எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 ஜூலை, 2026

மிருகக் காட்சி சாலை

மிருகக் காட்சி சாலை

 

சித்து ஒருநாள் தொலைக்காட்சியில்

மிருகங்கள் பாடுவதைப் பார்த்தானே

அப்பா அப்பா இவையெல்லாம்

எங்கே இருக்கெனக் கேட்டானே

 

மிருகக்காட்சி சாலையிலே

இவையெல்லாம் பார்க்கலாமே

என்று தந்தை உரைத்தாரே

அப்பா நானும் பார்க்கணுமே

என்றே சித்து கெஞ்சினானே

செவ்வாய், 2 ஜூன், 2026

எல்லைக் காவல் வீரர்கள்

எல்லைக் காவல் வீரர்கள்

 

வல்லரசுப் போட்டியிலே

வன்மம் கொண்ட நாடுகள்

ட்ரோன்கள் விட்டு உளவறிந்து

குண்டு வீசிச் செல்லுது

 

இரும்பு டாங்கி வருகுது

இரக்கமில்லாமல் குண்டு போடுது

மேலே விமானம் பறக்குது

மழை போல் குண்டு பொழியுது

 

அணுகுண்டை அள்ளி வீசி

ஆளைக் கபளீகரம் செய்யுது

எங்கும் குண்டு எதிலும் குண்டு

மனிதனை மொத்தமாய் அழிக்கும் குண்டு

 

எல்லைச்சாமி போல நின்று

எல்லையைத்தான் காக்கின்றார்

எல்லைக் காவல் படையினர்
நாட்டை காக்கும் வீரர்கள்

 

பனி படர்ந்த மலையிலும்

பாசறைகள் அமைத்துமே

உயிரை துச்சமாய் கருதியே

கண் விழித்து காக்கிறார்.

 

ஊடுருவல் செய்கின்ற

உளவாளிகளையும் தீவிரவாதிகளையும்

எல்லையிலே தடுக்கிறார்.

எதிர்த்தால் எகிறி அடிக்கின்றார்.

 

நாட்டில் பாதுகாப்பாய் நாம் வாழக்
காவல் அரண் செய்கிறார்

எல்லை சாமி இவரை போல்

எங்கும் கண்டதுண்டோ ஒரு தெய்வம்

 

வருடம் முழுதும் வீட்டை பிரிந்து

உதிரம் கொட்டிக் காக்கின்றார்

பாதுகாப்பாய் நம்மை காக்கும்

பாதுகாவலர் படை இது

 

நாட்டின் எல்லை காக்க உழைக்கும்

நல்லோரை வணங்குவோம்

வீட்டில் ஒருவர் இவரை போல

எல்லை காக்கக் கிளம்புவோம்.  

சனி, 2 மே, 2026

சிக்கி முக்கி கல்

சிக்கி முக்கி கல் 


சிக்கி முக்கி கல்லைத் தேய்த்து 

சிறு நெருப்பைக் கண்டுபிடித்தார்.

அரணிக் கட்டை கொண்டு கடைந்து 

யாக வேள்வி செய்து வைத்தார் 


தீக்குச்சியில் மருந்தை அடைத்து 

நெருப்பை அதில் ஒளித்து வைத்தார் 

உரசும் போது உயிர் பெற்று 

ஒளிரும் அந்தத் தீக்குச்சி


விறகை கொண்டு மண் அடுப்பினிலே

விதம் விதமாய்ச் சமையல் செய்தார் 

சுருட்டைத் தூளும் சிராய்த்தூளும் 

சுள்ளிகளும் கொண்டு அடுப்பெரித்தார். 


குமுட்டி அடுப்பு கோட்டை அடுப்பு

கரி அடுப்பு  இரும்பு அடுப்பு 

ரம்பத்தூள் அடுப்பு  தவிட்டு அடுப்பு 

மண்ணெண்ணெய் அடுப்பு, சாணவாயு அடுப்பு,


எரிவாயு அடுப்பு மின்சார அடுப்பு

சூரிய அடுப்பு தூண்டல் அடுப்பு

எத்தனை அடுப்பு எத்தனை சமையல்

இத்தனையும் ஒரு சாண் வயிறு நிரப்ப.


சுடுகாற்றலை கொண்டு சமைக்கின்றார்

எரிவாயு கொண்டு சமைக்கின்றார் 

மின்சாரம் கொண்டு சமைக்கின்றார்

சமைத்து சமைத்து உண்கின்றார். 


உணவைச் சமைத்து உண்ணும் மனிதரே

மனதை செம்மையாய்ச் சமைத்து வாழுங்கள்

உணவைப் பகிர்ந்து உண்ணக் கொடுத்து

மனிதம் போற்றி மகிழுங்கள்.

வெள்ளி, 3 ஏப்ரல், 2026

இனிப்பு ஈ..

விரட்ட விரட்ட ஈயைப் போலவே
சுற்றுகிறது உன் நினைவு..
என்னை இனிப்பாக்கி..

வியாழன், 2 ஏப்ரல், 2026

கார்மேகம்

கார்மேகம்

 

கார்மேகம் வந்தது

கனத்த மழை பெய்யுது.

 

நீர்நூலைச் சேர்த்து சேர்த்து

அருவி நெசவு செய்யுது.

 

ஓடைத்துண்டாய் விழுகுது

நதிச்சேலையாய் நெளியுது.

 

அனைத்தும் ஓடி ஓடிவந்து

நீலக்கடலில் கலக்குது.

 

நீர்மேல் சூரியன் உலவுது

கதிரில் வெப்பம் பரவுது .

 

ஆவியாகி நீர் எழும்புது

மேலே கொஞ்சம் செல்லுது

 

கருத்த யானை உருக்கொண்டு

கார்மேகம் ஆகுது


மீண்டும் மழை பெய்யுது

இதுவே இயற்கை சுழற்சியாம்


திங்கள், 2 மார்ச், 2026

இனிய எளிய தலைவர்கள்

இனிய எளிய தலைவர்கள்


காந்தித் தாத்தா வந்தாரு

சத்திய வழியில் நடந்தாரு.

நேரு மாமா வந்தாரு

நல்லாட்சியைத் தந்தாரு .

அண்ணல் அம்பேத்கர் வந்தாரு

சட்டம் ஒழுங்கு செய்தாரு.

கர்மவீரர் வந்தாரு

கல்வியோடு சத்துணவு தந்தாரு.

 

இனிய எளிய தலைவர்கள்

நாட்டை உயர்த்திச் சென்றார்கள்.

சுதந்திரத்தைத் தந்தார்கள்

சுகமாய் வாழச் செய்தார்கள்.

மக்கள் மனதில் நிறைந்தார்கள்

மகத்துவமான மனிததெய்வங்கள்.

இவரை நாமும் போற்றுவோம்

இவரை பின்பற்றி வாழுவோம்.

திங்கள், 2 பிப்ரவரி, 2026

இயல்பாய்..

நிறுத்து
வெளியேறு என்கிறார்கள்
வார்த்தைகளுக்குள்
சிக்கிக் கொண்டிருக்கிறேன்
மௌனத்தின் சுவர்
அச்சுறுத்துகிறது
பேச்சிழந்தபோதெல்லாம் துயில்கிறேன்
எழுந்ததும் வார்த்தைகளும்
என்னுடன் விழித்துப்
போட்டி போடுகின்றன.
இருவரும் போராடுகிறோம்
ஒருவரை ஒருவர் விட்டுவிட.
சகித்துக் கொண்டு
வாழவும் பழகிவிட்டோம்.
மீளாத்துயில்வரை
என்னையும்
வார்த்தைகளையும்
நீங்களும் இயல்பாய்
எடுத்துக் கொள்ளுங்களேன்

வெள்ளி, 16 ஜனவரி, 2026

குளிர்

ஓவியமாய்ச் சமைந்திருக்கிறது
மின்விசிறி
ஆனாலும் குளிர்கிறது

புதன், 31 டிசம்பர், 2025

வீடு சேர்தல்

புத்தக விமர்சனம் வந்திருக்கிறது
ஒரு நாளிதழ் வாங்க வேண்டும் என்றாள்.
இன்றைய நாளிதழா?
இதுதான் பெயரா
என்று கடையிலிருந்து புரட்டியவன்
அப்படி ஏதும் வந்ததாகத் தெரியவில்லையே என்றான்.
ஒன்பது ரூபாய்க்கு ஓராயிரம் கேள்வி.
வீடு வந்து சேர்ந்த நாளிதழைப்
புரட்டிப் பார்த்து இதுதான், இதேதான்
அரைப்பக்கம் வந்திருக்கே என்று
சொல்ல நினைத்தவள் மௌனித்தாள்
மனைவி எழுதிய புத்தகம் பேர் தெரிந்தால்தானே
இது அதன் விமர்சனம் என்று தெரியும்
அவரவர் உலகில் அவரவர்.
வீடு சேர்தல்தான் முக்கியம்

செவ்வாய், 2 டிசம்பர், 2025

ரயிலோடும் முன்றில்

பயண ஆரம்பத்தில்
வழியனுப்ப வந்தபோது பார்த்தது.
மேகம் மூடியழவும்
திசைமாறியதில்
எங்கோ காணாமல் போனது.
இருள்பூவாய்ப் பூத்த கண்கள்
தேடிச் சோர்ந்து குவிந்தன.
புலரும் வரை
தேடித் தேடி ஓடித்தேய்ந்த அது
ஏதோ ஒரு திசையில் திரும்பி
எட்டிப் பிடித்தே விட்டது
வெள்ளிப் புன்னகை முகத்தோடு

ஞாயிறு, 2 நவம்பர், 2025

வாழ்தல்

வாழ்தல்
நிஜமா கனவா
பாவனையா..

வியாழன், 2 அக்டோபர், 2025

வார்த்தைச் சர்ப்பம்

எதிர்பாராமல் தலையெடுக்கும்
வார்த்தைச் சர்ப்பம்
விழுங்கிவிடுகிறது
உறவுகளையும் நட்புகளையும்

செவ்வாய், 2 செப்டம்பர், 2025

அடையாளம்

வார்த்தைகளால் உருவான உலகு
என்னையும் உமிழ்ந்தது.
வாக்கியங்களுக்குள்
சிக்கிக்கொண்ட வார்த்தையாய்
உயிர்மெய் இழந்தேன்.
அடையாளம் தேடியபோது
ஆயுத எழுத்து என
அறிவிக்கப்பட்டேன்,
மழுங்கடிக்கப்பட்டதை மறைத்து.

சனி, 2 ஆகஸ்ட், 2025

பூந்தடம்

பூங்காவை விட்டு வந்தபின்னும்
பாதங்களில்
பூந்தடம்..

புதன், 2 ஜூலை, 2025

குளிர்ச் சுனை

வழக்கம்போல் இல்லை
இன்றைய பகல்

எருமையைப் போல் நகரும் வெய்யில்
குளிர்ச் சுனைக்குள்
ஊறிக் கிடக்கிறது

பறவைகளில் கூச்சல் இல்லாமல்
வாடிக்கிடக்கிறது மாலை

தப்பும் நினைவுகளைக்
கோர்த்துவிடத் துடிக்கிறது இரவு

திங்கள், 2 ஜூன், 2025

காணாமல் போதல்

காணாமல் போகவேண்டுமென்பது
அவளது நெடுநாள் ஆசை.
எங்கிருந்து தொலைவது
எதிலிருந்து தொலைவது
எப்போது தொலைவது
வசதிகள் அவளைத்
தாலாட்டிக் கொண்டிருந்தன.
வெளி உலகம் பற்றிய பெரும் பீதி
அவளைப் பற்றிக் கொண்டிருந்தது.
உடல் நலம் வேறு தன் திட்டப்படி எல்லாம்
அவளை நகர்த்திக் கொண்டிருந்தது
திரும்பிய புறமெல்லாம் சுவர்.
திரை கூடிய ஒருநாள்
எந்த யத்தனமும் இல்லாமலே
தான் யாரென்பது கூட மறந்து
அவள் காணாமல் போயிருந்தாள் 

வெள்ளி, 2 மே, 2025

அஞ்சலி

ஏதோ ஒரு பத்திரிக்கையின்
அஞ்சலியில்
அவள் தன் முகத்தை
நிதானமாகப் பார்த்தாள்
எத்தனையோ முறை
இறந்திருக்கிறாள்
எனினும் இது
உறுதி பூர்வமான அறிவிப்பு.
அவள் நம்பியவர்கள்
துரோகமிழைத்தபோது,
ரகசியமாய்க் காதலித்து
ரகசியமாய் உறவுகொண்டு
அதை அவளறியாமல் உலவவிட்டபோது,
அரவணைத்து
முதுகில் குத்தியபோது,
அலட்சியப்படுத்தி அவமானப்படுத்தியபோது
எனப் பலமுறை நிகழ்ந்திருக்கிறது
அவளது இறப்பு.
யாருமறியாமல் இறந்து உயிர்த்தவள்
நரையோடிய புகைப்படம்
பார்த்துக் கவலை கொண்டாள்,
"இளவயதுப் படம் போட்டிருக்கலாம்"

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

நா தாங்கி

நிசப்தக் கதவில்
உள்பூட்டோ வெளிப்பூட்டோ
நா தாங்கிதான்
கனத்துக் கிடக்கிறது

சனி, 1 மார்ச், 2025

பரிசோதனை

எல்லா வட்டங்களின் சுற்றளவும்
 சுருங்கிக் கொண்டே வருகிறது. 
இறுகிய வளையத்தின் உட்புறம்
 விலக விரும்பாமல் சுருண்டிருக்கிறேன்,
சுயத்தைப் பரிசோதிக்க.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

பிசுக்கு.. பிசகு..

வீச வீசவும் 
ஒட்டிக் கொண்ட பிசுக்கு.
அடையாளங்களற்ற தழும்புகள் 
ஞாபகத்தின் ஸ்பரிசத்தில்.
பிசகென்று புரியும்போது
எண்ணங்களே புதைகுழியாய்.
எல்லாவற்றையும் உதறிவிடலாம்
என்னை என்ன செய்வது
Related Posts Plugin for WordPress, Blogger...