எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 மார்ச், 2020

மேகமாய்..

நிழலற்றுப் பறந்துவரும் அவள்
நிஜமற்றுக் கலைந்து கொண்டிருக்கிறாள்.
பறவைகளாய் சில விமானங்கள்
கொக்குகளாய் சில கப்பல்கள்
மரங்களாய் சில கட்டிடங்கள்
அசைவற்றுக் கிடக்கின்றன.
உயிரும் மெய்யுமாய் சொற்களுக்குள்
ஊமையாகிப் போனார்கள் மனிதர்கள்.
சித்திரமாய் உறைந்திருக்கிறது பூமி
சூரியன் புகைந்து கொண்டிருக்க
மேகமாய்ப் பிரிந்து கொண்டிருக்கிறாள் அவள்

  

திங்கள், 23 மார்ச், 2020

பங்கு

தவளைகளை பாம்புகளை
கோழிகளை பன்றிகளை
வௌவால்களை கொன்று அழிக்கிறோம்
கண்ணி அறுபடாமல் அவை
தம் பங்குக்கு வைரஸ்களை
அனுப்பிக் கொண்டிருக்கின்றன

  

செவ்வாய், 10 மார்ச், 2020

ஆலவட்டமிடும் ஒளிவட்டம்.

நிம்மதியாக சிறிது நேரம் உறங்குங்கள்
அசைபோட்டு ஆசையுடன் உணவருந்துங்கள்
ஜன்னலோரம் அமர்ந்து நீர்கொத்தும் புறாக்களுடன்
ஆவிபறக்கும் காஃபியைக் குடியுங்கள்
அலமாரியில் அடைத்திருக்கும் உடைகளை
உடுத்துங்கள் அல்லது கொடுத்துவிடுங்கள்
சுற்றமுடிந்த இடங்களுக்குப் போங்கள்
எழுத நினைத்தவற்றை எழுதி விடுங்கள்
பேச முடிந்தவருடன் பேசுங்கள்
விரும்பாத எதனிடமிருந்தும் விலகியிருங்கள்
உங்களை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள்
இறுக்கம் தவிர்த்து வாய்விட்டுச் சிரியுங்கள்
ஒளிவட்டம் உள்ளிருந்தே ஆலவட்டமிடும்.

வியாழன், 5 மார்ச், 2020

மிதக்கும் பருவம்.

நடக்கும் பருவங்களில் இருந்து
மிதக்கும் பருவத்திற்கு நகர்த்தியது
பதின்மம்.

தவழ்ந்த பருவங்களில் இருந்து
குன்னிய நடைக்குப் பழக்குகிறது
முதுமை.

நிமிர்ந்த பருவங்களும்
திமிர்ந்த பருவங்களும் கடக்கின்றன
மின்னலாய்.

புகைப்படத் துளிர்க்கரங்கள்
கண்களோடனைத்தையும் சுருக்குகின்றன
மீன்செதில் மினுக்கலாய்.

  
Related Posts Plugin for WordPress, Blogger...