எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 4 டிசம்பர், 2018

கீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :-

கீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :-

முன்னுரை :- வேதமணி வாத்தியார் கீறல்கள் நாவலில் படைக்கப்பட்ட நோக்கமே ஒரு மனிதனின் உபகார குணத்தையும், கிறித்துவக் கம்யூனிசத்தையும் விளக்குவதற்காகத்தான். மேலும் சமுதாயத்திற்கு விழிப்புணர்வூட்டவும் பயன்படுத்துகின்றார்.

“ பிள்ளையப் பெத்தா கண்ணீரு
தென்னயப் பெத்தா இளநீரு “ என்ற வரிகளைப் போலப் பிள்ளைகள் கூடப் பெற்றோருக்கு உதவாத நிலையில் வேதமணி வாத்தியார் ஊசியிலிருந்து கப்பல் வரையிலான எல்லாப் பொருள்களையும் கொடுத்து உதவுகின்றார்.

“துன்பங்களின் சுயதரிசனங்களில்
துணைகளும் மாரீசமான்களே “ என்ற புதுக்கவிதைப்படி இல்லாமல் வேதமணி வாத்தியார்  உபகார சிந்தையுள்ளவராக, ஒவ்வொரு நேரமும் நொடித்துவிடும் இரட்டை மாட்டு வண்டியை, மாட்டைத் ( முத்தையா குடும்பத்தை ) தூக்கிவிடும் உபகாரராகவே உருவாக்கப்பட்டுள்ளார். அவர் இந்நாவலில் உருவாக்கப்பட்ட நோக்கத்தைச் சிறிது இவண் ஆராய்வோம்.

பொருளுரை:- முத்தையாவின் குடும்பம் நடுத்தரக் குடும்பம். அதன் வீழ்ச்சிகளில் ஒவ்வொரு நிலையிலும் அருகிருந்து ஆறுதல் அளிக்கும் ஆதர்ஷ புருஷனாக வேதமணி வாத்தியார் சித்தரிக்கப்படுகின்றார்.

பாத்திர உருவாக்கத்திற்கான காரணம். :-

ஆசிரியர் தாம் கூறும் முறைப்படிப் பார்த்தால், செல்லையா பொது நலத்திற்கும், துரை சுயநலத்திற்கும் பலியான பின்பு, எஞ்சியிருக்கும் இரு பெண் மகவும் பாரமான பின்பு, முத்தையாவைச் சரிப்படுத்த, ஆறுதலளிக்க ஒரு ஆள் தேவை. அது சாமுவேல் நாட்டையாரால் இயலாது என நினைத்திருக்கலாம் ஆசிரியர். மேலும் வேதமணியும், முத்தையாவும் நெருங்கிய நண்பர்கள். வேதமணியின் வாதத்தைக் கேட்டுத்தான் முத்தையாவே தன் மூத்த மகனின் கொள்கையில் நம்பிக்கை வைக்கின்றார். அவனை ஏற்றுக் கொள்ள முயற்சிக்கின்றார்.

கிறித்துவக் கம்யூனிசம் :-

வேதமணியின் கிறித்துவக் கம்யூனிசக் கொள்கைகள் சிறப்பானவை. இக்கதையில் கிறித்தவத்தையும், சமுதாயத்தையும் இணைத்து ஒன்றாக்கி கிறித்துவ கம்யூனிசச் சமுதாயமாக மாற்றினால் நலம் பயக்கும் என்பதை விளக்கவும், கம்யூனிசம் கிறித்தவத்திற்கு எதிரி அல்ல என்பதை விளக்கவும், இவரின் பாத்திரம் பயன்படுகின்றது.

ஆசிரியரின் ஒரு பாகம் :-

மேலும் இப்பாத்திரம் ஆசிரியர் தன்னில் ஒரு பகுதியை விளக்கப் படைத்தது போலவும் தோன்றுகிறது. இவர் தம் முன்னுரையில் கிறித்துவத்துக்குக் கம்யூனிசம் எதிரி அல்ல என்று கூறுவதன் மூலம் மேலும் கிறித்துவக் கம்யூனிசம் கொண்ட ஒரு சமுதாயம் உருவாக வேண்டும் என்பதை இவர் தன் நாவலில் பல இடங்களில் குறிப்பிடுவதன் மூலமும், வேதமணி, சாமுவேல், செல்லப்பா ஆகிய மூவர் மூலமும் இக்கருத்துத் தெற்றென விளங்குகின்றது.

பல இடங்களில் முத்தையாவுக்கு ஆறுதல் கூறுமிடங்களிலும் ஹார்லிக்ஸ் அமிர்தாஞ்சன் குப்பி முதல் பெண்ணின் திருமணத்தை முடித்து வைப்பது வரையிலும் இவர் முன்னின்று செய்வது,  நொடித்துப் போன குடும்பத்திற்கு இவர் முன்னின்று முதுகெலும்பாக உதவுவது, புலவர்கள் தாம் புகழ்ந்து பாடும் வள்ளல் வறுமையுற்றவனாய் ஆனாலும் பெருஞ்செல்வம் படைத்த உலோபியிடம் செல்லாமல் வறுமையுற்ற அள்ளி வழங்கும் வள்ளல் குணத்தை உடையவனிடமே வருவார்களாம். அதுபோல் உள்ளது.

விழிப்புணர்வுத் தூண்டல்:-

விழிப்புணர்வைத் தூண்டவும் இவரின் பாத்திரம் பயன்படுகின்றது. ஆசிரியர் தான் புகுத்த நினைக்கும் விழிப்புணர்வை வேதமணியின் சிந்தனை ஓட்டங்களிலும், சொல்வன்மையிலும் வெளிக் கொணருகின்றார். கம்யூனிசம் மதத்துக்கு எதிரானது அல்ல என்பதை அப்பாவிடம் ( வாசகர்களிடம் ) வலியுறுத்துவதும், அடிமை மக்கள் தங்கள் அடிமைப்படுத்தப்படுகின்றோம் என்பதை உணர்ந்து , திருந்தி, அடிமைப்படுத்துபவனை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகின்றார்.

முடிவுரை:-


இவ்வாறு வேதமணி கீறல்கள் நாவலில் ஆலோசகராக, உபகாரராக, புதிய சிந்தனை ஓட்டங்களின் புதல்வராக, அகிம்சாவாதியாய, அமைதி வழியில் ஆணவத்தை ஒடுக்க விரும்பும் மிதவாதியாக, மதத்தையும், சமுதாயத்தையும் இணைக்க ஒரு கருவியாக, பழமையையும் புதுமையையும் சரிப்படுத்த ஒரு பாலமாக உருவாக்கப்பட்டிருக்கின்றார். அவர் இவ்வாறு உருவாக்கப்பட்டது இந்நூலில் ஆசிரியர் தான் கூற விரும்பிய எண்ணவோட்டங்களைப் பிரதிபலிக்க, தான் கூற விரும்பிய கருத்துக்களைத் தெளிவான, அமைதியான முறையில் விவரிக்க, ஆசிரியரான வேதமணியைப் பயன்படுத்தியுள்ளார். 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...