என் மனம் உனக்குப் புரியாதா ?
உன்னை நான் சந்தித்த முதல் சந்திப்பு
இதயத்தின் ஊமைப்புலம்பல்கள்
கனவுகள் கதறும் ஓலங்கள்.
உன்னை விட்டுப் பிரிந்துவிட்டதாக
உன்னிடமிருந்து என்னைப்
பிரித்துக் கொண்டதாக
மற்றவர் பொறாமைத்தீயால்
கூறும் கட்டுக் கதைகளை
நீ கூட நம்பத் தயாராகிவிட்டாயா ?
உன்னில் ஒவ்வொரு அங்கத்திலும்
உயிரிலும் ஆன்மாவிலும்
அனைத்திலும் ஆக்ஸிஜன் போலப்
பரந்து கிடக்கின்ற
என்னைப் பிரிப்பது அத்தனை சுலபமா ?
இதை நீ நம்பிவிட்டாயோ என
நினைக்கப் பயமாக இருக்கின்றது.
நம்பிவிடுவாயோவென்ற பதற்றம்
கரையான் போல் மனதை அரிக்கின்றது.
உன்னைவிட்டால் நான் எங்கு போவேன் ?
எனக்கு யாரைத் தெரியும். ?
எனக்கு யாரிருக்கின்றார்கள் ?
உன்னைத் தவிர.
ஆயிரக்கணக்கான பந்தங்கள்
அடுத்தடுத்து வந்தென்ன ?
ஆனால் உன்னைப் போல ஒருவர் எனக்கு எப்படி ?
வரமுடியும் ?
என்னை உன்னிடம் முழுமையாக ஒப்படைத்தும்
நீயே நம்பாதபோது
தோழமைக்குள்ளே
சந்தேக வித்து
முளைத்துப் பயிராகி
விட்டபிறகு
என்னை யார்தான்
நம்புவார்கள் ?
உன் ஒவ்வொரு அணுவிலும்
நான் இரண்டறக் கலந்து
இருப்பது போல்
என்னிலும் நீ
ஒன்றிவிட்டாயே !
உன்னை
என்னிலிருந்து
எப்படிப்
பிரிப்பேன் ?
என்னால் முடியக்கூடிய
விஷயங்களைத்தான்
முயற்சி செய்ய முடியும்.
முடியாத விஷயங்கள் என்றால்
ட்ரை பண்ணவே மாட்டேன்.
உன்னால் என்னை
ஒட்டடையைத் தட்டுவது போல்
தூசியை ஊதி விடுவது போல்
எளிதாக உதற முடியுமா?
ஆனால் எனக்குத் தெரிந்து
நான் உணர்ந்ததிலிருந்து
உன்னிடத்தில் என்னைப் புரிந்த
என் அன்பை உணர்ந்த
மனம் என்ற ஒன்று இருப்பதாக நினைக்கின்றேன்.
உன் அன்பை எண்ணி நான்
இறுமாந்து களிப்புடன் திரியும் வேளையில்
இந்த இடியா ?
நீ எனக்கு நல்ல விதமாய்ப் பதில் கூறுவாய் என்பதால்
கொஞ்சம் அவகாசம் கொடு.
உன் வார்த்தைப் பூக்களைப் பொறுக்குவதற்கு
என் மனக்கூடையைத் தயார்ப்படுத்திக் கொள்கிறேன்.
- 85 ஆம் வருட டைரி.
2 கருத்துகள்:
அருமை! தொடர வாழ்த்துக்கள்!
நன்றி சுரேஷ் சகோ
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))