எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 10 ஏப்ரல், 2023

பெருக்கம்

மஞ்சளும் சந்தனமும்
கொட்டிக்கிடக்கிறது
சொல்கேட்ட கல்யாண விநாயகர் சந்நிதியில்.

பரிட்சை வேண்டுதல்களை ஏற்று
வேல்கொண்டு வினைதீர்க்கக் காத்திருக்கிறார்
நெல்லி மரத்து விநாயகர்

திருமண பந்தத்தில் தானும் மாட்டாமல்
மாட்ட விரும்பாதவரையும் ரட்சித்து
ராம ராம என்கிறார் ஆஞ்சநேயர்

எல்லாரும் எம்மக்கள்தான்
என்கிறாள் சூலத்தோடு அமர்ந்திருக்கும்
காளியம்மா. 

சுற்றி வருகையில் நூறாண்டுகளாய்க்
கொட்டிக்கிடந்த நெல்லி இலைகளும்
சிறுமுட்களும் நெருடுகின்றன பாதத்தை.

கோவில்களுக்குப் பின்
தகரப் பாதுகாப்பில் மறைந்திருக்கிறது
தாமரைக் குளம்

சுற்றிலும் பனையடிக் கருப்பர், 
பதினெட்டாம்படிக் கருப்பர், 108 பிள்ளையாருடன்
புதிதாய் எழுந்தருளி இருக்கிறார் யோக சனீஸ்வரர்.

எங்கள் ஐயாவின் காலத்திலிருந்து
நாங்கள் பல்கிப்பெருகியதைப் போல் 
நெல்லி மரத்தாரும் தன் படை பட்டாளத்தைப் பெருக்கியிருக்கிறார்.

ஐயா உம் அணிவகுப்பு அருமைதான், பெருமைதானெனத்
தினம் வரும் சூரியனோடு சிலாகித்துச்
சுற்றி வந்து மகிழ்ந்து நிறைகிறோம் நாமும். 

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

கண்ணேறு

மஞ்சள் துகில் சரிகிறது
குட்டிச் சூரியன் எட்டிப்பார்க்க
துருவன் திருஷ்டிப் பொட்டிடுகிறான்.

மரங்கள் சாமரம் வீச
பறவைகள் கானம் இசைக்கின்றன
தவழும் சூரியன் ஏந்தி உருள்கிறது பூமி

மேகம்,மலை, மழையில் எல்லாம் சவாரி
வானவில்லிலும் கூட வழுக்கி இறங்குகிறான் சூரியன்
நீர்ச் சாரல்களை வழித்து முகம் துடைக்கிறது காற்று. 

செம்மாந்து நிற்கிறது வானம்
செங்காந்தள் விரல்களால் சூரியனை ஏந்தி
ஆரத்திசுற்றிக் கண்ணேறு கழிக்கிறது இரவு.



Related Posts Plugin for WordPress, Blogger...