எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 26 செப்டம்பர், 2018

கதகதப்பு.

எப்போது வருகின்றன
எப்போது செல்கின்றன
குரலற்ற புறாக்கள்

பால்கனித் தொற்றில்
எச்சங்கள் இல்லை

படபடக்கும் இறக்கைகள்
சிறுகணம் ஒலிக்கும்.

ஜன்னல் விளிம்பில்
கீறல் படாமல்
காற்றுப் பைகளால் செல்லத் தட்டு.

கண்ணுள் வீழாமல்
கவனம் காக்கின்றன.

கதகதப்பை மட்டும் கசியவிட்டு
கதவோரம் சுற்றிக்கொண்டிருக்கின்றன
சில மென் இறகுகள்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

கொள்ளளவு.

காட்டாறாய் வழிந்து
கொண்டிருக்கிறது
மேல்நிலைத் தொட்டி.

அருவி நீரெனக்
குளியலாடிக் கொண்டிருக்கின்றன
குருவிகள்.

தலையைச் சிலுப்பி
உதறும் துளிகளில்
மிதந்துகொண்டிருக்கிறது
நடைபோட்டுக் கொண்டிருந்த எறும்பு.

நின்று சொட்டும் நீருக்குச்
சாதகப் பட்சியாய்
வாய்விரித்துக் காத்திருக்கின்றன
சில புறாக்கள்.
  

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

குழப்ப மொட்டு.

தினம் பொழிகிறது மழை
குளிரில் நடுங்குகிறது
பால்கனிச் செடி.

சூரியனின் வெப்பமும்
நிலவின் தட்பமும் கூட
தோராய வீதத்தில்.

மும்மாரி தினமாரியானதில்
அணுங்குவதில்லை என்றாலும்
அணுக்கப் பயத்தில்.

காற்றும் மழையும்
கைகோர்த்துப் பிடித்திருக்கின்றன
பூவாடும் கிளையை.

எத்தனையோ தினம் பூத்திருக்க
குழப்ப மொட்டும் பூவானதை
கிளைவிரித்துப் பார்க்கிறது செடி.
  

திங்கள், 17 செப்டம்பர், 2018

கர்மம் தொலையாமல்..

பசியெடுத்துப் பிய்க்கும்
வல்லூறுகளின் பிடியில்
அங்கம் கிழிந்தபடி
மரணாவஸ்தையில் எலி.

தண்ணீர்த் தொட்டியின்மேல்
தாகவிடாய் தீராமல் குதற
பொங்கி வழியும் தண்ணீரோடு
எலியின் ரத்தமும் சிறுநீரும்.

நீரிருந்தும் கர்மம் தொலையாமல்
புண்ணியாசனமும்
தர்ப்பணமும் ஒருங்கே
செய்து கொண்டிருக்கிறது தொட்டி.

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

கடந்து செல்லும்..

மைல்கற்களுக்குக்
காவலாய் நின்றிருக்கின்றன
சாலையோர மரங்கள்.

உச்சாணிக் கம்பியில்
உரையாடிக் கொண்டிருக்கின்றன
மஞ்சள் இமை மைனாக்கள்.

கடந்துசெல்லும்
ஒவ்வொரு பாலத்தையும்
கடகடத்து அறிவிக்கிறது ரயில்

இன்று நாளை இன்று நாளை
இருப்பும் மறைவும்
லப்டப்பிட்டு உயிர்க்கிறது இதயம்

இருத்தலின் சுயகம்பீரம்
தானே பெற்றுவிடுகின்றன
தினம் மலரும் பூக்கள்.
  

சிற்றம்பு.

வெய்யில் காய்கிறது
பாறைத் திட்பம்.
சாரலும் தூறலும்
சிற்றம்பு எய்கின்றன.
வழுமையும் கொழுமையும்
வடிந்துகொண்டிருக்க
நீர் உளியிலிருந்து
புறப்படுகிறது புதுச்சிற்பம்.

  

வியாழன், 6 செப்டம்பர், 2018

கரைதல்.

குந்தித் தின்றால்
குன்றும் கரையுமாம்
குந்தித்தான் தின்கின்றன
குருவியும் காக்கையும்
தாங்கள் கரைந்தபடி..
  

திங்கள், 3 செப்டம்பர், 2018

உடன் போகும் காலம் வரை..

மஞ்சள் மோகம்
முகிழ்த்தெழ
சிந்தூர நெற்றியும்
சிவப்போவியக் கரங்களும்
மெட்டி விரல்களும்
சன்னஞ்சன்னமாய்
ஓவியம் வரைகின்றன.

சிறுபொழுதும் பெரும்பொழுதும்
சிறுமூச்சும் பெருமூச்சும்
கலந்துகட்டி
பனிபூக்கப் பனிபூக்கச்
சூரியனும் சந்திரனுமாய்ப்
பிரசவிக்கின்றன.

நரையோடித்
திரையோடியபோதும்
மோகம் முப்பதும்
ஆசை அறுபதுமாம்.
பிடித்த பிரதிமையின்
தீராப் ப்ரேமைக்கு
நாட்காட்டி உரிக்கும் தாள்கள்
நலங்கூறும் பூங்கொத்தாம்.

மங்கலமும் மனையறமும்
மனமாட்சியும் பொலியும் மனம்
அபத்தங்கள் நிகழ்ந்தாலும்
அபவாதம் வந்தாலும்
அயர்ந்தும் போவதில்லை
துயர்ந்தும் போவதில்லை
உயிர் பிணைந்து முன்னிற்கும்
உடன்போகும் காலம் வரை.

  
Related Posts Plugin for WordPress, Blogger...