எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 19 நவம்பர், 2019

எனக்கானது

தனிமையின் சூட்டுவெளியில்
கிரிகோர் ஸாம்ஸாபோல்
முடங்கிக் கொள்ள ஏங்கும் மனது
ஒவ்வொரு இரவிலும்
என்னுள் உயிர்க்கும் அவன்
இருளும் மூலையும் தேடி முடங்குகிறான்
இனிச் செய்யவேண்டியது ஒன்றுமில்லை
எல்லா உதாசீனங்களையும் பருகியாயிற்று
எல்லா விரக்திகளையும் துப்பியாயிற்று;
வெய்யில் வந்து சூடுவைக்கும்போது
உயிர்த்தெழ வேண்டியதாகிறது
இன்னும் இருக்கும் நாட்களைக் கடைத்தேற்ற.
இனி இருளும்கூட எனக்கானதில்லை.
  

ஞாயிறு, 17 நவம்பர், 2019

தொடரும்..

முடிந்தும் முடியாத கூந்தலுடன்
பாத்திரங்களுடன் பேசியபடி
துணிகளுடன் உறவாடியபடி
ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு
இன்னொரு அடுப்பங்கரைக்கு
இன்னும் சில உணவுவகைகள் கற்க
மாநிலம் விட்டு மாநிலம்
கண்டம் விட்டுக் கண்டம்
தாவணியிலிருந்து, புடவையிலிருந்து
குளிர்காலக் கால்சராய் கோட்டுக்களோடும்
கற்றுக் கொண்ட பழமையின் கெட்டிப்போடும்
ஓயாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது
தங்கள் பாத்திரங்களோடு அவர்கள் பயணம்..

வியாழன், 14 நவம்பர், 2019

கூர்

சீராக வெட்டப்பட்ட நகங்கள்தான்
தாட்சண்யத்தோடு தட்டச்சித் தட்டச்சி
மழுங்க மழுங்க ராவிக்கொண்டிருக்கின்றன
கூரான கருத்தையும் சுயத்தையும்.

புதன், 13 நவம்பர், 2019

ஆநிரை

குளிரும் மழையும்
ஒன்றன்மேல் ஒன்று
கவிழ்ந்துகொண்டிருக்கின்றன
ஒரு நாற்காலியில் அமர்ந்ததும்
காத்திருந்து சூழத் தொடங்குகின்றன
நம்மையும்.
முற்றுகைக்குட்பட்ட கோட்டைக்குள்
ஆதரவற்ற ஆநிரைகள்போல்
சிலிர்க்கிறது உடல்.

ஞாயிறு, 3 நவம்பர், 2019

அகழி முதலை

வேண்டும்போதெல்லாம்
விரியும் உன் இமைகள்
வேண்டாதபோது
தாழவீழும் கோட்டைக் கதவுகள்..

ஆசைச்சொற்கள் தீண்டுமுன்
மென்று சீரணித்து விடுகிறது
அசட்டையாய்த் திரும்பிச் செல்லும்
உன்பின் நழுவிவிழும் அகழி முதலை

  
Related Posts Plugin for WordPress, Blogger...