எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 ஆகஸ்ட், 2014

மஞ்சள் வெளி.

தங்க நிற வெளிச்சம்
தூவுகிறது சாலை.
சிவப்பில் நிறுத்தப்பட்ட
வாகனம் காத்திருக்கிறது
பச்சையின் ஆமோதிப்புக்காய்.
சீறலாய்ப் பச்சை உமிழ்ந்து
நேர்க்கோடாய்க் காட்டுகிறது
பயணத்தின் பாதையை.
திசை தெரிந்தும்
விசை மீறிப்பறக்கிறது
கைமீறிப்போன வண்டி.
பக்கத்து வண்டிகளைப்
பக்கத்துணையெனக்
கற்பிதம்கொண்டு
ஒளியின் வழிகாட்டலில்
கட கடப்புடன்
ஒவ்வொரு மஞ்சள் வெளியிலும்
காத்திருந்து பெருமூச்சுடன்
அடைகிறது தனக்கான இடத்தை.

புதன், 20 ஆகஸ்ட், 2014

இரைச்சல் :-

இரைச்சல் :-

பாத்ரூம் பக்கெட்டில்
முழு வேகத்தோடு
நீர் விழும்போதெல்லாம்
வீணாகும் அருவிச்சத்தமாய்
இரைச்சலிடுகிறது மனது

 

பிரிவு



பிரிவு
=========
’இழத்தல்’ என்பது
யார்க்குள்ளும் ஏற்படலாம்.
உனக்குள்ளும்
எனக்குள்ளும்
பிரிவின் தரிசனங்கள் கூட
எதிர்படக் கூடாது.


திங்கள், 18 ஆகஸ்ட், 2014

அமைதி



அமைதி
==========
குரங்கு பிய்த்த பூ
சிதறிக் கிடக்கும்..
விளக்கின் பிடறிக்குப் பின்னால்
பல்லியாய் இருக்கும். 

வெளிச்சப் பாதுகை பார்த்துத்
தாமரை அகலிகைக் கல்லாய்
கிடக்கும். 

கிளைகள் இலையோடு
பிணைந்து உதிர்ந்து போகும்


திங்கள், 11 ஆகஸ்ட், 2014

நண்பனே…



நண்பனே…
=============
நண்பனே!
கடவுள் பறவைகளுக்குச்
சிறகைக் கொடுத்துக்
கூண்டையும் காண்பித்தார்.

நீ சிறகைப் பயன்படுத்தியது
இரை தேட மட்டுமல்ல..
பறந்து மகிழவும்தான்.!

ப்ரிய நண்பா
கூண்டுடைத்து
இன்னும் சிறகு சேர்த்துச்
சீக்கிரம் பறந்து அருகு வா.!


வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

மருதாணி



மருதாணி
==============
எனக்குள்ளேயும்
வேர் பரப்பிக்
கப்பு வெடித்துப்
பூச் சொரியும்
பய மரங்கள் பிரஸவிக்கும்.

கையிலும் காலிலும்
பச்சையாய்க் கருத்தரித்துச்
சிவப்பாய் உமிழும் உன்னை
உதிர்க்கவே மனசில்லை.

நீ குடியிருந்தது
என் வீட்டின்
வடக்கு மூலையில். 
மனசின் வசந்த மூலையில்.

உன்னின்
முட்களின் தலைவணக்கங்கள்
எனக்கு மட்டுமே சமர்ப்பிக்கப்படுகிறபோது
அடிவயிற்றின் பயச்செடிகள்
“ உன்னை யாரிடமும்
உதிர்த்து விடுவாயோவெனக்
கிளை வெடிக்கும்.” 

உன் மிருதுத் துகள்கள்
உள்ளங்கையை வருடிக் கொடுக்கிறபோது
எனக்குள்ளே ஒரு குளிர்ச்சி இரத்தம் செலுத்தும்போது
வெளிச்சப் பாதுகை தடம் பதிக்கும்போது
உன்னின் இந்தப்பணிவிடைகள்
தெருவோரப் பொறுக்கிகளிடம்
செயலாற்றுமோவென்று
பயக்கிளை பரப்பும்.


சனி, 2 ஆகஸ்ட், 2014

எதிர்பார்ப்பு



எதிர்பார்ப்பு
==============
என்னைச் சுற்றிலும்
மரங்கள் 

எனக்குள்ளோ
யுகத்தவிப்பு.. 

விநாடி முட்கள்
உயிரைக் கிழித்துக்கொண்டு 
நகரும். 

கட்டிடங்களையும்
காக எச்சங்களையும் பார்த்து
மனம் எரிச்சல் பூசும்.


Related Posts Plugin for WordPress, Blogger...