எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 26 நவம்பர், 2018

கனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை )

கனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை )

பகல் வெளியில்
அகல் விளக்கேந்தி
மனிதனைத் தேடிய
அறிஞனைப் போல்
முழுநிலா முற்றத்தில்
புதியதொரு சமுதாயம்தனைத்
தேடுகிறார்கள் – புதியவர்கள் !.

காற்று கையசைக்க,
மலை முகட்டில்
தவழ்ந்துபோகும்
மேக ஊர்வலங்கள்.!

கற்பனை கட்டவிழ்க்க,
எண்ணங்களில் முகிழ்க்கும்
கனவுகளின் ஊர்வலங்கள் !

0     0    0    0

கனவுகள் :-

வானமும் பூமியும்
உரசிக் கொள்ளும்
தொடுவானமாய்,

நிழலும் நிஜமும்
தொட்டுக் கொள்ளும்

பொய்க் கோபம் !

0 0

காப்பியம் முதல்
திரைப்பட காதற்
காட்சி ஈறாய்
கனவுகளே முன் நிற்கும். !

கனவில் கண்டே
துணையினை அடைந்ததாய்
காப்பியம் சொல்லும். !

இன்றில் நிகழ்வில்
இதுவா செல்லும் ?

விழிகளில் மின்னல் வெட்டி,
மனசுக்குள்
மழை பொழிந்ததென்பார்.
மொழிகளெலாம்
செந்தமிழ் கவியென்பார் !

இதயத்துள்
கல்யாணக் கனவுகள் தெளிப்பார்.!

திருமணமெனில்
திசைமாறிப் போவார். !

கனவில் கண்டே
துணையினை அடைந்ததாய்
காப்பியம் சொல்லும் !

இன்றின் நிகழ்வில்
இதுவா செல்லும் !

0    0

மாங்கல்யம் ஏறுமென
மங்கலக் கனவுகளில்
எங்கள் தேசப் பெண்கள் !

ஆனால்..

குறைந்த விலைக்கு
எந்த மாப்பிள்ளையும் கிடைப்பதில்லை !

தேர்தல்களில்
சரித்திரங்களை மாற்றுகிற
இந்தத் தாய்க்குலங்களின்
சரித்திரத்தை மாற்றுவது யார் ?

நேசிக்கும் நெஞ்சினை
வாசிப்போம் –
வாழ்க்கை நம் கையில்!

0 0

திருவோட்டில் முட்டையேந்தி
பகற்கனவு கண்ட
பிச்சைக்காரனைப் போல்

வாங்கிய பட்டங்களைத்
தாங்கியபடி
வேலை தேடி ஊர்வலம் போகும்
இளைய தலைமுறையின்
ஊமைக் கனவுகள்!

உதவாத பட்டம் தர
ஊருக்கொரு கல்லூரி வேண்டாம்
ஆளுக்கொரு வேலை தர
ஆலைகளே பெருகிடல் வேண்டும். !

0 0

கேள்விக் குறியாய்
பிறை நிலவாய்
வயல் வெளியில்
வளைந்து நிற்கும்
மனிதர்கள் !

வெளிச்சக் கனவுகளை
விழிகளில் தேக்கிய
கறுப்பு உருவங்கள். !

விளைநெல்
நிலம் நோக்கித்
தலை சாய்க்கும். !

இவர்கள் நிலை கண்டு
தலை சாய்ந்த செங்கதிரும்
கண்ணீராய் மணி நெல்லை
மண் மடியில் சிந்தும். !

உடல் முழுதும்
வியர்வை முத்துச் சுமந்த
இவர்களின் கனவுகள் யாவும்
கானற் கனவுகள் !

0 0

செய்தித்தாள்களில்
எண்களைப் பார்க்கும் வரை
அவனுக்குள்
ஆயிரமாயிரம் கனவுகள். !

பரிசு இல்லையெனினும்
தினம் தினம்
அரும்பி அழிந்து
முளைத்துத் தழைத்துப்
பூக்கும் நம்பிக்கை !

0 0

வெற்றி இலக்கினை நோக்கி
வீறுநடை போடும்
போராளியின் இலட்சியக் கனவுகள் !

வாழ்க்கையை மறந்து
வாலிப வயதில்
ஆயுதமேந்திய இவர்களின்
கனவுகள் ஊர்வலம் போவது
தூக்கத்தில் அல்ல
துக்கத்தில் !

இந்தக் கனவுகள்
சுகமானவையல்ல
சுமையானவை.  !

0 0

நிலத்திலிருந்த அனுராதாவை
வான வெளியில்
நீந்த விட்ட
விந்தைக் கனவுகள் !

அம்மானைப் பாட்டியாயிருந்து
அம்புலியை
மனிதன் காலால்
எட்டி உதைத்தது –
விஞ்ஞான சாதனை !

0 0

நீள்வெளி வானமதை
வெளிப்பதாய்
கனவு காணும் வெண்ணிலா !

பாவம் :
தன் முகம் முழுதும்
இருள் கவிந்து
காணாமற் போகும் !

மீண்டும் வளர்ந்து
தேய்ந்து..
முடிவுறா
ஒரு வர்க்கப் போராட்டம். !

0 0

இனியோரே!

கனவுகள் காணக்கூட
கண்ணிமைகளை மூடாதீர் !

விழிகள் கூட
காணாமல் போகும்
விந்தை தேசமிது !

0 0

திடமான கனவுகள்
தீர்க்கமானவை
தீர்க்க தரிசனமானவை !

மோனக் கனவுகளில்
மூழ்கிக் கிடக்கும் சமூகத்தின்
விழிகளைத் திறப்போம். !

புதிய தலைமுறைக்கு
நற்பாதை சமைப்போம் !

ஞாலம் முழுதும்
நம்பிக்கை விதைகளை நடுவோம் !

கால வெள்ளத்தில்
காய்ந்த விதைகளும்
முளை விடும் !

விதை முளைகள்
வெடிக்கையில் –
பூமியும் காயம்படும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...