எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 ஜூலை, 2026

மிருகக் காட்சி சாலை

மிருகக் காட்சி சாலை

 

சித்து ஒருநாள் தொலைக்காட்சியில்

மிருகங்களை பாடுவதைப் பார்த்தானே

அப்பா அப்பா இவையெல்லாம்

எங்கே இருக்கெனக் கேட்டானே

 

மிருகக்காட்சி சாலையிலே

இவையெல்லாம் பார்க்கலாமே

என்று தந்தை உரைத்தாரே

அப்பா நானும் பார்க்கணுமே

என்றே சித்து கெஞ்சினானே

 

விடுமுறை நாளில் போகலாமென

அப்பா உறுதி அளித்தாரே.

விடுமுறை நாளும் வந்ததுவே.

அப்பா சித்து அம்மாவும்

தாத்தா பாட்டி மாமாவும்

மிருக காட்சிசாலைக்குச் சென்றனரே

 

நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு

அனைவரும் வரிசையில் நின்றனரே.

இவர்களும் வரிசையாய்ச் செல்லுகையில்

வரிக் குதிரையைப் பார்த்தனரே.

 

இயற்கைச் சூழலில் மிருகங்கள்

இயல்பாய் சுற்றித் திரிந்தனவே.

நாம் கூண்டுக்குள் நடந்து செல்ல

மிருகங்கள் சுதந்திரமாய் உலவினவே.

 

கவரிமானும் புள்ளி மானும்

துள்ளித் துள்ளி ஓடினவே.

வாலில்லா குரங்கும் சிம்பன்சியும்

குட்டி மலைக்குமலை தாவினவே.

மரத்தின் கிளைக்குக் கிளை தாவினவே.

 

லாமாக்களும் ஒட்டகங்களும்

அசை போட்டுக் கிடந்தனவே

ஒட்டகச் சிவிங்கியும் கழுத்தை நீட்டிப்

பச்சிலை கடித்துத் தின்றதுவே.

 

நீர்யானைகளும் முதலைகளும்

தனித்தனித் தொட்டியில் நீந்தினவே.

ஒற்றைக் கொம்புடன் காண்டாமிருகமும்

ஓரத்தில் நின்று பார்த்ததுவே.

 

வால்ரஸ் சீல்கள் மீசை ஆட்டி

வளைந்து வளைந்து குதித்தனவே.

டால்பின் மீன்கள் லாகூனில்

சந்தோஷக் களியாட்டம் போட்டனவே.

 

பஞ்சவர்ணக் கிளிகளும் பலதாரிச் சிட்டுக்களும்

இனிய கானம் இசைத்தனவே.

ஒற்றைக் கண்மூடி ஆந்தை நோக்க

வவ்வாலும் இறக்கை விரித்துப் பறந்ததுவே

 

வகை வகையான பாம்புகள் கூட

மரங்களில் வளைந்து தொங்கினவே

நெளிந்த பாம்பு கண்டு பயந்த சித்துவை

தாத்தா தூக்கிக் கொண்டாரே.

 

இயற்கை சுழற்சிக்கு எல்லா மிருகங்களும்

வாழ வேண்டிய தேவையைச் சொன்னாரே

அறிவியல் உண்மையை அறிந்த சித்து

அச்சப்படுவதை விட்டானே.  

 

மின் சக்தியால் வாய்விரித்து இயங்கிய

டைனோசர் பொம்மைகள் பார்த்தானே
புதரிலும் நீரிலும் எட்டிப் பார்த்து அவை

விதம் விதமாக உறுமினவே

 

தூரத்தில் யானைகள் பிளிரினவே

சிங்கங்கள் புலிகள் உறுமினவே

கூண்டுக்குள்ளே பாதுகாப்பாய் இருக்கிறோமே

பயப்படாதேயென்று பாட்டியும் கையைப் பிடித்தாரே.

 

சிற்றுண்டிக் கடை ஒன்று வந்ததுவே.

சிறு தீனிகளும் பனிக்குழைவும் வாங்கி

சிறுமேடையில் அமர்ந்து உண்டனரே
சித்து அனைத்தையும் ரசித்தானே

 

மிருகங்களுக்கும் பசிக்குமே

உணவளிப்போம் அம்மா எனச் சொன்னானே.

மிருகங்களுக்கு நம் உணவைக்

கொடுப்பது தவறென்று அம்மா உரைத்தாரே.

 

பணியாளர்கள் கொடுக்கும் உணவுதான்

மிருகங்களின் வயிற்றுக்கு ஏற்றவை

என்றே அம்மா அறிவுரைத்தார்

சித்துவும் ஏற்றுக் கொண்டானே.

 

சிம்பன்சி அங்கே வந்ததுவே

கைதட்டிக் கைதட்டிச் சிரித்ததுவே

அனைவரும் கையாட்டிச் சிரித்திடவே

சித்துவும் கையாட்டிச் சிரித்தானே.

 

இயற்கை வெளிச்சம் இயற்கைக் காற்று

இயற்கை மலை இயற்கை மரங்கள்

இவற்றில் அவை வாழ்கின்றன

அரிய உயிரினங்களைப் பாதுகாப்போம்

 

இயற்கை வனத்தைப் பாழ்படுத்தாமல்

இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்

மிருகங்களை நாம் மீட்டெடுப்போம்

வனவாழ்வியலை மீட்டெடுப்போம்

 

ஒருநாள் முழுதும் ஓயாமல் நடந்து

வனஉயிரினங்களின் வாழ்விதனைக் கண்டாரே.
சித்து அனைவருக்கும் நன்றி சொன்னானே

அனைவரும் இல்லம் திரும்பினரே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...