எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 ஜனவரி, 2012

ஆதியந்தம் அற்ற பிறப்பு.

ஆதியந்தம் அற்றவர்க்குப்
பிறப்புக் கொடுக்கிறாள் அனுசூயை..
பேறுகாலத் தாயுடலின்
தனங்களிலிருந்து பெருகுகிறது தாய்மை..

என் பிள்ளை யாழகிலன்.

புத்தகப் பிணங்கள்

எரிந்த யாழருகில்

புத்தனின் கண்ணீரோடு

உன் அழுகை..



பாசத்தால்

பற்றியெறிந்த என்னை

நீ தேடித் தேடித்

தாயாய்ப் பற்றி..



அன்றாடக் கடமைகளோடு

அவ்வப்போது தலை நீட்டும் நான்

உன் அழுகை கண்டு

பரிதவித்து.



பதில்களற்று கடக்கும் என்னை

பொய்யாக வருவதாக

போலியாக பேசுவதாக

சுவறெல்லாம் கிறுக்குவாய்..



பேர் மாற்றி ஊர் மாற்றி

ஒருநாள் பாலையும் மாற்றி

சென்றகணம் உனை தூக்கிப்

போட்டேன் இதயத்திலிருந்து.



பதறிப் பதறி நீ

கதறி நின்றபோது

வினவினேன்

நீ ஆணா பெண்ணாவென்று.



புத்தகங்களின் மிச்சத்தோடு

கருகிய யாழில் கிடக்கும் நீ

எரியாமலிருக்கவே அடையாளம்

மாற்றுவதாய் அரற்றினாய்.



ஷெல்லுக்கெல்லாம்

சிதை தப்பி

மனக்கசங்கல்களோடு

நிற்கும் யாழறுந்த அகிலமே



எடுத்தெறிந்ததற்கு வருந்தி

எடுத்தென் பிள்ளையாய்

அணைத்துக் கொண்டேன்

யாழகிலா உன்னை..

அன்னையர் தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள். . வாழ்க வையகம் போரின்றி.. வாழ்க வளமுடன்.


திங்கள், 30 ஜனவரி, 2012

செல்ல விளிப்பு..

நீ சிறுவனாகும்போதெல்லாம்
சிறுமியாக்குகிறாய் என்னையும்..
விளையாடத் துவங்குகிறோம்
செல்ல விளிப்புகளால்..

உடல் எழுத்து.

நீ எழுதாதவற்றையும்
படிக்கக் கற்கிறேன்
உன் உடல்மொழியில்..

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

உன்மத்தச் சிலை

உளியில்லாமலே
உளம் செதுக்கி
உன்மத்தமாக்குகிறது
உன் உருவச்சிலை..

வாலசைக்கும் நாய்க்குட்டி

உன் நிலைத் தகவல் பின் ஓடி
வாலசைத்து விரும்புகிறேன்., (like)
நான் ஹட்சின் நாய்க்குட்டி..:)

சனி, 28 ஜனவரி, 2012

தீயில் குளித்த தளிர்கள்.


உதிர்கின்ற இலையெல்லாம்
பழுத்து நீரில் உதிர்வதில்லை
சில தீயில் குளித்தும், தீயைக் குடித்தும்

நகர மிருகம்.

நினைவில்
நகரம் பதிந்த மிருகத்தாலும்
அழிக்க முடிவதில்லை
காங்கிரீட் பரபரப்பை..


வியாழன், 26 ஜனவரி, 2012

கணவனும் காதலியும்.

கைபேசியின் கனிவுப் பேச்சில்
காதலன் காதலியாகிறோம்
நாம் கணவன் மனைவி
என்பதை சிலகணம் மறந்து..



ஆண்மையின் தாய்மை.

இணையின் இமைநீர் துடைத்து
அரவணைக்கும் போது
ஆண்மையிலும்
கசிகிறது தாய்மை.

புதன், 25 ஜனவரி, 2012

கோலமிடும் தோகை

வெள்ளைக் கோலமாவில்
உயிர்பெறுகிறது தோகை..
அதிகாலைச் சூரியன்
தங்கக் கோலமாக்குகிறது
கோலமிடும் தோகையை.

சுழற்சிப் பிழை.

யாதுமாவதும்
யாரோவாவதும்
அச்சாணி கழண்ட
சுழற்சிப் பிழை..


செவ்வாய், 24 ஜனவரி, 2012

தனிமைக் கண்ணீர்.

தனிமையில் நீ உகுத்த கண்ணீர்
வழிகிறது என் விழி வழி..
என் உதாசீனத்தை
நானே உணர்ந்ததால்.

குலாவல்கள்.

பாழடைந்த அரண்மனைப் பொந்துகளிலும்
சந்தோஷமாய்க் கீச்சிட்டபடி
சில குருவிகளின் குலாவல்கள்..


மிச்சம்

எல்லாவற்றையும்
அழித்தபின்னும்
ஏதோ ஒன்று
மிச்சம் இருக்கிறது..


திங்கள், 23 ஜனவரி, 2012

சாக்லெட் சிரிப்பு.

சோர்வுறும்போதெல்லாம்
ஒரு சாக்லெட்டாய்
உரித்துச் சுவைக்கிறேன்
உறைந்திருக்கும் உன் சிரிப்பை.

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

கா.. கா..

சீக்கிரம் காகமாக வேண்டும்
அவற்றைத் தானே நீ
விருந்துண்ண அழைக்கிறாய்..:)

அறச்சீற்றம்.

கொடுந்தேவதைகளே சாபமிடுங்கள்
தெய்வங்களின் அறச்சீற்றங்களை விட
அது கொடுமையானது இல்லை..

உருப்படுதல்.

புன்னகையுடன் புது நட்பு
இது உருப்படுமா..
உருப் போடுமா..

பிடிபட்ட பட்டமும் பிடிபடாத அலைகளும்.

அலைகளைப் பார்த்தபடி
அமர்ந்திருந்தேன் நான்.
பட்டங்களைப் பார்த்தபடி
பறந்தவாறு இருந்தான் மகன்.
பிடித்து விட்டான் பிடித்த ஒன்றை..
அலையடித்தவற்றில் அமிழ்ந்து நான்


முத்த தான்யங்கள்.

முத்ததான்யங்களை
ஒன்று ஒன்றாய்க்
கொத்திச் சுவைக்கின்றன
இச்சைக் கிளிகள்..


பிரிய அவமானம்.

பிரியமானவர்களின்
கைகளில் இருந்தே
பரிசளிக்கப்படுகின்றன
அவமானங்களும்.

சனி, 21 ஜனவரி, 2012

கீர்த்தனாவுக்காக.

நீ பிறந்த போது
உன்னைப் பார்க்கக் கண்விழித்தும்
உன் பிறந்த நாளில் நீ கண்விழிக்கக்
கண்விழித்தும் காத்திருக்கிறார் தந்தை...
Parthiban Radhakrishnan நின் கீர்த்தனாவுக்காக.. :)

ஆவணம்..

ஆவணம்:-
********************

வெளிச்சத்தாளில்
நிகழ்வுகளைப் பதிந்து
நகரும் பூமி...

எப்போதோ நடந்தவையும்
இப்போதும் புதிதாய்..

என்று என்று
குறித்திராத நிகழ்காட்டியில்..

தினம் தினம்
இரவுக் காப்பகத்தில்
சேகரமாய்..

மூளைகளின்
முன்னோடிப் பயணத்தில்
ஆவணமாய்..

வெள்ளி, 20 ஜனவரி, 2012

ஒவ்வொரு நான்.

நான் என்று கருதும் நானுக்குள்
நானென்றே அறியாத பல நான்கள்..
ஒவ்வியோ ஒவ்வாமலோ
ஒவ்வொரு தருணங்களிலும்
ஒவ்வொரு நான்..

வியாழன், 19 ஜனவரி, 2012

தீண்டல்.

உடல்தீண்டல்
தொடுப்பென்றால்
மனத்தீண்டல்..?


தொடர் விளையாட்டு.

குமரியாக்குகிறாய் என்னை..
குழந்தையாக்குகிறேன் உன்னை..
தொடர்கிறது நம் விளையாட்டு..:)

குழந்தை மொழி..

வேறான தாய்மொழியின்
குழந்தைப் பருவங்களில்
உறைந்து கிடக்கும் நாம்
சந்தித்தால் எந்த மொழியில்
உரையாடிக் கொள்வோம்..
குழந்தை மொழியிலா..:)

வானவில் தாவரம்.

மழைநீர் பாய்ந்து
சூரிய வெளிச்சம் உண்டு
விதையில்லாமல் முளைக்கிறது
வானவில் தாவரம்.

புதன், 18 ஜனவரி, 2012

இசை(ந்)த்த பாடல்..

மாலைக் கிளையில்
இரு பறவைகளாய்
இசை(ந்)த்துக் கொண்டிருந்தோம்.
இருளில் நீ செல்லும் போது
என் பாடலையும்
எடுத்துச் சென்றுவிட்டாய்..

இசைத் தூது.

முகம் காட்ட மறுக்கும்
பறவைகளின் அன்பின் பின்
மன்றாடிக் கொண்டிருக்கிறது
என் இசைத் தூது

நேரத் திருடு.

ஒருவரை ஒருவர்
திருடிக் கொண்டிருக்கிறோம்
நம்மின் நேரம் திருடு போவதறியாமல்

இறக்கைகளில் உயிர்ப்பவை

எச்சங்களால்
நிரம்பிக் கிடக்கிறது தாழ்வாரம்.
விரட்டக் கூடுவதில்லை
இறக்கைகளில் உயிர்ப்பவைகளை.

கருணைக் கரம்.

விநோதமான குழப்பமான
வாழ்க்கைச் சுழலில்
ஏதோ ஒரு கருணைக் கரம்
எப்போதும் காவல் தெய்வமாய்..


தனிப் பறவைகள்.

புகைப்படங்களையோ
சந்திப்புகளையோ
பறவைகள் விரும்புவதில்லை
தத்தம் கிளைகளில் தனித்தனியாய்.
எப்போதும் உரையாடலற்று.

மொத்தக் கூட்டத்தோடும் கூட்டமாய்
எப்போதாவது பறந்தபடி.


கடத்தல்.

பறந்து கொண்டே இருக்கின்றன
பறவைகள் இடைவிடாது..
வானம் எண்ணி வைப்பதில்லை
கடந்து போனவற்றை.

எது நீ

ஒரு வனம் ஒரு வானம்
சில மரங்கள் இதில்
எதில் நீ மறைந்திருக்கிறாய்
சூரிய வெளிச்சமாகவா..
பனிபடர்ந்த இருளாகவா..

உரையாடல்

உருவேற்றுகிறாயா
உசுப்பேற்றுகிறாயா..
உருவம் காண்பிக்காமல்
உரையாடி உரையாடி..

என்னைத் தேடுதல்.

என் குரல் மலைகளில்
எதிரொலிக்கிறது..
இன்னொன்று என்றெண்ணி
உருவம் தேடிக் கொண்டிருக்கிறேன்.

அடையாளம்

அடையாளமற்றிருப்பவரை
அடையாளம் காண்பது
கண்ணாடிமுன் தன்னைத்தானே
தேடிக் கொண்டிருப்பதாய்..

அணைப்பு.

ஆயிரம் முறை அணைக்கிறாய்.
ஒரு முறை திரும்ப அணைத்தால்
அணைந்துவிடக்கூடுமென்றாலும்
எனக்கு எதையும் அணைப்பதில் விருப்பமில்லை..

திங்கள், 16 ஜனவரி, 2012

வளர்ப்பு நாய்கள்.

எஜமானன்களின் பொழுதுபோக்கு
வளர்ப்பு நாய்களுடன் விளையாட்டு,
காவலுக்காய் வீசப்படும் எலும்புத் துண்டுகளை
அவை பாசம் என எண்ணிக் கொள்கின்றன.
ஒன்று இறந்ததும் அவன் சிலகாலதுக்கத்தோடு
இன்னொன்றை வளர்க்கத்துவங்குகிறான்.
அவனோடு வளர்ந்த அவை அவனை
மாற்றுவதில்லை.. அவனோடு மரிக்கின்றன..

வளையங்கள்.

சிலருக்கு ரத்தம் துடிக்கிறது..
எனக்கு தலையை சுற்றுகிறது..
எல்லா வளையங்களும்
தலையைச் சுற்றி ஒளிவட்டமா.. மயக்கமா..

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

காற்றிசைச் சிணுங்கி..

காற்றாய் வருகிறாய்..
மெல்லச் சுழற்றிச்
சிணுங்க வைக்கிறாய்
காற்றிசைச் சிணுங்கியான என்னை.

நிழலுருவங்களின் சலனங்கள்..

இணைகள் இணைகின்றன..
அவ்வப்போது மனதில் உலவும்
நிழலுருவங்களின் நினவுகளோடும்..

வெள்ளி, 13 ஜனவரி, 2012

பேரழகுப் பொட்டு..

ஜவ்வரிசிச் சாந்து
கரிசலாங்கண்ணிக் கண்மை
திருஷ்டிப் பொட்டு அப்பியும்
அதிகமாகிறதே பேரழகு..
உன் குட்டிக் கன்னக் குழிச்சிரிப்பில்..

வியாழன், 12 ஜனவரி, 2012

மனதின் வேட்டை..

வேட்டையாடும் மனத்தின்முன்
பொய்க் காரணங்கள் கிழிபடுகின்றன..
உண்மையும் இரணமாய் நிற்கிறது..

எரிக்கும் கோபம்.

தகிக்கிறது கோபம்
என்ன போட்டு எரித்தாலும்
என்னையும் எரிக்கிறது..
சாம்பலாவேனோ..உயிர்ப்பேனோ.

எட்டாத முத்தம்..



கொடுத்தது போலும்
பெற்றுக் கொண்டது போலும்
இருக்கிறது.. ஆனாலும்
எட்டவில்லை இந்த முத்தம்.

Related Posts Plugin for WordPress, Blogger...