எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 16 அக்டோபர், 2013

குட்டிப் பட்டாசு.

மத்தாப்பூச் சிரிப்பில்
சக்கரமாய்ச் சுற்றுகிறது உள்ளம்.


சாட்டையாய்ச் சுழலும் ஜடையில்
சரம் சரமாய்ப் பூத்து வெடிக்கிறது முல்லைச்சரம்.


பொட்டு வெடியா, புஸ்வாணமா,
பாம்பு மாத்திரையா , பென்சில் வெடியா
பொறிந்து பொறிந்து போகிறது காலம்.


ஓளிதீட்டும் வெளிச்சத்தில் ஓவியமாய்
பல்காட்டிச்சிரிக்கும் உன்னைப்பார்த்து
அதிர்வேட்டைப் போல அதிரும் மனம்.


சனி, 12 அக்டோபர், 2013

காத்திரம்

கருந்துளைக்குள்
விழுகிறது வெளிச்சம்.
கர்ப்பம் கொள்கிறது
அக்கினிக் குழம்பு.
நெருப்புத் தேன் சிதறப்
பொங்கி விரிகிறது லாவாப்பூ.
மடல் உதிரும் பூவைச்
சாம்பலாக்குகிறது மழை.
கரைந்து ஓடும் கருஞ்சாந்தில்
ஒளிவதற்கு இடமில்லை
சிவப்பும் கருப்பும் காத்திரமும்
தினம் பிரசவிக்கிறது மலை.

வெள்ளி, 11 அக்டோபர், 2013

ஐயறவு.



கதவிடுக்கில் மாட்டிய பல்லி

காலில் சிக்கிய நாய்வால்

துடைப்பத்தில் நசுங்கிய கரப்பான்

ஐயறவாக்குகிறது யதார்த்தத்தை.

தப்பித்தல்

தவிர்க்க முடியவில்லை
அதன் வலை விரிப்பை.
எட்டி எட்டி எட்டிய உயரம் வரை
தட்டித் தீர்த்தாயிற்று.
எச்சிலைத் துப்பித் துப்பி
மூலைகளைக் கைப்பற்றும்.
மையத்தில் முயங்கி
பிடிபட்டதைச் சருகாக்கும்.
எட்டக் கால் பதித்தோடி
விளையாடுகிறததன் உலகில்.
எத்தனை முறை பிடித்தாலும்
தப்பியோடுகிறது சிலந்தி.

வெள்ளி, 4 அக்டோபர், 2013

கனம்



கனம் தாளாமல்

அழுது கொண்டிருக்கிறாய்

நான் தானமளித்த என்

இதயத்தை சுமந்தபடி.

Related Posts Plugin for WordPress, Blogger...