எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 26 ஏப்ரல், 2014

நரம்பதிர்ந்து தெறித்த இரவு.

நரம்பதிரும் இசையோடு
கடக்கிறது மகிழுந்து.
ஊளையிட மறந்து நாய்கள்.
ஓசையில் அதிரும் ஜன்னல்கள்.
தளர்ச்சியாய்க் கிடக்கிறது சாலை
நரம்பறுந்து தெறித்த இரவின்மேல்..

சனி, 19 ஏப்ரல், 2014

தழும்புகளோடு பாதை.

அற்றும் அறாமலும் 
பற்றும் பற்றாமலும் 
தொங்கிக்கொண்டிருக்கிறது 
நீர்த்திரை. 
திரையைக் கலைத்துக் கலைத்து 
விளையாடுகிறது காற்று. 
காய்ந்த தடமாய்க் கிடக்கிறது 
தழும்புகளோடு பாதை. 
ஒற்றை மழை புதுப்பிக்கிறது 
பூமியின் ஈரத்தை. 
மலையின் முலை சுரந்து 
பொழியத்துவங்குகிறது அருவி. 
குருவிகள் கொத்தியது போக 
சாளக்கிராமங்களை உருட்டியபடி 
இறங்குகிறது நீர்ப் படுதா.. 
கலைக்க ஏலாமல் வேடிக்கையாய்க் 
கிளைத் தும்பிக்கையை நீட்டி 
நீருஞ்சித் தலையசைக்கின்றன விருட்சங்கள்.. 
கல்லாய்க் கிடப்பதா, 
கிளையாய் நீள்வதா,, 
நீரருவியாய்ப் பொழிவதாவென யோசித்துக் 
காற்றாய்க் கடக்கிறேன்..

திங்கள், 14 ஏப்ரல், 2014

காற்றுப் பேருந்து..

கிளம்பும்போதோ
மிதக்கும்போதோ
இறங்கும்போதோ
உராய்ந்து சிதறுமோ
நெருப்புப்பிடித்தெரியுமோ
நீரில் மூழ்குமோ
மலையில் மோதுமோ
திசை தப்பிப் போகுமோ
கடத்தப்படுமோவென
நூற்றைம்பதுச் சொச்சம்
உயிர்களோடு பறந்தாலும்
இனமற்ற பயம் உருள்வதைத்
தவிர்க்க முடிவதில்லை..
ஒவ்வொரு முறையும்
காற்றுப் பேருந்தில்
கால் வைக்கும் தருணத்தில்...

சனி, 12 ஏப்ரல், 2014

பாதரசப் புறாக்கள்.

கனரக வாகனங்கள்
மேலும் கீழும் தேய்த்தபடி நகர
மேம்பாலத்துக்கும்
தாங்கும் தூணுக்கும்
இடைப்பட்ட வெளியில்
இருள் பூசிய சாம்பல் வண்ணத்தில்
குளிரை உரசிக் கொண்டிருக்கின்றன
பாதரசக் கண் மின்ன மணிப்புறாக்கள்.

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

பூனை மீசை.

வற்றத் தொடங்கும் கன்னங்களும்
மெலிந்து நீளும் உடலுமாய்
சத்தமில்லாமல் வாய் திறந்து பயங்காட்டி
புலியாய் அறிவிக்கத்  தலைப்படும்போது
மீசை முளைக்கத் தொடங்குகின்றது
வயதான பூனைகளுக்கு..
Related Posts Plugin for WordPress, Blogger...