எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 28 டிசம்பர், 2013

உணர்வுகள் தொடர்கதை.

எப்போதெல்லாம் சந்திக்கிறோமோ
அப்போதெல்லாம் அது முன்பே
நிகழ்ந்துவிட்டதைப் போன்றிருக்கிறது.
முகமன்கள் கூறிக் கொள்கிறோம்.
கை குலுக்கிக் கொள்கிறோம்.
உணவு அருந்துகிறோம்.
பேசியவற்றையே பேசுகிறோம்.
முன்பு பேசியதன் நுனிதொட்ட
களைப்பை உணர்கிறோம்.
காபியின் வாசனையோடு பிரிகிறோம்.
எப்போது சந்திப்போமெனத் தெரியாமல்..
தற்காலிகப் பிரிவா,
நிரந்தரமாவென நிர்ணயிக்காமல்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
சந்திப்பும் பிரிவும்.
உணர்வுகள் மாறுவதில்லை..
ஆட்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள்....

வெள்ளி, 20 டிசம்பர், 2013

இணையின் துணை

ஒவ்வொரு நாளையும்
துகிலுரிக்கிறது நாட்காட்டி.
உரிக்க உரிக்க வெங்காயம் போல
ஒன்றுமில்லாமல் போகிறது வாழ்க்கை.
ஒரு ரயில் பிரயாணத்தில்
சந்திப்பதாய் நகர்கிறது இணையின் துணை.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கு நோக்கிப்
பயணிக்கிறது புகையிரதம்.
விடியத் துவங்குகிறது
சந்தியாகாலத்திலிருந்து தொடர்ந்த இருட்டு.

வெள்ளி, 13 டிசம்பர், 2013

நிமிர்தல்.

முதலெது முடிவெது
தவிக்கிறது அன்னம்.

வராகம் முயல
தாழையுதிர்ந்து
தண்ணீர் தள்ளிப்
பாலுன்னும் அன்னத்தைப்
பொய்ப்பிக்கிறது.

 தேடலில் களைக்கும்
வராகம் நிமிர்ந்தமர்கிறது
உண்மைச் சிம்மாசனத்தில்.

வெள்ளி, 6 டிசம்பர், 2013

துயில்



நட்சத்திரப் பூக்கள் தூவிய

இரவுப் பாயில்

நிலவுத் தலையணையில்

புரண்டு படுத்துத்

துயில்கிறது மேகம்.

Related Posts Plugin for WordPress, Blogger...