிக ருசியான காப்பி அருந்தி
மிக நேர்த்தியான உடைகள் அணிந்து
மிக லாவகமாக உன் கண்களைக் கவனித்து..

மிக நீண்ட நாட்களாகிவிட்டது
மிக வேகமான சொற்களோடு
மிக இடைவெளியில் தள்ளி அமர்ந்து
மிக ஆர்வத்தோடு கை கோர்த்து
மிகப் பசியோடு உணவை உண்டு..

மிக நீண்ட நாட்களாகிவிட்டது
மிக அணைப்பில் வாசம் உணர்ந்து
மிக அவசரத்தில் கூடிப் பிரிந்து
மிக இன்பங்களை அள்ளிச் சுவைத்து
மிகவும் மிகவும் அவசரத்தோடு கடக்கிறோம்

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

தேவையற்றவை.

பயிர்களுக்கிடையே களை..
பூக்களின் கீழ் முள்..
தேவையற்றுக் கிளைத்து
தேவையானவற்றின்
மகத்துவத்தை அதிகப்படுத்தும்..

புதன், 23 ஜனவரி, 2013

பாரா உஷார்.

பூட்டிக் கிடக்கும்
புராதன இல்லங்களை
தினக்காவலனாய் கண்காணித்துப்
புகுந்து  செல்கிறது வெய்யில்.

செவ்வாய், 22 ஜனவரி, 2013

சத்தம்.

பேசுவதே இரைச்சலாய்க்
கருதப்படும் வீட்டில்
காற்றிசைச் சிணுங்கியும்
நேரமிசைக்கும் கெடிகாரமும்
வெறுப்புடன் எதிர்க்கப்படும்
செல்லப்பிராணி வளர்ப்பாய்.

திங்கள், 21 ஜனவரி, 2013

துண்டு..

நிலாத்துண்டு
விழுந்துகிடந்தது
முற்றத்தில்.
ஒற்றை ஓரத்தைப்
பிடித்திழுத்தபடி தூங்கி
விழித்தபோது அது
வெயில் துண்டாய்
மாறி இருந்தது

வெள்ளி, 11 ஜனவரி, 2013

யாசகம்.

சம்புகன் என்ன
கர்ணன் என்ன
ஏகலைவன் என்ன
பொறாமை சுமந்த
குருமார்களின்  யாசகமாய்
உயிர், வித்தை, விரல்.

புதன், 9 ஜனவரி, 2013

தாம்பத்யக் குகை.

உனக்குத் தெரியாமல்
உன்னை அரவணைத்திருக்கின்றன
என் கைகள்.
நீ சண்டையிடுவதையும்
மண்டியிடுவதையும்
காதலாக்குகிறது மனம்
உன் அன்பைப் போல
கோபமும் ருசிக்கிறது
வெந்நீர் ஊற்றுக்களாய்
குமிழ்விடும் உன் கோபம்
தகிக்கிறது என்னை.
கதகதப்போடு
முடங்கிக்கிடக்கும்நான்
உன் அன்பின் கைகள்
என்னை மூழ்காமல் பிடித்தபடி
நீள்வதை உணர்கிறேன்.
விடிகாலைப் பனியில்
வாசனையற்ற ஆவியாய்
நம்மையறியாமல்
வெளிப்படுகிறது இதம்.
யுகங்கள் பலவாய்
பனிப்பாறைகளாகவே
வாழ்ந்து மடிகிறோம் நாம்
தாம்பத்யக் குகையைக் காத்தபடி.

உப்பு

நிறைகிறது உழவுக் கிணறு.
உப்படைத்த மீன்களாய்
மிதக்கும் மனிதர்கள்.

உடைக்குறை(றி)ப்பு..

செல்கின்றன அச்சாலைகளில்
ஊர்வலங்கள் அன்றும் இன்றும்
உடைகுறை(றி)ப்புப் பற்றி
ஆவேசத்தோடு.

செவ்வாய், 8 ஜனவரி, 2013

சம்சாரம்

சாலையில் உயர்ந்திருக்கும்
மின்கம்பிகள்
வீட்டைத் தொட்டதும்
சுவற்றுக்குள்
ஒளிந்து கொள்கின்றன.
அல்லது ஒளிக்கப்படுகின்றன.
சாமிகள் கோயில்களுக்கானவை.
பல்லக்குத் தூக்கிகள்
மட்டுமே தாங்கலாம்.
மனிதர்கள் வணங்கலாம்.
அல்லது மாசுபடுத்தலாம்

திங்கள், 7 ஜனவரி, 2013

மழை இதழ்கள்

மேகமுடிச்சவிழ்ந்து
உதிர்கின்றன
மழை இதழ்கள்..

அசை

சாணம் பூசிய கட்டுத்துறையை
பாசம்பூசிய விழிகளோடு
அசைபோட்டுக் கொண்டிருக்கிறது மாடு.

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

பிணைப்பு

அதன் கிளைக்கே
திரும்புவதாய் உறுதியளித்ததும்
இறக்கை விடுவித்துப்
பறக்க அனுமதிக்கிறது
ஆலமரம்.

சனி, 5 ஜனவரி, 2013

புள்ளிகள்.

புள்ளிதான் நான்.
புள்ளி மட்டுமே நான்.
புள்ளியாகவும் நான்.
புள்ளிகளோடு புள்ளிகளாக
அட.. நானும் ஒரு புள்ளி..
கரைகின்ற புள்ளிகளில்
ஒரு மழைப்புள்ளியாகவும்.

மூன்று.

பொரி தின்னும்
மீனுக்கு மீன்.
தின்னவியலாமல்
திகைக்கிறது ஒன்று.
திரும்ப இயலாமல்
சிக்கிக் கிடக்கிறது இன்னொன்று.
இரண்டின் சிக்கல்களையும்
மூச்சடக்கிய சிரிப்போடு
கடக்கிறது வேறொன்று.

வெள்ளி, 4 ஜனவரி, 2013

குதிரை எறும்பான கதை.

இறக்கைக் குதிரை
ஒன்பதாம் மேகத்திலிருந்து
மழையாய் இறங்கி
சாலையோரப் புற்றைக் கலைத்து
சிதறிச் சுவர் மேல் ஓடி
நுணர்கொம்புகளோடு
தன்னைத்தானே தேடியலையும்
இலக்கற்ற எறும்பாகிறது.

வியாழன், 3 ஜனவரி, 2013

ஓவியங்கள் வரையும் ஓவியங்கள்.

கிறுக்கல்கள் என்கிறார்கள்
ஒற்றை வார்த்தையால்
எல்லாம் சிதைக்கும் மனிதர்கள்..
சிறுமி ஓவிய நோட்டில்,
பட்டாம் பூச்சிகள் காற்றில்,
பறவைகள் மரங்களில்.,
சாரல் சுவர்களில்
வரையும் ஓவியங்களை..

புதன், 2 ஜனவரி, 2013

ஊடுருவல்

ஊடுருவும் கதிர்கள் தொட்டதும்
உண்டு செமித்து விடுவாளோவென
வயிற்றுள்ளே துடிக்கிறது
உருப்பெற்ற ஒரு இதயம்.

குறுந்தகவல் பலகை

நினைவுகளைப் பதித்து
வார்த்தைகளை
அழித்துக் கொண்டிருந்தது
குறுந்தகவல் பலகை..

செவ்வாய், 1 ஜனவரி, 2013

இலை வாழ்வு.

இலை வாழ்வு..
*********************
முடிவில்லாத வெளியில்
இறக்கைகள் இல்லாத  பயணம்.
ஒவ்வொரு கோள்களிலும்
ஒவ்வொரு ரூப ஜீவிதம்.
கோபமும் காமமுமற்ற
நீள்வெளியில் யாதுமற்ற ஒன்றாய்
யாதுமாய்..
அறியாதது போல்
தழுவும் காற்று
வழியும் நிலவு,
ஒழுகும் மழை.
மின்மினிப் பூச்சிகளும்
சில்வண்டுகளும் கிசுகிசுக்க
பயணம் தொடர்கிறது
பழுத்தாலும் தேங்காமல்
Related Posts Plugin for WordPress, Blogger...