எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 13 நவம்பர், 2011

சின்னச் சிகப்பு ரோஜா..

தத்தித் தவழ்ந்துவரும்
தன்கை பிடிக்க வரும்.
முகத்தைத் திருப்பிக் கொண்டால்
முத்தம் ஒன்று தரும்.

பட்டுப் பாதத்தால் பைய நடந்துவரும்
எட்டிக் கைபிடித்தால் விட்டு ஓடிவிடும்.
சுட்டித்தனம் செய்தே சிந்தை மயக்கிவிடும்.
விட்டுப் பிரிந்துவிட்டால் மனம் வெந்து தணிந்துவிடும்.

சட்டியை உடைக்கையிலே சட்டெனப் பிடித்துவிட்டால்
பட்டுப் பட்டென இமை கொட்டி பயமாய் எனை விழிக்கும்.
சட்டெனக் கிட்ட வந்து குட்டிப் பூப்பூக்கும்
விட்டு விட்டோமென்றால் பல சுட்டித்தனம் செய்யும்.

இனிப்பைக் கொண்டுவந்தால் எனக்கா எனக் கேட்கும்.
இந்தா எனக் கொடுத்தால் இதமாய் நடந்துகொள்ளும்.
இருப்பதை மறைத்துவைத்தால் திருட்டுப் பூனையாய் மாறிவிடும்.
இனிப்பில் எறும்பதுவே இருப்பது காணாமல் குட்டி
இதழுக்குள் திணித்துக் கொண்டு ஆவெனக் கத்திவிடும்.

குழைந்த சோறிட்டு., பருப்பும் நெய்யும் விட்டு,
குழைவாய் மசித்துவிட்டு கிண்ணத்தில் எடுத்துவந்தால்
இனிப்பிட்டுத் தரச் சொல்லி இன்னமும் அடம்பிடிக்கும்.
சக்கரை இட்டுத்தந்தால் தா தா என வாங்கி
காக்கைக்கு ஊட்டிவிட்டு கல கலவெனச் சிரிக்கும்.

அப்பளம் காயவைத்தால் எரியும் அடுப்பினுள் போட்டு விடும்.
வற்றலைப் போட்டு வைத்தால் வாளித்தண்ணிக்குள் நனைத்துவிடும்
அரிசியை ஊறவைத்தால் எடுத்துக் கோழிக்குத் தீனியாக்கும்.

குளிக்க அழைத்துவந்தால் என்னைக் குளிக்க வைத்துவிடும்.
சோப்பை எடுத்துக்கொண்டு என் மூஞ்சியில் தேய்த்துவிடும்.
தந்தைதனையழைத்து என்னைக் கோமாளி எனக்காட்டும்.

அடுத்தவர் வீடு சென்றால் அடங்கி அமர்ந்திருக்கும்.
அரைமணிநேரத்துக்குள் அனைத்தையும் தலைகீழாக்கிவிடும்.
சீச்சீ வாலுக்குட்டி என முறைத்து நானுரைத்தால்
நீதான் அதுவென நயமாய்த் திருப்பிவிடும்.

தாத்தாவுடன் பூஜைசெய்ய பவ்யமாய் போயமரும்.
பூஜை முடியுமுன்னே நைவேத்யம் காணாமல் போயிருக்கும்.
கோபமாய் நான் முறைத்தால்
குறுகுறுவெனப் பார்க்கும்.

பாட்டியின் பக்கம் சென்று அட்டணக் காலிட்டு
மடியிலமர்ந்துகொண்டு சொல் சொல் அக்கதையை
எனத் தொந்தரவு செய்துவிடும்.
அவர் எனைக் கோபித்தால் நானழும் வேளையிலே
பக்கம் மெல்ல வந்து கண்ணீர் துடைத்துவிடும்.

கண்பொத்தி சொல்லுநான் யாரென்று கேள்விகள் கேட்டுவிடும்.
தெரியாதெனச் சொன்னால் முகம் வாடித் தலைகுனியும்.
யாரந்த வானரமா எனக் கேட்டால் கோபம் கொண்டுவிடும்.
ஆகா என் தங்கக் குட்டியென்றால் அகம்புறம் குளிர்ந்துவிடும்.

இருட்டில் விழித்துவிட்டால் இனம்புரியாமல் அழும்.
தட்டிக் கொடுத்துவிட்டால் ரோஜா மொட்டுப்போல் உறங்கும்.
இத்தனை கள்ளத்தனம் இதுவா செய்கிறது என
ஆச்சர்யப்படும் வண்ணம் தூக்கத்தில் புன்னகைக்கும்.

டிஸ்கி:- இதைப் படிச்சு குழந்தைகளாயிட்ட எல்லாக் குழந்தைகளுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள் குட்டீஸ்...:))

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...