எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 நவம்பர், 2011

மலை அரசியின் எழில்..

மலை அரசியின் எழில்
*********************************
பச்சை வர்ணம் போர்த்த தோகை
பாதி சேலை அணிந்த பூவை..
இச்சை வர்ணம் பூசும் பாவை
இமை வருடும் குளிர்ந்த சோலை

ஊசி மரங்கள் மேகத்துணியில்
ஊசிநூலால் கோர்த்த நெசவு...
குறிஞ்சி மலரும் கொய்யாக்கனியும்
குறைவில்லாத கோர்வைக் கசவு..

மலைப்பிலாத..மலைப்பலா.,
உவப்பிலாத களைப்பிலா.
மலை மக்கள் உழைப்பிலா
மனிதநேயம் செழிப்பிலா..

மனிதருக்காய் மலைகுடைந்து
பாதை செதுக்கி., மலை வனைந்து.,
மலை பிளந்து., மலை விழுங்கி,
ராட்சசநாவாய் நீளும் சாலை..


வெட்டி வீசி வீழ்ந்து கிடக்கும்
பச்சை ரத்த மரச் சடலங்கள்..
பச்சையம் உண்ணும் கட்டிடங்கள்
பேய்க்காளான்களாய் முளைத்து..

அணுமின் ஆராய்ச்சிக்குமாய்
உளுத்துக் கொண்டிருக்கும்
உயிர்கருக்கி உருக்கிவிட்டால்.
உருவாக்க முடியுமா இன்னொரு மலை..

நாகரீகத் தொட்டில்கள்
நனைந்து நிற்கும் நெடுநல்வாடைகள்
நாகரீகம் தோய்ந்த மனிதன்
நாசமாக்கும் பாவை விளக்குகள்

கொடிமுந்திரி.,கொளிஞ்சிக்காய்
யானை., காட்டெருமை, வரையாடு.,
பைன்., தேக்கு., எல்லாம் தொத்தித்
தொங்கும் ஆரண்யக் குளிர்..

சோதனை எல்லாம் இங்கெதற்கு
தாய் இவள்.. உடைக்கிறோம்..
அழிக்கிறோம் ..மழைக்கான தடுப்பணையை
மானுட இனத்துக்கு துரோகமாய்..

தேவதையை தெய்வத்தை
வானவளை வனப்பேச்சியை
அவளை அவளாய் வாழவிடுங்கள்
மழையும் மலையும் நமை உய்விக்க..

வெள்ளி, 25 நவம்பர், 2011

எப்ப சின்னப் பிள்ளை ஆகப் போறீங்க..

1. 2. BIG BABOOL - 2 RS.
2. 2. BOOMER - 2 RS
3. 2. COFFEE BITE - 1 RS
4. 2. CENTER FRESH - 2 RS.
5. 2. ALPHENLIBIE - 1 RS
6. 2. HAJMOOLA - 1 RS
7. 2. HINGOLI - 1 RS
8. 1. NESTLE MILKY BAR - 12 RS.
9. 1. KITKAT - 6.50 RS.
10. 2. SPLASH CANDY -
11. 2. JUICY FRUIT ( CHEWING GUM) - 2 RS.
12. 2. MICKY MOUSE -
13. 2. DONALD DUCK -
14. 1. PERK - 10 RS.
15. 2. BONKERS -
16. 2. FUNFLIPS ( ORD) - 1 RS
17. 1. FUNFLIPS PUDINA - 4 RS
18. 1. UNCLE CHIPS - 15 RS
19. 1. RUFFLES LAYS - 15 RS.
20. 2. CRAX 5 -
21. 1. FIVE STAR - 10 RS.
22. 1. POPPINS - 1.50 RS
23. 2. LOLLY POP - 6 RS.
24. 1. BROOKLYN -
25. 1. MAGIC POP - 10 RS.
26. 1. GEMS - 10 RS.
27. 1. POLO - 5 RS.
28. 1. CADBURYS DAIRY MILK - 12 RS
29. 3. TOFFO - 1.50 RS
30. CRAX - 6 - 38 RS. 3 GAMES.

COCACOLA - 2
MAAZA - 2
FANTA - 2
PEPSI - 2.

ஹா ஹா ஹா .. இதெல்லா என்ன சின்னப் புள்ளத்தனம்.. வெலையெல்லாம் எழுதி இருக்குன்னு பார்க்குறீங்களா.. என் பிள்ளைகள் குட்டியாய் இருந்தப்போ டெல்லியில் ஒரு நாள் இதெல்லாம் லிஸ்ட் போட்டு வாங்கித் தின்னமாக்கும்..:)

எப்பப் பார்த்தாலும் மெச்சுர்டாவே பிஹேவ் பண்ணனுமா.. இதை வாங்கித் தரமாட்டேன். அதை வாங்கித் தரமாட்டேன்னு சொல்லணுமா.. ( இதுல ஐஸ்கிரீம் வகையறா இருக்காது அது தனியா ஒரு நாளைக்குபோடுறேன்... ஹிஹி ) கொஞ்சம் அப்ப் அப்ப சின்னப் புள்ளங்களாவும் ஆட்டம் போடலாமே. நீங்க எப்ப சின்னப் புள்ள ஆனீங்கன்னும் பின்னூட்டத்துல சொல்லுங்க..:)

புதன், 23 நவம்பர், 2011

இங்கிலீஷ்டைரி..

*WHEN SOMEONE SEES YOUR EYES THEY WILL SAY YOU ARE IN YOUR FIFTEENS. (YOUNG LAD)

*WHEN SOMEONE SEES YOUR SMILE THEY WILL SAY YOU ARE IN YOUR TWENTYS.( YOUNGSTER).

* WHEN SOMEONE SEES YOUR SHOULDERS THEY WILL SAY YOU ARE IN YOUR TWENTYFIVES.( YOUNGMAN).

*WHEN SOMEONE SEES YOUR PERSONALITY THEY WILL SAY YOU ARE IN YOUR THIRTYS.( YOUNG FATHER).

* WHEN I UNDERGO YOUR LOVE AND AFFECTION I'LL SAY IT ALOUD YOU ARE A "GENTLEMAN"..

ஞாயிறு, 20 நவம்பர், 2011

இப்படியா பதுக்குவது..

தென்றல்கீற்று நிலாத்துண்டுகளை
முத்தமிட்டுச் சரசமாடிய
கிராமத்து இராக்காலங்கள்
ஒற்றைச் சுருள் முடிபோல்
நினைவுகளின் முன் உச்சியில்
நர்த்தனமாடியபோது
நினைத்துக் கொண்டாள்.,
“நகரத்துக் கட்டடச்
சாகசக்காரிகள்
சந்திரனை இப்படியா
முந்தானைக்குள்
பதுக்கிக் கொள்வது ..?” என்று.

வியாழன், 17 நவம்பர், 2011

கொள்ளை..

பார்த்துப் பசியெடுக்கக்
கல் எறிந்தோம்.
மரமேறி ஒன்றிரண்டு
பறித்துத் தின்றோம்.
இன்னுமிரண்டு பறித்து
மடியில்கட்டி ஓடினோம்.
திருட்டு என்று கட்டிவைத்து
உதைத்தார்கள்..
மொத்தமாய்க் கொள்ளையடித்த
குத்தகைக்காரர்கள்

புதன், 16 நவம்பர், 2011

பழசு..

செத்துப்போன பாம்பைத்
தட்டச்சாய் அடிக்காதே..
பிறகு அது
உன் மேலும் என் மேலும்
சதைச்சேறு வீசும்.

ஊராரின் பற்கள் அவலுடன்
அதில் கிடக்கலாம்.
நம் முன்னோர்களை சந்தியில்
நிறுத்தக்கூடிய
ஆதார எலும்புகள் கிடைக்கலாம்.

செத்த பாம்பைத் தூரப்போடு..
தட்டச்சாய் அடிக்காதே..

உன் சரித்திரமும்
என் சரித்திரமும்
அம்பலமாகும்.
மூன்று கோடிப் பற்கள்
நமுட்டுத்தனமாய்ச் சிரிக்கும்..

செத்த பாம்பைப் புதைத்துப் போடு
அது தானாகத்
தோலுரிக்காது.
சதைச்சேறும் அடிக்காது..

ஞாயிறு, 13 நவம்பர், 2011

சின்னச் சிகப்பு ரோஜா..

தத்தித் தவழ்ந்துவரும்
தன்கை பிடிக்க வரும்.
முகத்தைத் திருப்பிக் கொண்டால்
முத்தம் ஒன்று தரும்.

பட்டுப் பாதத்தால் பைய நடந்துவரும்
எட்டிக் கைபிடித்தால் விட்டு ஓடிவிடும்.
சுட்டித்தனம் செய்தே சிந்தை மயக்கிவிடும்.
விட்டுப் பிரிந்துவிட்டால் மனம் வெந்து தணிந்துவிடும்.

சட்டியை உடைக்கையிலே சட்டெனப் பிடித்துவிட்டால்
பட்டுப் பட்டென இமை கொட்டி பயமாய் எனை விழிக்கும்.
சட்டெனக் கிட்ட வந்து குட்டிப் பூப்பூக்கும்
விட்டு விட்டோமென்றால் பல சுட்டித்தனம் செய்யும்.

இனிப்பைக் கொண்டுவந்தால் எனக்கா எனக் கேட்கும்.
இந்தா எனக் கொடுத்தால் இதமாய் நடந்துகொள்ளும்.
இருப்பதை மறைத்துவைத்தால் திருட்டுப் பூனையாய் மாறிவிடும்.
இனிப்பில் எறும்பதுவே இருப்பது காணாமல் குட்டி
இதழுக்குள் திணித்துக் கொண்டு ஆவெனக் கத்திவிடும்.

குழைந்த சோறிட்டு., பருப்பும் நெய்யும் விட்டு,
குழைவாய் மசித்துவிட்டு கிண்ணத்தில் எடுத்துவந்தால்
இனிப்பிட்டுத் தரச் சொல்லி இன்னமும் அடம்பிடிக்கும்.
சக்கரை இட்டுத்தந்தால் தா தா என வாங்கி
காக்கைக்கு ஊட்டிவிட்டு கல கலவெனச் சிரிக்கும்.

அப்பளம் காயவைத்தால் எரியும் அடுப்பினுள் போட்டு விடும்.
வற்றலைப் போட்டு வைத்தால் வாளித்தண்ணிக்குள் நனைத்துவிடும்
அரிசியை ஊறவைத்தால் எடுத்துக் கோழிக்குத் தீனியாக்கும்.

குளிக்க அழைத்துவந்தால் என்னைக் குளிக்க வைத்துவிடும்.
சோப்பை எடுத்துக்கொண்டு என் மூஞ்சியில் தேய்த்துவிடும்.
தந்தைதனையழைத்து என்னைக் கோமாளி எனக்காட்டும்.

அடுத்தவர் வீடு சென்றால் அடங்கி அமர்ந்திருக்கும்.
அரைமணிநேரத்துக்குள் அனைத்தையும் தலைகீழாக்கிவிடும்.
சீச்சீ வாலுக்குட்டி என முறைத்து நானுரைத்தால்
நீதான் அதுவென நயமாய்த் திருப்பிவிடும்.

தாத்தாவுடன் பூஜைசெய்ய பவ்யமாய் போயமரும்.
பூஜை முடியுமுன்னே நைவேத்யம் காணாமல் போயிருக்கும்.
கோபமாய் நான் முறைத்தால்
குறுகுறுவெனப் பார்க்கும்.

பாட்டியின் பக்கம் சென்று அட்டணக் காலிட்டு
மடியிலமர்ந்துகொண்டு சொல் சொல் அக்கதையை
எனத் தொந்தரவு செய்துவிடும்.
அவர் எனைக் கோபித்தால் நானழும் வேளையிலே
பக்கம் மெல்ல வந்து கண்ணீர் துடைத்துவிடும்.

கண்பொத்தி சொல்லுநான் யாரென்று கேள்விகள் கேட்டுவிடும்.
தெரியாதெனச் சொன்னால் முகம் வாடித் தலைகுனியும்.
யாரந்த வானரமா எனக் கேட்டால் கோபம் கொண்டுவிடும்.
ஆகா என் தங்கக் குட்டியென்றால் அகம்புறம் குளிர்ந்துவிடும்.

இருட்டில் விழித்துவிட்டால் இனம்புரியாமல் அழும்.
தட்டிக் கொடுத்துவிட்டால் ரோஜா மொட்டுப்போல் உறங்கும்.
இத்தனை கள்ளத்தனம் இதுவா செய்கிறது என
ஆச்சர்யப்படும் வண்ணம் தூக்கத்தில் புன்னகைக்கும்.

டிஸ்கி:- இதைப் படிச்சு குழந்தைகளாயிட்ட எல்லாக் குழந்தைகளுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள் குட்டீஸ்...:))

வியாழன், 10 நவம்பர், 2011

கருவிழிகொண்டு கண்களை மூடுவது..

ஒரு அன்பை பொத்தி வைப்பது
ஒரு நெருப்பை மூடுவது

ஒரு மழையை ஊற்றி
எரிமலையை அடக்குவது

ஒரு விதையை ஊன்றி
செடியை மறைக்க முயல்வது

ஒரு பூத்த பூவின் வாசத்தை
காற்று திருடாமல் செய்வது

விரிகதிர் சூரியனை
சல்லாத்துணி கொண்டு மறைப்பது.

கண் மூடிய பூனையாய்
தனக்குள்ளே அமிழ்வது

ஒரு அன்பை அடக்குவது
கருவிழிகொண்டே கண்களை மூடுவது

செவ்வாய், 8 நவம்பர், 2011

ஒசத்தி..

கேட்டோரம்
நாக்குத் தொங்கவிட்டு
நொண்டியடித்துக்
கொண்டிருந்த தோஸ்த்திடம்,
மாடியில்
டன்லப்பின் தாலாட்டிலிருந்து
கண்விழித்து
பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டிருந்த
பாமரேனியன் கேட்டது.,
“பார். என் அழகு நெக்லஸை.!
உனக்கு இப்படி யாராவது
பண்ணிப்போடுவார்களா “ என்று
தன் கழுத்துப் பட்டியைக் காண்பித்து.

வெள்ளி, 4 நவம்பர், 2011

ஊடல்மழை..

முகம் கருக்க
சண்டையிட்டுக்கொண்டார்கள்.
மின்னலாய்க்
கீறிக் கொண்டார்கள்.
வார்த்தைகள் தடித்தபோது
பளீர் என இடி இறங்கியது.

மழை வடியும் இமைகளோடு
குனிந்திருந்த மரத்தை
தழுவச் சென்ற தென்றலை
குளிர்காய்ச்சலாக்கி
விரட்டியது ஈரக்கிளைகள்..

கூதலோடு திரும்பிய
தென்றலுக்குக்
கூடலைவிட
இன்பமாய் இருந்தது
அந்த ஊடல்..

புதன், 2 நவம்பர், 2011

மேகப் பசு..

மழை மரங்கள்
வெளியில் மின்னல்சரம் எறிய..
மனமும் சூல் கழட்டி
மகரந்தம் கோர்த்தது.

டெரஸ் பாலைகளில்
மழை விதையூன்றி பாத்தி கட்டும்.
மாடியோர விளிம்புகளில்
ஊஞ்சலாடும்.

சபைக்கவிஞர்களாய்
சிம்மாசனமிட்டு அமர்ந்து
ப்ரிய ராகங்களால்
உரக்கப் பாடும்.

காதருகே
இடிக்கொம்பசைத்து
மேகப்பசு
மழைப்பால் கறக்கும்.

செடிகள் புதிது புதிதாய்ப்
நீர்ப்பூவுதிர்க்கும்.
கை பாய வரும் குழந்தையாய்
ஜன்னல் வழி கலகலக்கும்.

சித்திரையில் பரிசமிட்டு
ஐப்பசியில் மண்மணக்கும்.
காற்றோடு கலந்து
மனமகரந்தங்கள் சூல் மூடும்.

மழைப்பால் குடித்த
தாவரங்கள் பால் வழிய
வேர்வரைக்கும்
நனைந்து நிற்கும்

செவ்வாய், 1 நவம்பர், 2011

திருட்டு.

எங்கிருந்தோ
வாடைக்காற்று
ஜன்னல்வழி
வீட்டுக்குள் உலாவி
திருடிச்சென்றுவிட்டது.
வெப்பத்தை.

தொலைத்ததைத்
திரும்ப வாங்கத்
தேடியலைகிறேன்
குளிரான இடமெல்லாம்
மழையில் நனைந்து
உன்னையும் அணைத்தபடி ..
Related Posts Plugin for WordPress, Blogger...