எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 16 ஜூலை, 2013

பதினெண் கவிதைகள்.

குருதிக்கணவாய்கள்
வறண்டு கிடக்கின்றன
நெருப்புமிழ்ந்து..
வந்தேறிகளை வெளியேற்றி..

*******************************

விளக்கு வைக்க வந்தவள்
விறகாகிறாள்
வரதட்சணை  நெருப்பில்.

*********************************

சிப்பிகளும் சங்குகளும்
மண்புதைய நடைபயில
நண்டுகள் நீர்துரத்த
வளை ஒளியும்.

************************************

நீ பேசுவதை நிறுத்திவிட்டாய்
நிறுத்த முடியாத
நடன மயக்கத்தில் நான்

***********************************

உன்னுள் விதையாய் விழுந்து
முளைத்தெழுந்து
பின்னும் விதையாய் உன்னுள்
 
************************************
 
போதவில்லை
திட்டியது எல்லாம்
இன்னும் கொஞ்சம் திட்டு
அதிக போதைக்காய்.
 
*************************************
 
ராஜபிளவை
புறமுதுகிட்டதால் அல்ல
உன் பார்வை தைத்ததால்..
 
*********************************
 
ஆண்மையின்மை துயரமில்லை
ஆண்மையில் பெண்மை
பூத்துக் கிடப்பதுதான்
சப்பாத்திக் கள்ளிப் பூவின்
துயரச் சிரிப்பாய்.

************************************

உப்புமழை பொழிகிறாய்
நிறுத்து.
அமிலக்கண்ணீர் அரிக்கிறது மனம் .
 
************************************

 தோட்டத்து மரங்களுக்கு
இலைச் சிறகு முளைத்து
சலசலத்து பறக்கின்றன..
 
 *************************************

அழகுடைமை என்ற
அதிகாரம் படைக்கப்படவில்லை
அரிதாரம் அற்ற காலத்தில்..

**************************************

ஆரிக்கிளும் வெண்ட்ரிக்கிளும்
பட்டாம் பூச்சியானது
உன் பார்வையில்..

*******************************

நோய் என்ற அனுபவம்
உட்புகுந்தது என்னுள்
மண்புழுவாய்த் தின்று
துப்பியது என்னைப் பக்குவமாக்கி.

************************************

வால்களைச் சாமரமாக்கி
நன்றி அறிவிப்புச் செய்கின்றன
வளர்ப்பு நாய்கள்
எஜமானரின் வருகையில். 
 
***********************************


உணவை மாத்திரைகளாய்
எண்ணி உண்ணும் இளைப்பவர்கள்
மாத்திரைகளை உணவாக உண்டு.

*************************************
 
ஒற்றை வாசலில்
தொடங்கும் பயணம்
பல வாசல்கள் கடந்து
இறுதி இன்னொரு வாசல் வழி.
மூடிய கதவுடன்.
 ************************************
 
மழை ரேகைகள்
சுவரை அணைத்துப்
பாசம் வரைகின்றன.
 
************************************
 
ஆசையாய்க் கட்டிய வீட்டை
விற்று வந்தோம் லாபத்துக்கு
மகனின் குழந்தமைக்கரங்களின்
க்ரேயான் ஓவியங்களை
சுவற்றை விட்டு எடுக்க ஏலாமல் .

 

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்க வைத்தன பதினெண் கவிதைகள்... வாழ்த்துக்கள் சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...